ஆண்டுதோறும் பல முறை தனது திறன்பேசிகளுக்கு புதிய அம்சங்களை வழங்குவது கூகுளின் வழக்கம். இதற்கு பிக்சல் டிராப் (Pixel Drop) என்று பெயர். வழக்கமான மென்பொருள் புதுப்பிப்புகளைப் போல பிழை திருத்தங்கள் மட்டுமல்லாமல், புதிய அம்சங்கள், செயல்பாடுகள், வசதிகள் என அனைத்தும் இதில் அடங்கும். ஒவ்வொரு பிக்சல் டிராப்பும் பயனர்களுக்கு ஒரு சிறிய திருவிழாவைப் போல. தங்கள் தொலைபேசியில் என்ன புதிதாக வரப்போகிறது என்ற எதிர்பார்ப்புடன் காத்திருப்பார்கள்.

இந்த மாதம் வெளியான நவம்பர் பிக்சல் டிராப் புதுப்பிப்பு பல முக்கியமான மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. அறிவிப்புகளை சுருக்கமாக்கும் வசதி, மோசடி அழைப்புகளைக் கண்டறியும் தொழில்நுட்பம் மேலும் பல செயலிகளுக்கு விரிவாக்கம் செய்யப்படுவது, கூகுள் வரைபடங்களில் (Maps) மின்சக்தி சேமிக்கும் முறை என பல அம்சங்கள் கிடைத்திருக்கின்றன. ஆனால் இரண்டு முக்கியமான மாற்றங்கள் யாரும் எதிர்பார்க்காத வகையில் கிடைத்துள்ளன.
கடந்த நவம்பரில் ஜர்னல் (Journal) என்ற செயலியை கூகுள் அறிமுகப்படுத்தியது. ஆனால் அது வெளியான பிறகு மக்களிடையே பெரிதாக பேசப்படவில்லை. காரணம், அது பிக்சல் 10 ரக திறன்பேசிக்கு மட்டுமே தனித்துவமாக இருந்தது. பிக்சல் 8, பிக்சல் 9 போன்ற பிற திறன்பேசிகளில் அது இல்லை. இப்போதுதான் இந்த செயலி பழைய தொலைபேசிகளுக்கும் வரத் தொடங்கியிருக்கிறது.
சரி ஜர்னல் செயலி என்றால் என்ன? நம்மில் பலர் தினசரி நாட்குறிப்பு எழுதும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள விரும்புவோம். அன்றாடம் நடக்கும் நல்ல தருணங்கள், சிறப்பான அனுபவங்கள், எண்ணங்கள் என்று எழுதி வைக்க நினைப்போம். ஆனால் காகிதத்தில் எழுதுவது சிரமமாக இருக்கும், எங்கே வைத்தோம் என்று தொலைந்து போகும். இதற்காகவே உருவாக்கப்பட்டதுதான் மின்னணு நாட்குறிப்பு செயலி.
ஆப்பிள் 2023 இல் இதேபோன்ற ஜர்னல் செயலியை அறிமுகப்படுத்தியது. அது எளிமையான, பயன்படுத்த வசதியான நாட்குறிப்பு செயலி. ஆனால் கூகுளின் அணுகுமுறை கொஞ்சம் வித்தியாசமானது. கூகுள் தனது செயலியில் செயற்கை நுண்ணறிவை முக்கியமான அம்சமாக இணைத்துள்ளது. உங்கள் திறன்பேசியிலேயே இயங்கும் ஜெமினி நானோ (Gemini Nano) என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இதில் பயன்படுத்தப்படுகிறது.
இந்த ஜர்னல் செயலி என்ன செய்யும் என்ற கேள்வி எழும். இது நீங்கள் புகைப்படம் எடுத்தால் அதை அடிப்படையாகக் கொண்டு எழுதுவதற்கான ஆலோசனைகளை வழங்கும். “இன்று இந்த அழகான இடத்துக்குச் சென்றீர்கள், அந்த அனுபவத்தைப் பற்றி எழுதுங்கள்” என்று தூண்டுதலை கொடுக்கும். வழக்கமான நாட்குறிப்பு செயலியைவிட இது மிகவும் சக்தி வாய்ந்ததாக, உதவிகரமானதாக இருக்கும். நீங்கள் எழுதத் தயங்கும்போது, என்ன எழுதுவது என்று தெரியாமல் இருக்கும்போது, இந்த செயற்கை நுண்ணறிவு உங்களுக்கு வழிகாட்டியாக செயல்படும்.
இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சக்தி வாய்ந்ததாக இருப்பதால், அதை இயக்க வேண்டிய வன்பொருள் ஆதரவு தேவை. ஜெமினி நானோ (Gemini Nano) செயல்பட பிக்சல் 8, அதற்கு மேலான திறன்பேசிகளில் உள்ள சக்திவாய்ந்த வன்பொருள் தேவை. பிக்சல் 7 போன்ற பழைய திறன்பேசிகளில் இது சாத்தியமில்லை.
அதனால்தான் ஜர்னல் செயலியை பிக்சல் 7ல் பயன்படுத்த முடியாது. ஆனால் இன்றைய புதிய புதுப்பிப்புடன் பிக்சல் 8, பிக்சல் 9 ரக திறன்பேசிகளுக்கு இந்த செயலி கிடைக்கிறது.
இன்னொரு முக்கியமான மாற்றம் அமைப்புகள் (Settings) பகுதியில் செய்யப்பட்டுள்ளது. இதுவரை அமைப்புகளின் கீழ்ப்பகுதியில் “குறிப்புகள் & ஆதரவு” (Tips & support) என்ற பிரிவு இருந்தது. அங்கே போனால் சில ஆலோசனைகளும் உதவிக்கான தொடர்பு வசதியும் மட்டுமே இருக்கும். உங்கள் திறன்பேசியின் பராமரிப்பு தொடர்பான தகவல்களைப் பார்க்க வெவ்வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டியிருந்தது.
உதாரணமாக மின்கலன் எப்படி இருக்கிறது என்று பார்க்க ஒரு இடத்திற்குச் செல்ல வேண்டும். தொலைபேசி அதிகமாக சூடாகிறதா என்று பார்க்க வேறொரு இடம். சேமிப்பு இடம் எவ்வளவு உள்ளது என்று பார்க்க இன்னொரு இடம். மென்பொருள் புதுப்பிப்புகள் இருக்கிறதா என்று பார்க்க வேறு இடம் என செல்லவேண்டும்.
இதை இப்போது முற்றிலும் மாற்றி வடிவமைத்திருக்கிறது கூகுள். “குறிப்புகள் & ஆதரவு” என்பதற்குப் பதிலாக “கருவி நலன் & ஆதரவு” (Device health & support) என்ற விரிவான பிரிவு வந்துள்ளது.
இந்த பிரிவுக்குள் சென்றவுடன், முதலில் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் அவை மேலே தானாகவே காட்டப்படும். எடுத்துக்காட்டாக, உங்கள் மின்கலன் நலன் குறைந்து வருகிறது, அல்லது திறன்பேசி அதிக வெப்பமாகிறது, அல்லது சேமிப்பு இடம் முழுவதும் நிரம்பி வருகிறது என்றால், அந்த எச்சரிக்கைகள் முதலில் தெரியும்.
இவை சிறிய சிறிய மாற்றங்கள்தான், ஆனால் அன்றாட பயன்பாட்டில் பெரிய வித்தியாசத்தை உருவாக்குகின்றன.
- மு. இசக்கிமுத்து
