முரசு அஞ்சல் 12.0.4 பதிப்பு வெளியானது!

கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்ட முரசு அஞ்சல் செயலியின் 12ஆம் பதிப்பைப் பயன்படுத்தி,  பயனர்கள் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவிப்பதோடு புதிய வசதிகளைச் சேர்ப்பதற்கான பரிந்துரைகளையும் வழங்கி வருகின்றனர். அதற்கேற்ப அவ்வப்போது சிறுசிறு மேம்பாடுகளை செயலியில் சேர்த்து வருகிறோம்.  அந்த வரிசையில் இன்று 12.0.4ஆம் பதிகையை (version) வெளியிடுகிறோம்.

இதில் அடங்கியுள்ள முக்கியமான புதுமைகளையும் மேம்பாடுகளையும் இங்கே பட்டியலிடுகிறோம்:

புதியன:

  1. கணினியில் தட்டெழுதி வரும் நீண்டநாள் பயனர் சிலரின் விருப்பத்திற்கிணங்க இன்ஸ்கிரிப்ட் (Inscript) விசைமுக அமைப்பை (keyboard layout) சேர்த்துள்ளோம். இதுவரை இந்த அமைப்பை மெக் கணினிகளில் பயன்படுத்த வாய்ப்பிருந்ததில்ல. இனி முரசு அஞ்சல் செயலியின் வழி மெக் விண்டோஸ் கணினிகளிலும் இன்ஸ்கிரிப்ட் அமைப்பைக் கொண்டு தமிழில் தட்டெழுதலாம். மேலும், மற்ற விசைமுகப் பயன்பாட்டின்போது கிடைக்கும் பரிந்துரைகளும் பிழை திருத்தங்களும் இந்த விசைமுகத்திலும் கிடைக்கும்.
  2. பரிந்துரைகள் பயனுள்ளதாக இருந்தாலும், புதிய சொற்களைத் தட்டெழுதும்போது, எழுதிய சொல்லுக்கு பதில் பரிந்துரையில உள்ள சொல்லே பதிவாகிறது என்று சிலர் கூறி வந்துள்ளனர். இதற்கு ஒரு புதிய தீர்வினை சேர்த்துள்ளோம். மேல் விசையை அழுத்தியவாறு வெளி விசையை (Shift+Space) தட்டினால், பரிந்துரையில் உள்ள சொல்லுக்கு பதில் தட்டெழுதிய சொல்லே ஆவணத்தில் சேரும். மேலும், சேர்க்கப்பட்ட ‘புதிய’ சொல்லை முரசு அஞ்சல் படித்துக் கொள்ளும். அதே சொல் இரண்டு அல்லது மூன்று முறை தட்டெழுதப்பட்டால் அடுத்த முறை இந்த சொல்லே பரிந்துரைக்கப்படும்.
  3. Control+` (கண்ட்ரோல் விசையையும் 1-க்கு இடதுபுறம் இருக்கும் விசையையும்) இரண்டையும் தட்டி தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கும் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கும் எளிதாக மாறும் வசதி ஏற்கனவே முரசு அஞ்சல் விண்டோசு பதிப்பில் இருந்தது. இது எங்களுக்கும் வேண்டும் என்று மெக் பயனர்கள் கேட்டு வந்தனர். மெக் கணினிகளில் எளிதாக ‘உலகம்’ சின்னம் கொண்ட விசையைப் பயன்படுத்தி உள்ளிடு மொழியை மாற்றிக் கொள்ளலாம் என்பதால் விட்டுவிட்டோம். ஆனால் பழைய மெக் விசைப்பலகைகளில் இந்த விசை இல்லை. மெக் கணினிகளில் Control+` இணை வேறொரு பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், Command+Option+` விசைகளை இந்த மொழி மாற்ற பயன்பாட்டுக்கு அமைத்து விட்டோம்.
  4. விண்டோசில் Control விசையுடன் எந்த எண்ணை அழுத்தினாலும் அதற்கேற்ற தமிழ் எண் சேர்க்கப்படும். எடுத்துக்காட்டாக Control-6 தட்டினால் ௬ (தமிழ் என்று 6) கிடைக்கும். மெக் கணினிகளில் Control விசைக்கு பதில் Option விசையைப் பயன்படுத்த வேண்டும். இது பரிந்துரைகள் இல்லாத போதே வேலை செய்யும். பரிந்துரைகள் இருந்தால் அந்த எண்ணுக்கான சொல்லை ஆவணத்தில் சேர்த்து விட்டு அதன் பொருளை அகராதியில் காட்டும்.
  5. பரிந்துரைகளை இரண்டு வழியில் மறைக்கலாம். பின் சாய்வுக்கோடு (Backslash ‘\’) விசை தற்காலிகமாக பரிந்துரைகளை மறைக்கும் அடுத்த எழுத்தைத் தட்டியவுடன் அவை மீண்டும் தோன்றும். பரிந்துரைகளே இல்லாமல் ஒரு சொல்லை தட்டெழுதி முடிக்க வேண்டும் என்றால் Esc விசையைத் தட்டலாம். அடுத்த சொல்லுக்குச் செல்லும் வரை பரிந்துரைகள் தலைகாட்டா. பரிந்துரைகள் நிரந்தரமாக வேண்டாம் என்றால் முரசு அஞ்சல் உள்ளிடுமுறை அமைப்பில் இந்தத் தேர்வைச் செய்யலாம்.

மேம்பாடுகள்:

  1. தட்டச்சு விசைப்பலகைகளில் ஏற்படும் பரிந்துரை சிக்கல் தீர்க்கப்பட்டது.
  2. விண்டோசு கணினியில் பரிந்துரைகள் தோன்றும்போது, வேறு எங்காவது சுட்டியை கிளிக் செய்தால், தட்டெழுதப்படும் சொற்கள் இனி அழியா.
  3. விண்டோசு கணினியில் தமிழ்நாடு தட்டச்சுமுறை மீண்டும் செயலாக்கம் பெற்றது.
  4. சிந்தாமணி, கவிதை எழுத்துருக்களில் உள்ள சிறு சிக்கல்கள் நீக்கப்பட்டன.

இந்த புதிய சேர்க்கைகளும் மேம்பாடுகளும் உங்கள் முரசு அஞ்சல் பயன்பாட்டை மேலும் எளிமைப்படுத்தும் என நம்புகிறோம்!

தொடர்புடையவை:
1. முரசு அஞ்சல் 12.0.3 இன்று வெளியானது!

Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now