ஆப்பிளின் செயற்கை நுண்ணறிவு (AI) வலைத்தேடல் திட்டத்தை வழிநடத்திய தலைமைப் பணியாளர் கீ யாங் மெட்டா நிறுவனத்துக்கு மாறுகிறார். இது ஆப்பிளின் செயற்கை நுண்ணறிவுப் பிரிவிலிருந்து வெளியேறும் முக்கியமான நபர்களின் வரிசையில் அண்மையில் நடந்த நிகழ்வு என்று பிளூம்பெர்க் செய்தி தெரிவித்துள்ளது.

சில வாரங்களுக்கு முன்பே யாங், Answers, Knowledge, and Information (AKI) எனப்படும் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார். இந்தக் குழுவின் பணி, சிரியை ChatGPT போன்று மாற்ற முயல்வதாகும். அதாவது இணையத்திலிருந்து தகவல்களை எடுக்கும் திறனை சிரிக்கு வழங்குவதாகும். மார்ச் 2026-ல் திட்டமிடப்பட்டுள்ள சிரியின் பெரிய மாற்றத்துக்கு இந்தத் திட்டம் மையமானது.
யாங் வெளியேறுவது ஆப்பிளின் செயற்கை நுண்ணறிவுப் பிரிவில் தொடர்ந்து நடந்துவரும் நிலைமையை வெளிப்படுத்துகிறது. இந்த ஆண்டு மட்டும் பத்துக்கும் மேற்பட்ட மூத்த ஆராய்ச்சியாளர்கள், பொறியாளர்கள் நிறுவனத்தை விட்டு வெளியேறியுள்ளனர். ஆப்பிளின் Foundation Models குழுவின் முன்னாள் தலைவர் ருமிங் பாங் உட்பட பலரும் மெட்டாவின் புதிய Superintelligence Labs பிரிவுக்கு மாறியுள்ளனர்.
மெட்டா நிறுவனம் OpenAI, கூகுள், Anthropic போன்ற போட்டியாளர்களை எதிர்கொள்ள தீவிரமாக திறமையான நபர்களை நியமித்து வருகிறது. மெட்டாவின் அதிக ஊதியம், சிறந்த வாய்ப்புகள் ஆகியவை இந்த மாற்றங்களுக்குக் காரணமாக இருக்கலாம் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர்.
இந்த மாற்றங்கள் இருந்தபோதிலும், ஆப்பிள் தனது செயற்கை நுண்ணறிவு முயற்சிகளைத் தொடர்கிறது. பயனர் தனியுரிமை, பாதுகாப்பு, நம்பகத்தன்மை ஆகியவற்றில் கவனம் செலுத்தி ஆப்பிள் நுண்ணறிவு (Apple Intelligence) என்ற பெயரில் புதிய அம்சங்களை உருவாக்கி வருகிறது. வல்லுநர்கள் ஆப்பிளின் மெதுவான ஆனால் நிலையான அணுகுமுறை நீண்ட காலத்தில் பலனளிக்கும் என்று நம்புகின்றனர்.
- செல்லினம் குழு
