ஒளிர் விளக்கில் மாற்றம்

மின்சாரம் தடைபட்டா​லோ, வெளிச்சம் குறைவான இடங்களில் ஏதாவது தேடும் போதோ, நமது கரங்கள் தானாகவே திறன்பேசியின் ஒளிர் விளக்கிடம் (Flash light) சென்றுவிடும். அந்த ஒளிர் விளக்கை சொடுக்கி தேவையான அனைத்து வேலைகளை​யும் செய்துகொள்கிறோம். அனைத்து திறன்பேசிகளிலுமே இந்த அம்சம் இருக்கிறது.

இதனுடைய வெளிச்சத்தின் அளவை மாற்றி அமைத்துக்கொள்ளும் அம்சம் சில திறன்பேசிகளில் மட்டுமே இருக்கிறது. அதிலும், உடனடி அணுகலை வழங்கும் விரைவு அமைப்பு பட்டையில் (Quick settings panel) இது இல்லாமல் இருந்தது. கூகுளின் ஆண்டிராய்டு கேனரி வெளியீட்டில் இது பிக்சல் திறன்பேசிகளில் சேர்க்கப்பட்டிருக்கிறது. பிக்சல் திறன்பேசி பயனர்கள் இனிமேல் ஒளிர் விளக்கின் வெளிச்சத்தை எளிதாக, விரைவு அமைப்புகள் ​மூலம் மாற்றியமைத்துக் கொள்ள முடியும்.

முன்பெல்லாம் பிக்சல் திறன்பேசியில் ஒளிர் விளக்கு வெளிச்சத்தை சரிசெய்ய, FlashDim அல்லது கூகுளின் Magnifier போன்ற தனியான செயலிகளை பயன்படுத்த வேண்டியிருந்தது. ஏனென்றால் கூகுள் ஆண்டிராய்டு 13 இல் ஒளிர் விளக்கு வெளிச்சத்தை கட்டுப்படுத்த ஏபிஐ சேர்க்கப்பட்டிருந்தாலும், விரைவு அமைப்பு பட்டையில் இது வழங்கப்படவில்லை. இந்த குறைபாட்டைதான் இப்போது தீர்த்திருக்கிறது கூகுள்.

கூகுளின் கேனரி வெளியீட்டை திறன்பேசியில் நிறுவிய பிறகு, ஒளிர் விளக்கு பொத்தான் விரிவாக்கக்கூடியதாக மாறும். அதைத் தட்டினால் “Flashlight Strength” என்ற ஒரு புதிய பகுதி திறக்கிறது. அதன் ​மூலம் வெளிச்சத்தின் அளவை மாற்றியமைத்துக்கொள்ள முடியும். அதன் அருகே ஒளிர் விளக்கை அணைப்பதற்கான பொத்தானும் வழங்கப்பட்டிருக்கிறது. புதிய பிக்சல் திறன்பேசிகளில் விரைவு அமைப்பு பட்டையிலிருந்து ஒளிர் விளக்கை இயக்கும் போது, 50% வெளிச்ச அளவு இயல்புநிலையாக இருக்கிறது. எனவே ஒளியின் அளவை விரைவாக சரிசெய்யும் திறன் பயனர்கள் ம​த்தியில் நல்ல வரவேற்பை பெறும்.

சில பயனர்கள் மட்டுமே இந்த அம்சத்தை பெற்றிருந்தாலும், எப்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்பது பற்றிய தகவல்கள் இல்லை. வரும் டிசம்பரில் ஆன்டிராய்டு 16 QPR2 இன் எதிர்கால பீட்டா வெளி​யீட்டில் இது வெளிவரும் வாய்ப்புள்ளது.

  • மு. இசக்கிமுத்து
Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now