கூகுள் ஒவ்வொரு வருடமும் அந்த ஆண்டில் மக்கள் அதிகம் தேடிய விஷயங்களை பட்டியலிட்டு வெளியிடும். இப்போது 2025ஆம் ஆண்டின் முதன்மை தேடல் போக்குகளை (Top trending searches) ஒரு காணொளியாக உருவாக்கி வெளியிட்டிருக்கிறது கூகுள்.

இதில் இந்த ஆண்டு மக்கள் கூகுளில் அதிகம் தேடிய விஷயங்கள் எல்லாம் ஒரு குறுகிய காணொளியாக தொகுக்கப்பட்டுள்ளன. சினிமா, விளையாட்டு, அரசியல், தொழில்நுட்பம், இயற்கை பேரிடர்கள் என எல்லாவற்றையும் வேகமாக காட்டுகிறது. இதை பார்க்கும்போது “ஆமாம், இந்த வருடம் இது எல்லாம் நடந்தது” என்று நினைவுக்கு வரும்.
இந்த காணொளியில் பின்னணி இசையாக பிரபல பாடல்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ஓஸி ஆஸ்போர்ன், லேடி காகா போன்ற கலைஞர்களின் பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
இதை ஸ்பாட்டிஃபை (Spotify) அல்லது யூடியூப் வருட இறுதியில் வெளியிடும் “உங்கள் வருடம் எப்படி இருந்தது” காணொளிகள் போல நினைத்துக்கொள்ளலாம். ஆனால் அவை நம் தனிப்பட்ட விவரங்களைக் காட்டும், இது உலகம் முழுவதும் என்ன நடந்தது என்பதைக் காட்டுகிறது.
கேபாப் டெமன் ஹன்டர்ஸ் (KPop Demon Hunters) என்ற பொம்மைகளை பற்றி இந்த காணொளியில் காட்டப்பட்டுள்ளது. லாபுபு (Labubu) என்ற பொம்மைகளைப் பற்றியும் இடம்பெற்றுள்ளது. இந்தியா, மலேசியா உட்படப் பல நாடுகளில் இந்த பொம்மைகள் மிகவும் பிரபலமாக இருந்தன. கடைகளில் விற்றுத் தீர்ந்தன, சமூக வலைதளங்களில் எல்லோரும் இதைப் பற்றியே பேசினார்கள்.
விளையாட்டு உலகில் நடந்த முக்கியமான நிகழ்வுகளும் காட்டப்பட்டுள்ளன. கூடைப்பந்து வீரர் லூகா பற்றிய செய்திகள், டென்னிஸ் வீரர்கள் அல்காராஸ், சின்னர், ஃபார்முலா 1 கார் பந்தயங்கள் போன்றவை சேர்க்கப்பட்டுள்ளன. கிரிக்கெட், கால்பந்து விளையாட்டுக் காட்சிகளும் உள்ளன. உலகக்கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணியின் வெற்றிக் களிப்பையும் கொண்டாடியிருக்கிறது கூகுள்.
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் நடந்த முன்னேற்றங்கள், தானாக இயங்கும் மகிழுந்துகள் (Self-driving cars) போன்ற புதிய தொழில்நுட்பங்களும் காட்டப்பட்டுள்ளன. இவை உலகம் முழுவதும் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்திய தலைப்புகள். செயற்கை நுண்ணறிவு எப்படி நமது அன்றாட வாழ்க்கையை மாற்றும் என்பது பற்றி இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளை சேர்ந்த மக்கள் பெரிய அளவில் கூகுளில் தேடிப் பார்த்திருக்கிறார்கள்.

வெள்ளம், நிலநடுக்கம் போன்ற பேரிடர்களுக்குப் பிறகு மக்கள் எப்படி மீண்டும் தங்கள் வாழ்க்கையை கட்டியெழுப்புகிறார்கள் என்பதும் காணொளியில் காட்டப்பட்டுள்ளது.
இந்த காணொளி வெறும் பொழுதுபோக்குக்கானது மட்டுமல்ல. கூகுளின் இந்த ஆண்டு இறுதி காணொளி, நாம் கடந்து வந்த ஆண்டினை ஒரு விரைவான பார்வையில் நினைவுபடுத்துகிறது. இது வெறும் தரவு அல்ல, அது நம்முடைய கூட்டு நினைவு. இந்த வருடம் என்ன நடந்தது, எது நம்மை ஆச்சரியப்படுத்தியது, எது நம்மை மகிழ்வித்தது, எது நம்மை உணர்ச்சிவசப்படுத்தியது என்பதை சுருக்கமாக காட்டுகிறது.
- மு. இசக்கிமுத்து
