கூகுள் தொலைக்காட்சி

கூகுள் தொலைக்காட்சி என்பது திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்ப்பதற்காக வடிவமைக்கப்பட்ட பயனர் இடைமுகம் ஆகும். இது யூடியூப், நெட்ஃபிளிக்ஸ், மேக்ஸ் போன்றவற்றை ஒருங்கிணைத்து வழங்குகிறது. அதோடு தேவைப்படும் காணொளிகளின் பெயரை உள்ளிட்டு, அவற்றைப் பயன்படுத்த முடியும்.

இது ஆண்டிராய்டு தொலைக்காட்சி அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இதனை ஆண்டிராய்டு திறன்பேசிகள், கைக்கணினி, திறன்மிகுதொலைக்காட்சிகள், நவீன குரோம்காஸ்ட் (Chromecast) கருவிகள் போன்றவற்றில் பயன்படுத்தலாம். குறிப்பிடத்தக்க ஒன்று என்னவென்றால், திறன்பேசிகள், கைக்கணினிகளில் கூகுள் தொலைக்காட்சி ஒரு தனி செயலியாகவே இருக்கிறது. அதேசமயம் குரோம்காஸ்ட் கருவிகளுடைய மென்பொருளில், முக்கியமான அம்சமாக உள்ளது கூகுள் தொலைக்காட்சி. இந்த அமைப்பின் மூலம் நமது பொழுதுபோக்கு அனுபவம் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்டு, எளிதில் பயன்படுத்தக் கூடியதாக மாறியுள்ளது.

ஆண்ட்ராய்டு திறன்பேசிகளில் மூன்றாம் தரப்பு செயலிகளைப் பயன்படுத்தும்போது, பல்வேறு புது அம்சங்களைப் பயன்படுத்த முடியும். இதைப் போலவே, கூகுள் தொலைக்காட்சி கருவிகளில் சில மூன்றாம் தரப்பு செயலிகளை நிறுவினால், அதன் திறன் அதிகளவில் மேம்படுகிறது. அத்தகைய செயலிகளின் பரிந்துரை கீழே வழங்கப்பட்டுள்ளது.

முதல் பரிந்துரையாக புரொஜெக்டிவி லாஞ்சர் (Projectivy Launcher) செயலி வருகிறது. இந்த செயலி காணொளிகளின் காட்சி அளவை சிறப்பாகக் காண்பிக்கிறது. எந்தெந்த உள்ளடக்கக் காணொளிகளைப் பரிந்துரைக்க வேண்டும், எனத் தேர்வு செய்யும் வாய்ப்பை வழங்குகிறது. அதோடு தேவைக்கேற்றார்போல், அம்சங்களை மாற்றி அமைத்துக்கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இவை எல்லாம் இலவச பதிப்பிலேயே வழங்கப்படுகின்றன. புரோ சந்தா பயனர்களுக்கு இன்னும் அதிகமான அம்சங்கள் வழங்கப்படுகின்றன.

கூகுள் டிவியின் தொலை இயக்கி வசதியில் அதிகமாக அம்சங்கள் இல்லை என பயனர்கள் குற்றம் சாட்டிவருகின்றனர். இரண்டாவது பரிந்துரையான ஏடிவி டூல்ஸ் (atvTools), தொலை இயக்கிக்கு அதிக பயன்பாட்டு வசதிகளை வழங்குகிறது.இதனைத் திறன்பேசியில் பதிவிறக்கி எளிதாக, எந்த காணொலியைப் பார்க்க வேண்டும் என்பதைத் தேர்வு செய்ய முடியும். குரோம்காஸ்ட் கருவியுடன் கூகுள் டிவிக்கான கருவியை, இணைப்பு கம்பி இல்லாமல் இணைக்க முடியும். ஆனால் இந்த அம்சங்கள் அனைத்துமே சந்தா பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றன.

கூகுள் தொலைக்காட்சியில் அதிக அம்சங்கள் தேவைப்படுவோருக்கு ஸ்மார்ட்டியூப் (SmartTube) சிறந்த பரிந்துரைகளில் ஒன்றாகும். இது யூடியூப் காணொளிகளை பார்ப்பதற்கு எண்ணற்ற அம்சங்களை வழங்குகிறது. தெளிவான துணைத் தலைப்புகள், காணொளிகளை சீராக இயக்குவது, அவற்றை தேவையான தரத்தில் எளிமையாக பார்ப்பது என பல்வேறு அம்சங்கள் குவிந்து கிடக்கின்றன.

இந்த செயலிகள் கூகுள் தொலைக்காட்சி செயலியை பயன்படுத்தும் அனுபவத்தை குறிப்பிடத்தக்க அளவில் மேம்படுத்தி, அதை மிகவும் எளிதாக மாற்றுகின்றன.

  • மு. இசக்கிமுத்து
சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

Four Tamil word games, beautifully crafted for iPhone & iPad.

Download Now