ஜெமினி கதைப்புத்தகம்

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் அறிமுகப்படுத்தியுள்ள ஜெமினி ஸ்டோரிபுக் குழந்தைகளுக்கான கதை உருவாக்கத்தில் ஒரு புதிய பரிமாணத்தை அளித்துள்ளது. பெற்றோர்கள் அல்லது ஆசிரியர்கள் மிகச் சாதாரணமான குறிப்புகளை (prompt) கொடுத்தாலே போதும்; செயற்கை நுண்ணறிவு அந்த யோசனைகளைப் பயன்படுத்தி பத்து பக்கங்களைக் கொண்ட, வண்ணமயமான ஓவியங்களுடன் கூடிய சிறுவர் கதைப்புத்தகமாக மாற்றி வழங்குகிறது.

முன்பு குழந்தைகளுக்காக கதை உருவாக்கும்போது எழுத்தாளர், ஓவியர், வடிவமைப்பாளர் போன்ற பலரின் பங்களிப்பு அவசியமாக இருந்தது. ஆனால் இன்று செயற்கை நுண்ணறிவின் உதவியால், சில நொடிகளில் அழகான கதையையும் அதற்கான ஓவியங்களையும் ஒரே நேரத்தில் உருவாக்க முடிகிறது. எழுத்துருக்கள், வண்ணமயமான படங்கள், பக்கங்களைத் திருப்பும் இயங்குபடம் (animation) போன்ற அம்சங்கள் சேர்ந்து குழந்தைகளுக்கு நிறைவான புத்தக அனுபவத்தைக் கொடுக்கின்றன.

மேலும், ஜெமினி ஸ்டோரிபுக் மூலம் கிளேமேஷன் (Claymation), கார்ட்டூன் பாணி, நீர் வண்ண ஓவியம், மின்னணு ஓவியம்  போன்ற பல்வேறு கலை பாங்குகளில் கதை உருவாக்கலாம். குறிப்பாக, “குழந்தைகள் வண்ணம் தீட்டும்” வகை ஓவியங்களையும் உருவாக்கி பிரதி எடுத்து வகுப்பறைகளில் பயன்படுத்தலாம். இதனால் கதை ஒரு படைப்பாற்றல் செயற்பாடாக மாறுகிறது.

இந்த அம்சம் பள்ளி ஆசிரியர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. அவர்கள் எந்த பாடத்தையும் சில நிமிடங்களில் ஆர்வமூட்டும் கதையாக மாற்றி மாணவர்களுக்கு விளக்க முடிகிறது. எடுத்துக்காட்டாக, அறிவியல் பாடத்தில் சிக்கலான ஒரு கருத்தை நேரடியாகக் கற்றுக் கொடுப்பதற்குப் பதிலாக, அதனை ஒரு கதாபாத்திரமாக்கி மாணவர்களுக்கு சொல்லிவிடலாம். இதனால் கடினமான கருத்துக்களும் எளிதில் மனத்தில் பதிகின்றன.

ஜெமினி உருவாக்கும் கதைகள், அதை பயன்படுத்தும் குழந்தைகளுக்கு தனிப்பட்ட அனுபவத்தைத் தருவதே அதன் சிறப்பு. கதையின் நாயகராக குழந்தையின் பெயரை வைக்கலாம்; அவருக்கு பிடித்த விலங்குகள், நிறங்கள், இடங்கள் அல்லது கற்பனை உலகங்களையும் இணைக்கலாம். இதனால் ஒவ்வொரு கதைப்புத்தகமும் குழந்தையின் சொந்த சாகச உலகமாக மாறுகிறது. இது வெறும் கதை அல்ல, குழந்தையின் கற்பனை உலகையும் நிஜமாக்கும் முயற்சியாகும்.

மேலும், கவனிக்க (Listen) என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுத்தால் கதை இனிமையான குரலில் வாசிக்கப்படும்; குரல் ஒலிக்கும் போதே பக்கங்களும் தானாக மாறும். குழந்தைகள் ஒரே நேரத்தில் படித்து, கேட்டு ரசிக்கக்கூடிய இரட்டை அனுபவத்தைப் பெறுகின்றனர். இந்த ரீட் அலௌட் நரேஷன் (Read-Aloud Narration) வசதி, துயில் முன் கதைகளை (bedtime stories) சொல்லும் பழக்கத்தை நவீன தொழில்நுட்பத்துடன் இணைக்கிறது.

ஜெமினி, தமிழ் உட்பட 45க்கும் மேற்பட்ட மொழிகளில் கதைகளை வழங்குகிறது. தமிழில் பேசும் குரல் சில சமயம் சற்றே செயற்கையானதாகத் தோன்றினாலும், குழந்தைகளுக்கு அது புதுமையான அனுபவமாக இருக்கும். எதிர்காலத்தில் குரல் தரம் மேம்படுத்தப்பட்டால், இது தமிழ்க் குடும்பங்களிடையே பெரும் வரவேற்பைப் பெறும் என்பது உறுதி.

கூகுள் ஜெமினி ஸ்டோரி புக் குழந்தைகளின் படைப்பாற்றலை ஊக்குவிக்கிறது; பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கதை சொல்லும் செயல்முறையை எளிமையாக்குகிறது. எளிமையாக பயன்படுத்தக்கூடிய இடைமுகம், பல்வேறு கலை பாணிகள், மொழி விருப்பங்கள், தனிப்பட்ட அனுபவம் ஆகியவை இதை குழந்தைகளுக்கான நவீன கதை உலகமாக மாற்றுகின்றன.

  • அருட்செல்வம்

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

Four Tamil word games, beautifully crafted for iPhone & iPad.

Download Now