அறிவாளி ஆப்பிள்

ஆப்பிள் தனது பயனுள்ள கருவிகளில் ஒன்றான ஷார்ட்கட்ஸ் உடன் ஆப்பிள் நுண்ணறிவை நேரடியாக இணைத்துள்ளது. இதைப் பயன்படுத்துவதன் வழியாகப் பல்வேறு செயலிகளின் பயன்பாட்டைக் குறைக்க முடியும்.

ஆப்பிள் நுண்ணறிவு

செயற்கை நுண்ணறிவு இன்றைய உலகில் இன்றியமையாத ஒன்றாக மாறியுள்ளது. இந்நிலையில், உலகின் முன்னணி நிறுவனங்கள் தங்களின் செயற்கை நுண்ணறிவு மொழி மாதிரிகளை ஒன்றன் பின் ஒன்றாக அறிமுகப்படுத்தி வருகின்றன. கூகுள், மைக்ரோசாஃப்ட் போன்ற பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஏற்கெனவே தங்கள் செயற்கை நுண்ணறிவு மொழி மாதிரிகளை வெளியிட்டுள்ளன. ஆப்பிள் நிறுவனம் தனது தனித்துவமான பார்வையுடன் “ஆப்பிள் நுண்ணறிவு” எனும் புதிய அம்சத்தை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. மனிதர்களின் அன்றாட வாழ்க்கையுடன் செயற்கை நுண்ணறிவை இயல்பாக இணைக்கும் இதன் வடிவமைப்பு, பயனர்களின் தனியுரிமையை உறுதியாகக் காக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

தனியுரிமைக்கு முக்கியத்துவம்

ஆப்பிள் நுண்ணறிவு என்பது வெறும் செயற்கை நுண்ணறிவு அல்ல. அது “தனியுரிமையை மையமாகக் கொண்ட நுண்ணறிவு அமைப்பு.” என்பதே இதன் சிறப்பம்சம். 2024 ஜூன் மாதம் உலகளாவிய மென்பொருள் உருவாக்குநர் மாநாடு (WWDC) நடைபெற்றது. அதில் ஆப்பிள் நிறுவனம் இந்த செயற்கை நுண்ணறிவு அம்சத்தை அறிமுகப்படுத்தியது. இது ஐஒஎஸ்18, ஐபேட்ஒஎஸ் 18, மேக்ஒஎஸ் செக்வோயா (Sequoia) இயங்குதளங்களில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

பயனரின் தரவுகளை பாதுகாப்பாக வைத்துக்கொண்டு, செயற்கை நுண்ணறிவு வசதிகளை வழங்குவதே இதன் முக்கியமான நோக்கம். இதற்காக ஆப்பிள் தனிப்பட்ட மேகக் கணிப்பீடு (Private Cloud Compute) எனப்படும் புதுமையான தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் செயற்கை நுண்ணறிவு கிளவுட் வழியாக இயங்கினாலும், பயனர் தரவு பாதுகாப்பாகவே இருக்கும்.

மற்ற செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் பெரும்பாலும் பயனரின் தரவுகளை இணையத்தில் சேமித்து பகுப்பாய்வு செய்கின்றன. ஆனால் ஆப்பிள் நுண்ணறிவு வேறுபட்டது. இது பெரும்பாலான செயல்பாடுகளை அந்த கருவியிலேயே (“on-device processing”) செய்கிறது. இதனால் தனியுரிமை மீறல் அல்லது தரவு கசிவு ஏற்படும் வாய்ப்பு குறைகிறது.

ஷார்ட்கட்ஸ் அம்சம்

இந்நிலையில், ஆப்பிள் நுண்ணறிவு ஷார்ட்கட்ஸ் செயலியுடன் இணைந்துள்ளது. முன்பு செய்திகள் அனுப்புதல், கோப்புகளைச் சேமித்தல் போன்ற எளிய தன்னியக்க பணிகளுக்காகவே ஷார்ட்கட்ஸ் பயன்படுத்தப்பட்டது. இப்போது ஆப்பிள் நுண்ணறிவு இணைப்பின் மூலம் இது செயற்கை நுண்ணறிவின் சக்தியைப் பெற்றுள்ளது. இதனால் இது மேலும் திறமையான கருவியாக மாறியுள்ளது.

செயற்கை நுண்ணறிவு மாதிரியைப் பயன்படுத்து எனக் கட்டளையிடும் “Use Model” எனப்படும் அம்சம், ஷார்ட்கட்ஸ் செயலியுடன் செயற்கை நுண்ணறிவை நேரடியாக இணைக்கிறது. எடுத்துக்காட்டாக, ஒரு பிடிஎப் கோப்பைக் குறிப்புகளாக மாற்றலாம். ஆப்பிள் நுண்ணறிவு அதனைச் சுருக்கமான முக்கியமான குறிப்புகளாக மாற்றும். பின்னர் ஷார்ட்கட்ஸ் மூலம் அதைத் தானாகச் சேமிக்கவும் முடியும்.

இந்தப் புதிய அம்சம் மூலம், செயற்கை நுண்ணறிவு உதவியுடன் உரையைச் சுருக்குதல், படங்களுக்கு விளக்கம் எழுதுதல், குரல் பதிவுகளை எழுத்தாக மாற்றுதல், உணவு பட்டியலில் இருந்து சமையல் குறிப்புகளை உருவாக்குதல் போன்ற சிக்கலான பணிகளையும் ஷார்ட்கட்ஸ் வழியாக, எளிதாகச் செய்ய முடிகிறது. இதனால் முன்பு பல செயலிகள் மூலம் செய்த வேலைகளை இப்போது ஒரே ஷார்ட்கட் மூலம் முடிக்க முடிகிறது.

ஆப்பிள் நுண்ணறிவு தொழில்நுட்ப மேம்பாட்டைத் தாண்டியது. இது நெறிமுறை, பாதுகாப்பு, தனியுரிமையை மையமாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவு அனுபவத்தின் புதிய திசையைக் காட்டுகிறது. பயனரின் தரவு எப்போதும் பயனருக்கே சொந்தம் என்பதை உறுதிப்படுத்தும் இந்த அமைப்பு, நவீன செயற்கை நுண்ணறிவு உலகில் நம்பகமான கருவியாக விளங்குகிறது.

  • அருட்செல்வம்
சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

Four Tamil word games, beautifully crafted for iPhone & iPad.

Download Now