மொழிமாதிரி5 கொஞ்சம் புது மாதிரி

செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு அதிகரித்துக் கொண்டிருக்கும் வேளையில், அதன் பதிப்புகளை மேம்படுத்தும் பணியில் தொழில்நுட்ப நிறுவனங்களும் ஆர்வம் காட்டி வருகின்றன. அந்த வகையில் ஓபன்ஏஐ நிறுவனம் அண்மையில் சில மேம்பாடுகளை கொண்டுவந்துள்ளது.

செயற்கை நுண்ணறிவு சேவையை வழங்கும் ஓபன்ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி மொழி மாதிரி, உலக அளவில் 400 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதன் செயலியை, 13.7 விழுக்காடு பதிவிறக்கி இந்தியா முன்னிலையில் இருப்பதாக ஓர் அறிக்கை கூறுகிறது. திறன்பேசி பயன்பாடு மூலம் மட்டும் 2025-ம் ஆண்டில், உலக அளவில் இதுவரை 1.35 பில்லியன் டாலருக்கும் அதிகமான வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

இதன் மூலம் செயற்கை நுண்ணறிவின் போட்டியில் முன்னணியில் இருக்கும் ஓபன்ஏஐ நிறுவனம், கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி, புதிய பதிப்பான ஜிபிடி 5-ஐ வெளியிட்டுள்ளது. இந்தப் பதிப்பு, செயற்கை நுண்ணறிவு வெறும் கருவியாக இல்லாமல், மனிதர்களின் சிந்தனைக்கும், படைப்பாற்றலுக்கும் ஒரு புதிய பரிமாணத்தை அளிக்கும் என்று கூறப்படுகிறது. இதையேதான் முந்தைய பதிப்புகளும் செய்தன. ஆனால், ஜிபிடி 4 என்று அழைக்கப்படும் முந்தைய பதிப்பு, ஒரு கல்லூரி மாணவனின் அறிவுடன் செயல்பட்டதாகவும், தற்போதைய ஜிபிடி 5, முனைவர் பட்டதாரியின் சிந்தனைத் திறனைக் கொண்டிருப்பதாகவும் வல்லுநர்கள் விவரிக்கின்றனர். 

மேலும், ஜிபிடி 4, சிக்கலான கேள்விகளுக்குப் பெரும்பாலும் நேரிடையாகப் பதிலளிக்கும். ஆனால், ஜிபிடி 5, ஆழமான தர்க்கரீதியான சிந்தனையுடன், ஒரு சிக்கலை படிப்படியாகப் பிரித்து, துல்லியமான தீர்வை வழங்கும் எனக் கூறப்படுகிறது. இதன் வேகம் முந்தையதை விடப் பல மடங்கு அதிகம். நிரலாக்கம் (coding) போன்ற பல்வேறு படைப்பு சார்ந்த பணிகளில் புதிய மாடல், முன்பைவிடவும் மிகத் துல்லியமாகவும், நம்பகத்தன்மையுடனும் செயல்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சிக்கலான குறியீடுகளை எழுதுவது, பெரிய நிறுவனங்களுக்கான திட்டங்களை வகுப்பது, புதிய மருத்துவ ஆராய்ச்சிகளைப் புரிந்துகொள்வது போன்ற பணிகளில் திறமையான வகையில் உதவும் என்று கூறப்படுகிறது. மென்பொருள் வடிவமைப்போருக்கு ஜிபிடி 5, குறியீட்டு உதவியாளராகவும், ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு நுண்ணறிவுத் துணையாகவும் செயல்படும். இதன்மூலம் பயனர்களின் பணித்திறன் கனிசமாக உயரும் என்றும் குறிப்பிடப்படுகிறது.

இப்படிப் புதிய மாதிரியின் நன்மைகள் அடுக்கப்படும் அதே வேளையில், பயனர்களிடமிருந்து கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதிலும் குறிப்பாக, சில பயனர்கள், புதிய ஜிபிடி 5-ன் பதிலளிக்கும் குணம், முந்தைய ஜிபிடி மாதிரிகளை விட ‘குறைந்த’ நட்புடனும் மிக நேரடியான அணுகுமுறையுடனும் இருப்பதாகக் கருதுகின்றனர். அதாவது, பயனர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போது ஒரு மனிதனிடம் பேசுவதைப் போன்ற இயல்பான, இனிமையான தொனியை முந்தய பதிப்புகள் கொண்டிருந்தன. அவை உணர்ச்சிகளைப் புரிந்துகொள்வது போலவும், நீண்ட, விளக்கமான பதில்களைக் கொடுப்பதன் மூலம் ஓர் ஆலோசனையாளர் போலவும் செயல்பட்டன. ஆனால், ஜிபிடி 5, தனது மேம்பட்ட வேகம்,  தர்க்கரீதியான சிந்தனையை மையமாகக் கொண்டு இயங்குவதால், ஒரு கேள்விக்கு நேரடியாக, சுருக்கமாகவும், துல்லியமாகவும் பதில் அளிக்கவே முயல்கிறது. இதனால், பயனர்கள் அதை உணர்ச்சியற்றதாகவும், முரட்டுத்தனமானதாகவும் கருதுகின்றனர். செயற்கை நுண்ணறிவின் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே என்பதைக் கடந்து, பயனர்கள் தங்களுடன் உணர்வுப்பூர்வமான தொடர்பு இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை, புதிய மாதிரி நிறைவேற்றுவதில்லை என்று கூறப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்ட ஓபன்ஏஐ நிறுவனம், அவ்வாறு கருதும் பயனர்கள், பழைய மாதிரிகளுடன் தொடரும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. 

  • விவேக்பாரதி

சாட்ஜிபிடி 5 அறிமுகக் காணொளி

சாட்ஜிபிடி 5 – புதிய மேம்படுத்தல்கள்

சாட்ஜிபிடி 5 – பயனர்களின் விமர்சனம்

Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now