கூகுள் ‘டிஸ்கோ’ (Disco) என்ற புதிய சோதனை மாதிரி உலாவியை அறிமுகப்படுத்தியுள்ளது. உலாவியில் திறந்துவைத்திருக்கும் பல பக்கங்களை (Tabs) தனிப்பயன் செயலிகளாக மாற்றி, வேலைகளை வேகமாக முடிக்க உதவுகிறது. இதில் உள்ள சிறப்புக் கருவி ‘ஜென்டேப்ஸ்’ (GenTabs) என்று அழைக்கப்படுகிறது, இது கூகுளின் ஜெமினி செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படுகிறது.

நாம் இணையத்தில் ஏதாவது வேலை செய்யும்போது, பல இணையத்தளப் பக்கங்களைத் திறந்து வைத்திருப்போம். ஒன்றில் தகவல் தேடுவோம், மற்றொன்றில் குறிப்புகள் எழுதுவோம், இன்னொன்றில் விலைகளை ஒப்பிடுவோம். இப்படி தாவித் தாவிச் சென்று வருவது சிரமமாக இருக்கும். நாம் என்ன செய்ய முயல்கிறோம் என்பது உலாவிக்கு தெரியாது.
டிஸ்கோ சோதனை மாதிரி உலாவியில் உள்ள ஜென்டேப்ஸ் கருவி மிக புத்திசாலித்தனமாக வேலை செய்கிறது. நீங்கள் திறந்து வைத்திருக்கும் எல்லா பக்கங்களையும் கவனிக்கிறது. என்ன வேலை செய்கிறீர்கள், என்ன செய்ய முயல்கிறீர்கள் என்பதை புரிந்துகொள்கிறது. பிறகு தானாகவே ஒரு சிறிய செயலியை உருவாக்கி உதவுகிறது.
முக்கியமான ஒன்றாக இதற்கு நிரலாக்கம் (Coding) தெரிய வேண்டியதில்லை. சாதாரண மொழியில் என்ன வேண்டும் என்று சொன்னால் போதும்.
நீங்கள் ஒரு புதிய மடிக்கணினி வாங்க முயல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். பல பக்கங்களில் வெவ்வேறு இணையதளங்களில் விலைகளை பார்க்கிறீர்கள். சிலவற்றில் விமர்சனங்களை படிக்கிறீர்கள். இன்னும் சிலவற்றில் விவரக்குறிப்புகளை ஒப்பிடுகிறீர்கள்.
ஜென்டேப்ஸ் இதை எல்லாம் பார்த்துக்கொண்டிருக்கிறது. “நீங்கள் மடிக்கணினி வாங்க முயல்கிறீர்கள், விலை ஒப்பீடு தேவை” என்பதை புரிந்துகொள்கிறது. பிறகு தானாகவே ஒரு சிறிய செயலியை உருவாக்குகிறது. இந்த செயலி எல்லா மடிக்கணினிகளையும் அழகாக ஒப்பிட்டு காட்டும். விலை, விவரக்குறிப்புகள், நன்மை தீமைகள் எல்லாமே ஒரே இடத்தில் காண்பிக்கப்படும்.
ஜென்டேப்ஸ் உருவாக்கும் செயலிகள் தனியாக வேலை செய்வதில்லை. எல்லாமே இணையத்துடன் இணைந்தே இருக்கின்றன. ஒவ்வொரு தகவலும் அதன் மூல இணையதளத்திற்குச் செல்லும் இணைப்பு கொண்டிருக்கும். நீங்கள் விரும்பினால் அந்தப் பக்கத்திற்கு சென்று முழு விவரங்களையும் பார்க்கலாம்.
இணைப்புகளை ஒழுங்குபடுத்துதல், தொடர்புடைய தகவல்களை எடுத்துக்காட்டுதல், வேலையை முடிக்க உதவும் கருவிகளை வழங்குதல் இவை எல்லாவற்றையுமே ஜென்டேப்ஸ் செய்கிறது.
கூகுள் இது இன்னும் சோதனை நிலையில் மட்டுமே இருப்பதாக கூறுகிறது. தற்போது மெக் (macOS) கணினிகளில் மட்டுமே குறைந்த எண்ணிக்கையிலான பயனர்களுக்கு சோதிக்க அனுமதிக்கப்படுகிறது. ஆனால் இது வெற்றிகரமாக இருந்தால், எதிர்காலத்தில் கூகுள் குரோம் (Chrome) உலாவியிலேயே இந்த அம்சங்கள் சேர்க்கப்படலாம்.
அது நடந்தால், குரோம் மிகவும் சக்தி வாய்ந்ததாக மாறும். இப்போதைக்கு மெக் கணினி பயன்படுத்துபவர்கள் டிஸ்கோ மற்றும் ஜென்டேப்ஸை முயற்சி செய்ய காத்திருப்பு பட்டியலில் (Waitlist) பதிவு செய்யலாம். தற்போது இது அமெரிக்காவில் மட்டுமே கிடைக்கிறது. உங்கள் தனிப்பட்ட கூகுள் கணக்கைப் பயன்படுத்தி பதிவு செய்ய வேண்டும்.
பதிவு படிவம் மிக விரிவானது. நீங்கள் முன்பு செயற்கை நுண்ணறிவு கருவிகளை எப்படி படைப்பாற்றல் வழியில் பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை கூகுள் அறிய விரும்புகிறது. இதன் மூலம் நீங்கள் ஏன் ஆரம்ப சோதனையாளராக இருக்க வேண்டும் என்பதை மதிப்பீடு செய்கிறார்கள். விண்டோஸ் (Windows) அல்லது குரோம் இயக்க முறைமையில் (ChromeOS) இது எப்போது கிடைக்கும் என்று இன்னும் தெரியவில்லை.
இது வெறும் பக்கங்களை காட்டும் கருவி அல்ல, நமது வேலைகளை புரிந்துகொண்டு உதவும் புத்திசாலி உதவியாளராக மாறுகிறது. டிஸ்கோ வெற்றிகரமானால், இணையத்தை நாம் பயன்படுத்தும் விதம் முற்றிலும் மாறலாம்.
- மு. இசக்கிமுத்து
