செயற்கை நுண்ணறிவு மூலம் காணொளிகளை உருவாக்கித்தரும் சோரா செயலி இப்போது ஆண்டிராய்டிலும் கிடைக்கிறது.

ஓபன்ஏஐ நிறுவனம் சாட்ஜிபிடியை (ChatGPT) பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தி சுமார் மூன்றாண்டுகள் ஆகியிருக்கின்றன. ஆனால் இணையத்துடன் நாம் தொடர்புகொள்ளும் முறையை அது முழுவதும் மாற்றிவிட்டது. அதன்பிறகு, கூகுள், மைக்ரோசாஃப்ட், மெட்டா, அமேசான் உள்ளிட்ட பெரிய நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவுத் துறையில் தீவிரமாக இறங்கின. தாங்கள் இழந்த இடத்தை மீட்டெடுக்கவும், தங்களுக்கென ஒரு தனித்துவமான பாதையை உருவாக்கவும் போட்டியிட்டு வருகின்றன.
அந்த போட்டி மூலம் அன்றாடம் பயன்படுத்தும் செயலிகள் மற்றும் சேவைகளில் செயற்கை நுண்ணறிவு கருவிகள் தொடர்ந்து அறிமுகமாகி வருகின்றன. குறிப்பாக, ஓபன்ஏஐ நிறுவனம் சோரா (Sora) தொழில்நுட்பத்தின் மூலம் அற்புதமான செயற்கை நுண்ணறிவு காணொளிகளை உருவாக்கி வருகிறது.
இப்போது சோரா 2 பதிப்பு அறிமுகம் செயற்கை நுண்ணறிவு காணொளிகளை மேலும் மெருகேற்றியிருக்கிறது. இந்தப் புதிய பதிப்பு காணொளிகளுக்கு மேம்பட்ட விவரங்களையும், ஒலியுடன் கூடிய காட்சிகளையும் உருவாக்கும் திறனைக் கொண்டுள்ளது. இதுவரை ஐஓஎஸ் பயனர்களுக்கு மட்டுமே கிடைத்த இந்த செயலியை இப்போது ஆண்டிராய்டிலும் பதிவிறக்கம் செய்யலாம்.
விருப்பமுள்ளவர்கள் பிளே ஸ்டோரிலிருந்து சோரா செயலியைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தத் தொடங்கலாம். சோரா 2 செயலி மிக எளிமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வெறுமனே உரை வடிவ கட்டளையை (text prompt) உள்ளிட்டால் போதும், அது தானாகவே வீடியோவை உருவாக்கித் தரும். வெளிவரும் முடிவுகள் மிகவும் வியப்பூட்டுவதாக இருக்கின்றன.
சோரா 2 என்ன செய்ய முடியும் என்பதை இன்னும் பார்க்காதவர்கள், ஓபன்ஏஐ நிறுவனம் வெளியிட்டுள்ள மாதிரி காணொளியை பார்க்கலாம். புதிதாக காணொளியை உருவாக்குவது மட்டுமல்ல, ஏற்கெனவே இருக்கும் காணொளிகளை மறுவடிவமைப்பு (remix) செய்வதும், புதிய கூறுகளைச் சேர்ப்பதும் இதன் மூலம் சாத்தியமாகும். காணொளிகளில் இப்போது ஒலி அம்சமும் சேர்க்கப்பட்டுள்ளது.
இது சோரா மூலம் உருவாக்கப்படும் காணொளிகளுக்கு புதிய பரிமாணத்தைச் சேர்க்கிறது. உருவாக்கப்படும் காணொளிகளின் உண்மை தன்மையை அதிகரிக்கிறது. இவை செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டவையா என்று கண்டுபிடிப்பது கடினமாகிறது. ஒருவேளை நுணுக்கமாக ஆராய்ந்தால் சில குறைபாடுகளைக் கண்டறியலாம். ஆனாலும் ஒட்டுமொத்த தரம் மிகவும் திருப்திகரமாக இருப்பதாகவே கூறப்படுகிறது.
இது செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியின் ஆரம்பக்கட்ட மேம்பாடு மட்டுமே என்பதை நினைவில் கொள்ள வேண்டும். தற்போதே இவ்வளவு முன்னேற்றம் இருக்கும்போது, இன்னும் சில ஆண்டுகளில் என்னென்ன சாத்தியங்கள் உருவாகும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
- மு. இசக்கிமுத்து
