கூகுள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு மொழி மாதிரியான ஜெமினி (Gemini) பயன்பாட்டில் இடைமுக படங்கள் (interactive images) என்ற புதிய ஏற்பாட்டினை அறிமுகப்படுத்தியுள்ளது. இது மாணவர்களுக்கும் கற்போருக்கும் சிக்கலான கல்விசார் கருத்துகளை எளிதாகப் புரிந்துகொள்ள உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த வசதி மூலம், வெறும் எழுத்து வடிவிலான தகவல்களை மட்டும் படிக்காமல், படங்களுடன் நேரடியாக உரையாட முடியும். எடுத்துகாட்டாக, செரிமான அமைப்பு அல்லது உயிரணுவின் பகுதிகள் பற்றி படிக்கும்போது, படத்தில் உள்ள குறிப்பிட்ட பகுதியை தொட்டாலே அல்லது சொடுக்கினாலே, அந்தப் பகுதி பற்றிய விளக்கங்கள், வரையறைகள் உடனடியாகத் தோன்றும். உயிரணுவில் உள்ள கோல்கி எந்திரம் (Golgi apparatus) போன்ற அமைப்புகளை சொடுக்கினால், அது புரதங்களை மாற்றியமைப்பதில் எவ்வாறு செயல்படுகிறது என்பதை எளிய உதாரணங்களுடன் விளக்கும்.
கற்றல் அறிவியல் ஆய்வுகள் தொடர்ந்து வலியுறுத்துவது என்னவெனில், உண்மையான கற்றலுக்கு செயலில் ஈடுபாடு அவசியம் என்பதுதான். இந்த புதிய அம்சம் மாணவர்களை செயலற்ற பார்வையாளர்களாக இல்லாமல், செயலூக்கமான ஆய்வாளர்களாக மாற்றுகிறது. குறிப்பிட்ட படங்களுடன் உரையாடும் திறன் மூலம், தலைப்புகள் பற்றிய கூடுதல் தகவல்களைப் பெற முடியும், தொடர்கேள்விகள் கேட்க முடியும்.
இயற்பியலில், விசை வரைபடங்களில் (free-body diagram) உள்ள திசையன்களை (vector) தேர்ந்தெடுத்தால், நிகர விசையின் கணக்கீடுகள், பொதுவான சிக்கல்கள் போன்றவை விளக்கப்படும். வேதியியலில், வினை அம்புக்குறியை (reaction arrow) தொட்டால், அந்த வினையின் விதிகள், வினையூக்கிகள் பற்றிய தகவல்கள் கிடைக்கும் இதேபோல், கணிதத்தில் வரைபடங்களில் உள்ள இறங்குகோடுகள் (asymptote), வெட்டுப்புள்ளிகள் போன்றவற்றை விளக்கும் திறனும் உள்ளது.
கல்வி உள்ளடக்கத்தைப் பற்றிய எண்ணங்களையே இந்த தொழில்நுட்பம் மாற்றியமைக்கிறது. எந்த வரைபடமும் செயற்கை நுண்ணறிவு உதவியால் இடைமுகமாக மாற்றப்படும்போது, ஈர்க்கக்கூடிய கல்வி அனுபவங்களை உருவாக்குவதற்கான பொருளாதார, அணுகல் தடைகள் குறைகின்றன.
கூகுள் இந்த அம்சத்தை படிப்படியாக வெளியிட்டு வருகிறது. ஓபன்ஏஐ (OpenAI) உரையாடல் கற்றலில் கவனம் செலுத்தும் அதேவேளை, மைக்ரோசாஃப்ட் (Microsoft) கல்வியில் கூட்டு செயற்கை நுண்ணறிவு கருவிகளை முன்னெடுக்கும் நிலையில், கூகுள் காட்சி இடைமுகத்தை வெளியிட்டு அடுத்த எல்லையை எட்ட முயல்கிறது.
கற்றலை காட்சிரீதியாகவும், எளிதானதாகவும், அனைவரும் அணுகக்கூடியதாகவும் மாற்றுவதில் முக்கியமான படியாகும். படங்களைக் கொண்டு நேரடியாக உரையாடி கற்றுக்கொள்ளும் இந்த வசதி, பாடப்புத்தகங்களில் உள்ள நிலையான படங்களை விட மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
