ஆப்பிள் துணைக்கருவி மென்பொருள்

ஆப்பிள் நிறுவனத்தின் மேஜிக் விசைப்பலகை (Magic keyboard), மேஜிக் டிராக்பேடு (Magic Trackpad), 140W USB-C மின்னேற்றி ஆகியவற்றுக்கு உள்ளிருக்கும் மென்பொருள் மேம்படுத்தப்பட்டுள்ளது.

நாம் ஐபோனிலோ, கணினியிலோ மென்பொருள் புதுப்பிப்பு செய்வது போல, விசைப்பலகை, டிராக்பேடு, மின்னேற்றி போன்ற கருவிகளுக்குள்ளும் ஒரு சிறிய மென்பொருள் இருக்கும். இதைத்தான் ‘ஃபேம்வேர்’ என்கிறோம். எடுத்துக்காட்டாக, விசைப்பலகை ஓர் எழுத்தை அழுத்தும்போது அது என்ன செய்ய வேண்டும், எவ்வளவு வேகமாக செய்ய வேண்டும் என்பதையெல்லாம் இந்த மென்பொருள்தான் முடிவு செய்கிறது. பிழைகளைச் சரிசெய்ய, வேகத்தை மேம்படுத்த, பாதுகாப்பை அதிகரிக்க, இம்மென்பொருளை அவ்வப்போது புதுப்பிக்க வேண்டும்.

சில நாள்களுக்கு முன் வெளியான iOS 26.2 beta 3 மென்பொருள் பதிப்பில், பல ஆப்பிள் துணை கருவிகளுக்கு ஃபேம்வேர் மென்பொருள் மேம்படுத்தப்பட்டிருக்கிறது. இதில் விரல் ரேகையால் திறக்கும் வசதி (touch ID) கொண்ட மேஜிக் விசைப்பலகை, ரேகைத் திறப்பு, எண் இலக்கங்களுடன் கூடிய மேஜிக் விசைப்பலகை, மேஜிக் டிராக்பேடு, மேஜிக் டிராக்பேடு 2 ஆகியவை அடங்கும்.

இந்த துணை கருவிகள் கடந்த அக்டோபர் 2024க்குப் பிறகு இப்போதுதான் மென்பொருள் மேம்பாட்டைப் பெறுகின்றன. இதற்கென தனியாக எதையும் பதிவிறக்க வேண்டிய அவசியம் இல்லை. துணைக் கரு​விகளை மேக் கணினி, ஐபோன், ஐபேட், ஆப்பிள் டிவி அல்லது ஆப்பிள் விஷன் புரோவுடன் இணைத்து பயன்படுத்தும்போதே பின்னணியில் தானாகவே புதிய பதிப்பு நிறுவப்படும்.

அண்மையில் ஆப்பிள் வெளியிட்ட இந்த மென்பொருள் மேம்பாட்டில் கருவி சரியாக வேலை செய்யாமல் இருந்தால் அதை சரிசெய்தல், கருவி இன்னும் வேகமாகவும் சீராகவும் வேலை செய்ய உதவுதல், தரவு பாதுகாப்பை வலுப்படுத்துதல் போன்றவை வழங்கப்படுகின்றன.

இந்த சிறிய ஆனால் அவசியமான புதுப்பிப்புகள், ஆப்பிள் தனது துணை கருவிகளையும் தொடர்ந்து கவனித்து மேம்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதைக் காட்டுகிறது.

  • மு. இசக்கிமுத்து
சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

Four Tamil word games, beautifully crafted for iPhone & iPad.

Download Now