குறுங்காணொளிகளின் புதிய பரிணாமம்

அடோபி செயலியில் இருந்து நேரடியாக யூட்யூப் செயலிக்கு குறுங்காணொளிகளை உருவாக்கி பகிரும் வசதி அறிமுகப்படுத்தப்பட்ள்ளது.

உலகையே புயல் போலத் தாக்கிய டிக்டாக் காரணமாக, குறுங்காணொளி (Short-form video) உள்ளடக்கம் இப்போது எல்லா செயலிகளிலும் விதவிதமாக உருவாகியுள்ளது. டிக்டாக்கைத் தொடர்ந்து, இன்ஸ்டாகிராம் ரீல்ஸை (Reels) வெளியிட்டது, யூடியூப் குறுங்காணொளிகளை (Shorts) அறிமுகப்படுத்தியது. இரண்டு நிறுவனங்களும் இந்த வகை உள்ளடக்கத்தைத் தொடர்ந்து மேம்படுத்தி வருகின்றன.

இப்போது யூடியூப் நிறுவனம் அடோபியுடன் (Adobe) புதிய கூட்டணியை அறிவித்திருக்கிறது. இதன் காரணமாக குறுங்காணொளி உள்ளடக்கத்தை உருவாக்குவது முன்பை விட எளிதாகிவிட்டது. அடோபி தனது பிரீமியர் (Premiere) செயலியின் புதிய பதிப்பில் ‘யூடியூப் குறுங்காணொளிகளுக்காக உருவாக்கு’ என்ற பிரிவை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

இந்த புதிய பிரிவு, ஈர்க்கக்கூடிய குறுங்காணொளிகளை உருவாக்க தேவையான அனைத்து கருவிகளையும் வழங்குகிறது. அதாவது புதிய போக்குகளைப் (Trends) பயன்படுத்துவது, பார்வையாளர்களை ஈர்க்கும் குறிப்புகளை பெறுவது என அனைத்தையும் ஒரே இடத்தில் வழங்குகிறது. இதில் தனித்துவமான விளைவுகள் (Effects), மாற்றங்கள் (Transitions), வார்ப்புருக்கள் (Templates), முன்னமைவுகள் (Presets), ஃபயர்ஃப்ளையால் (Firefly) இயக்கப்படும் மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் உள்ளன.

ஒவ்வொரு காணொளியையும் சிறப்பாக காட்ட தலைப்பு மாதிரிகள் வழங்கப்பட்டுள்ளன. புதிய யூடியூப் போக்குகளை பிறருக்கு பகிரவும் இயலும்.

பேச்சை மேம்படுத்தும் வசதி மூலம் உயர் தர குரல்வழி பதிவு (Voiceover), உரையாடல், செயற்கை நுண்ணறிவு ஒலி கூறு ​மூலம் உங்கள் சொந்த குரலைப் பயன்படுத்தி (Generative Sound Effects) காணொளிகளை மேலும் மெருகேற்றலாம்.

தயாரான காணொளிகளை நேரடியாக யூடியூப் குறுங்காணொளிகளுக்கு பகிரும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த செயலி தற்போது ஐஓஎஸ்-இல் மட்டுமே கிடைக்கிறது. ஆண்டிராய்டுக்கான செயலி உருவாக்கப்பட்டு வருகிறது, எனவே இந்த மேம்பாடுகள் விரைவில் எல்லா ஆண்டிராய்டு பயனர்களுக்கும் கிடைக்கும்.

இந்த புதிய கூட்டணியின் வழியாக, தரமான காணொளிகளை திறன்பேசியிலேயே உருவாக்கி, பகிரும் புரட்சியை யூடியூப்பும் அடோபியும் இணைந்து கொண்டுவந்திருக்கின்றன.

  • மு. இசக்கிமுத்து
சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

Four Tamil word games, beautifully crafted for iPhone & iPad.

Download Now