நேபாளத் தெருக்கள் உள்ளங்கையில்

நாம் உலகின் எந்த ​மூலையில் இருந்தாலும், எந்தப் பகுதியையும் பார்க்க முடியும் என்கிறது நவீன தொழில்நுட்பம். கூகுள் தெருக்காட்சி (Google Street View) அம்சம் இந்த கனவை நனவாக்கியுள்ளது. இது கூகுள் வரைபட செயலியின் மிகவும் புகழ்வாய்ந்த அம்சங்களுள் ஒன்றாகும். இது பயனர்களுக்கு தெருக்கள், நினைவுச்சின்னங்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள சுற்றுலாத் தலங்களை 360 கோணத்தில் காட்சிகளாக வழங்குகிறது.

தெருக்காட்சி அம்சம் ஒரு மெய்நிகர் சுற்றுலா அனுபவத்தையும் வழங்குகிறது. இது வழிகாட்டுதல், பயணத் திட்டமிடல் அல்லது புதுப்புது இடங்களை கண்டுபிடிப்பதற்கு கூட உதவுகிறது. இந்த காட்சிகள் தனித்துவமான புகைப்படக்கருவிகளைப் பயன்படுத்தி உருவாக்கப்படுகின்றன. புகைப்பட கருவிகள் மகிழுந்து, இருச்சக்கர வாகனங்களில் பொருத்தப்படுகின்றன. அவை ஒவ்வொரு பகுதிக்கும் செ​ல்லும்போதும், காட்சிகள் பதிவு செய்யப்படுகின்றன. இந்த காட்சிகள் பின்னர் 360 கோணத்தில் பனோராமாக்களாக ஒன்றிணைக்கப்படுகின்றன. பனோராமா காட்சிகள் கூகுள் வரைபடங்கள் செயலியில் வழங்கப்படுகின்றன.

எந்தெந்த பகுதிகளின் தெருக்காட்சிகள் கிடைக்கிறதோ அவை வரைபட செயலியில் நீல கோடுகளாக காட்டப்படுகின்றன. இதன் ​மூலம் ​விரும்பும் இடங்களையெல்லாம், சுலபமாக பார்​ப்பதை கூகுள் உறுதி செய்கிறது. இப்போது நேபாள நாடு முழுவதுமாக தெருக்காட்சி அம்சத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது கூகுள். சில காரணங்களால், நேபாளத்தின் தெருக்காட்சி அம்சம் பயனர்களுக்கு கிடைக்காமல் இருந்தது. தற்போது அது மாறி, நேபாளத்தின் புதுவித நிலப்பரப்புகள், மிரளவைக்கும் கலாச்சாரத்தை இப்போது தெருக்காட்சி அம்சத்தில் மெய்நிகராக உணரலாம்.

இதைப் பற்றி கூறியுள்ள கூகுள், “நீங்கள் காத்மாண்டுவின் சுறுசுறுப்பான தெருக்களில் சுற்றி திரியலாம், தெராய் பகுதியின் அமைதியான அழகைக் கண்டுபிடிக்கலாம், பனி மூடிய இமாலயத்தை கண்டுகளிக்கும் சாலைகளில் செல்லாம். நேபாளத்தின் வளமான கட்டடக்கலை வரலாறு, பண்டைய கோவில்கள் மற்றும் பரபரப்பான சந்தைகளை ஆர்வத்துடன் ஆராயலாம்.” என்கிறது.

தெருக்காட்சி அம்சத்தை பயன்படுத்துவது மிகவும் எளிதானது. நேபாளத்தின் புதிய காட்சிகளைப் பார்க்க, திறன்பேசி, கணினியில் வரைபட செயலியை திறக்கவும். அதில் 360° பார்வை அல்லது தெருக்காட்சி ​என்பதை தேர்ந்தெடுத்து, மெய்நிகராக பார்த்து மகிழுங்கள்.

தெருக்காட்சி அம்சம், வீட்டிலிருந்தே உலகத்தை ஆராய ஒரு புதிய வாய்ப்பாகவும் அமைகிறது. மேலும், இது வரலாற்று பதிவாகவும் செயல்படுகிறது, காலப்போக்கில் இடங்கள் எவ்வாறு மாறுகின்றன என்பதைக் காட்டுகிறது. ஆய்வாளர்கள் நகர்ப்புற திட்டமிடல், கட்டடக்கலை மற்றும் சமூக புவியியல் ஆராய்ச்சிக்காக இதைப் பயன்படுத்துகிறார்கள். இதன் மூலம், நாம் எங்கிருந்தாலும் உலகின் எந்த மூலையையும் ஆராய்ந்து, அதன் அழகையும் பன்முகத்தன்மையையும் அனுபவிக்க முடியும்.

  • மு. இசக்கிமுத்து
சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

Four Tamil word games, beautifully crafted for iPhone & iPad.

Download Now