கூகுள் பொருளாதாரத் தகவல் மையம்

கூகுள் நிறுவனம் தனது கூகுள் ஃபைனான்ஸ் தளத்தில் பல அசரவைக்கும் அம்சங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது. என்னென்ன அம்சங்கள் என விரிவாக பார்க்கலாம்.

நாம் செய்தித்தாள்களில் பங்குச் சந்தை விலைகளைப் பார்ப்பது போல, இணையத்தில் அதே தகவல்களை நேரடியாகவும் இலவசமாகவும் பார்க்க உதவுவதுதான் கூகுள் பைனான்ஸ் (Google Finance).

பங்குச் சந்தைக்கான ஒரு மின்னணுத் தகவல் பலகை போன்றது. ரயில் நிலையத்தில் ரயில்கள் வரும் நேரம், தாமதம் போன்ற தகவல்களைக் காட்டும் தகவல் பலகை எப்படி இருக்கிறதோ, அதேபோல இந்தத் தளம் பங்குகள், நாணயங்கள், கிரிப்டோகரன்சிகள் உள்ளிட்ட அனைத்து நிதிச் சந்தை தகவல்களையும் ஒரே இடத்தில் காட்டுகிறது. முதலீட்டாளர்களுக்கும் நிதி ஆர்வலர்களுக்கும் இது மிக முக்கியமான கருவியாக திகழ்கிறது.

பயனர்கள் இந்தத் தளத்தைப் பயன்படுத்தி பங்கு விலைகள், சந்தை நகர்வுகள், நிறுவன செய்திகள் போன்றவற்றைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதில் தங்களுக்கு விருப்பமான பங்குகளை கண்காணிப்பு பட்டியலில் (watchlist) சேர்த்து வைத்துக்கொள்ள முடியும். ஆனால் நிறுவனங்களின் வருவாய் அறிவிப்புகளை அறிய, பயனர்கள் வெவ்வேறு செய்தி தளங்களுக்குச் சென்று தகவல்களைத் தேட வேண்டியிருந்தது.

அதோடு ஒரு நிறுவனத்தின் நிதி செயல்திறனை பற்றி அறிந்துகொள்ள உத​வும் வருவாய் அழைப்புகளின் (earnings calls) ஒலிப்பதிவை கேட்க தனியாக நிறுவனங்களின் இணையதளங்களுக்குச் செல்ல வேண்டியிருந்தது.

இதை எல்லாம் இப்போது தீர்த்து வைத்திருக்கிறது கூகுள் பைனான்ஸ்.

இது பற்றி கூகுள் தயாரிப்புப் பிரிவு தலைவர் ரோஸ் யாவோ எக்ஸ் தளத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, கூகுள் பைனான்ஸ் பீட்டா பதிப்பு பயனர்கள் புதிய வருவாய் அறிவிப்பு அனுபவத்தைப் பெறுவார்கள். முதலாவதாக வருவாய் அழைப்புகளில் பெரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

1. நேரடி ஆடியோ வசதி: நிறுவனங்களின் வருவாய் அழைப்புகளை நேரடியாகக் கூகுள் பைனான்ஸ் செயலியிலேயே கேட்கலாம்.

2. உடனடி எழுத்து வடிவம்: அழைப்புகளை எழுத்து வடிவில் உடனடியாகப் பெறலாம். நேர முத்திரை (timestamp) இடப்பட்டிருப்பதால், தேவையான பகுதியிலிருந்து கேட்கத் தொடங்கலாம். முழு அழைப்பு ஒலிப்பதிவையும் கேட்க வேண்டிய அவசியம் இல்லை.

3. செயற்கை நுண்ணறிவு : எழுத்து வடிவ தகவல்களில் உள்ள முக்கியமானவற்றை செயற்கை நுண்ணறிவு சுருக்கமாக வழங்கும். இது எளிதாக வாசிக்க வழிவகை செய்யும்.

அதோடு சில நிறுவனங்கள் வருவாய் அறிவிப்புடன் விளக்கக்காட்சி அட்டைகளையும் வழங்குகின்றன. பழைய வருவாய் அறிக்கைகளை வாசித்து அதன் மூலம் நிறுவனத்தின் வளர்ச்சி அல்லது சரிவை எளிதாகக் கண்காணிக்கலாம்.

கூகுள் தயாரிப்புப் பிரிவு தலைவர் யாவோவின் அறிவிப்பின்படி, இந்த வசதிகள் அமெரிக்காவில் உள்ள கூகுள் பைனான்ஸ் பயனர்களுக்கு முதற்கட்டமாக வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கனடா உள்ளிட்ட பிற நாடுகளிலும் இது கிடைக்கத் தொடங்கியுள்ளதால், விரிவான வெளியீடாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மேம்பாடு முதலீட்டாளர்கள், நிதி ஆய்வாளர்களுக்கு கணிசமான நேரத்தை மிச்சப்படுத்தும். ஒரே இடத்தில் வருவாய் பற்றிய அனைத்து தகவல்களையும் பெற முடியும் என்பது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

  • மு. இசக்கிமுத்து
சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

Four Tamil word games, beautifully crafted for iPhone & iPad.

Download Now