குறுஞ்செய்தி நிர்வாகி கூகுள்

இன்றைய காலத்தில் குறுஞ்செய்திகள் நமது அன்றாட வாழ்வின் ஓர் அங்கமாகிவிட்டன. வங்கி பரிவர்த்தனைகள், விளம்பர செய்திகள், தரவு எச்சரிக்கைகள் போன்ற தகவல்கள் தொடர்ந்து வரும் நிலையில், அவற்றைச் சீராக நிர்வகிப்பது சவாலாக மாறியுள்ளது. வாட்சாப் போன்ற செயலிகளில் பெரும்பாலும் தனிப்பட்ட உரையாடல்கள் நடைபெறும் போது, கூகுள் மெசேஜஸ் முக்கியமாக பணம் செலுத்துதல், வேலை தொடர்பான தகவல்கள் மற்றும் அவசர குறுஞ்செய்திகளுக்கே பயன்படுத்தப்படுகிறது.

2014ஆம் ஆண்டில் அறிமுகமான கூகுள் மெசேஜஸ், எளிய குறுஞ்செய்தியும் (SMS), பல்துறை ஊடக (MMS) சேவையையும் வழங்கும் செயலியாகத் தொடங்கியது. 2017இல், பேஸ்புக் மெசஞ்சர் போன்ற பயன்பாடுகளுடன் குழப்பம் ஏற்படாதபடி, இதன் பெயர் ஆண்டிராய்டு மெசேஜஸ் என மாற்றப்பட்டு ஆண்டிராய்டு அடையாளம் வலுப்படுத்தப்பட்டது. 2018–2019 காலகட்டத்தில், இது கூகுள் மெசேஜஸ் என பெயர் மாற்றப்பட்டு, கூகுளின் அதிகாரப்பூர்வ செய்திப் பரிமாற்றச் செயலியாக உருவெடுத்தது.

தொடக்கத்தில், இது எளிய குறுஞ்செய்தி அனுப்பும் செயலியாக இருந்தாலும், காலப்போக்கில் இது பல மேம்பாடுகளை அடைந்துள்ளது. மேம்பட்ட தொடர்புச் சேவைகள் (Rich Communication Services) ஆதரவு, செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான பரிந்துரைகள், ஒருமுறை பயன்படும் கடவுச்சொல்லைத் தானாக நீக்குதல், கணினியில் குறுஞ்செய்திகள் அனுப்பும் வசதி,  திட்டமிட்டுச் செய்திகளை அனுப்புதல் (Schedule send), ஜெமினி ஏஐ ஒருங்கிணைப்பு போன்ற அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் குறுஞ்செய்திகள் வெறும் எழுத்துச் செய்திகள் மட்டுமல்லாமல், படங்கள், காணொளிகள், ஆடியோ போன்ற உயர் தர உள்ளடக்கங்களையும் அனுப்பப்பட முடிகிறது.

செய்யவேண்டியவற்றை குறிச்சொல் (to-do tag) மூலம் முக்கியமான உரையாடல்களை பிரித்து வைத்துக்கொள்ளும் வசதி இதன் முதன்மை அம்சம் ஆகும். பின்னர் அவற்றை தேடும் போது விரைவாகக் கண்டுபிடிக்க முடியும். வெளிநாட்டில் இருக்கும் உறவுகளுக்கு நேர வேறுபாடு காரணமாக அழைப்புகளை திட்டமிடுவது சிரமமாக இருக்கும் நிலையில், திட்டமிட்டு அனுப்பும் வசதி (Schedule send)  மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

முக்கியமான உரையாடல்களைக் குறித்து (PIN) வைப்பதன் மூலம், ஒரு முறை பயன்படுத்தும் குறிச்சொல் போன்ற தேவையில்லாத செய்திகள் அதனை கீழே தள்ளாமல் காக்க உதவுகிறது. குறிப்பிட்ட உரையாடல்களுக்கு நட்சத்திரக் குறி இடுவது, பின்னர் அவற்றை தேடிக் காண உதவுகிறது. விரல் நகர்த்தல் மூலம் செயல்களை விருப்பத்திற்கேற்ப அமைத்து, தேவையற்ற செய்திகளை உடனே நீக்கவோ அல்லது படித்ததாகக் குறியிடவோ முடியும். சப்ஜெக்ட் பீல்ட் (Subject field)  பயன்படுத்தி அவசரமான தகவல்களை தெளிவாகக் குறிப்பிடலாம். ஆர்கைவ் (Archive) வசதி, பழைய, தேவையில்லாத உரையாடல்களை சேமித்து வைப்பதால் குறுஞ்செய்தி உள்பெட்டி எப்போதும் சுத்தமாக இருக்கும்.

சரியாகப் பயன்படுத்தினால், கூகுள் மெசேஜஸ் வெறும் குறுஞ்செய்தி செயலியாக மட்டும் அல்லாமல், பணிகள், நினைவூட்டல்கள், உரையாடல்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் சீராகவும் எளிதாகவும் நிர்வகிக்க உதவும் திறமையான கருவியாக மாறுகிறது. இது வலைதள மேலாண்மைக்கும் உதவக்கூடிய பயனுள்ள கருவியாக விளங்குகிறது.

  • அருட்செல்வம்
Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now