கனவிலும் நினைக்காதது

ஓபன்ஏஐ நிறுவனம் தொடங்கப்பட்டு பத்து ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அதன் பயணம் குறித்து தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் தனது நினைவுகளையும் எதிர்கால பார்வையையும் பகிர்ந்துள்ளார். “நாங்கள் கனவிலும் நினைக்காத அளவிற்கு ஓபன்ஏஐ இன்று சாதித்துள்ளது. மிகவும் அபூர்வமான, சாத்தியமற்றதாகத் தோன்றிய ஒரு முயற்சியாகத் தொடங்கிய இந்தப் பயணம், இன்று எங்கள் இலக்கை அடையக் கூடிய நிலையில் உள்ளது” என பெருமிதம் தெரிவித்துள்ளார் சாம் ஆல்ட்மேன்.

ஓபன்ஏஐ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக 2016 ஜனவரி தொடக்கத்தில் செயல்படத் தொடங்கியது. அப்போது வெறும் 15 இளைஞர்கள் ஒன்றாக அமர்ந்து எதிர்காலத்தை கனவு கண்டதாக ஆல்ட்மேன் கூறுகிறார். ஆரம்ப கால புகைப்படங்களைப் பார்க்கும்போது அனைவரும் மிகவும் இளம் தோற்றத்துடன், அதே சமயம் அளவுக்கதிகமான நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் இருந்ததாக அவர் நினைவுகூர்கிறார்.

தொடர்ச்சியான முயற்சிகளின் விளைவாக, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ChatGPT அறிமுகமானது. GPT-4 வெளியானதும், AGI (Artificial General Intelligence) குறித்த விவாதங்கள் உலகளவில் தீவிரமடைந்தன. கடந்த மூன்று ஆண்டுகள் ஓபன்ஏஐ-க்கு மிகுந்த அழுத்தமும் பொறுப்பும் நிறைந்த காலமாக இருந்ததாக சாம் ஆல்ட்மேன் கூறுகிறார். “முன்னெப்போதும் இல்லாத வேகத்திலும் அளவிலும் இந்த தொழில்நுட்பம் உலகில் பயன்படுத்தப்படத் தொடங்கியது. ஒரு பெரிய நிறுவனமாக மிகக் குறுகிய காலத்தில் மாறுவது எளிதானது அல்ல” என்றார்.

செயற்கை நுண்ணறிவு உலகிற்கு அதிக பயன் தரும் வகையில், ஆரம்பக்கட்ட தொழில்நுட்பங்களை படிப்படியாக வெளியிடும் “Iterative Deployment” என்ற அணுகுமுறையை ஓபன்ஏஐ பின்பற்றியது. ஆரம்பத்தில் சர்ச்சைக்குரியதாக இருந்த இந்த முடிவு, இன்று தொழில்துறையின் தரநிலையாக மாறியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த தொழில்நுட்பம் உலகளவில் பல அசாதாரணமான சாதனைகளை சாத்தியமாக்கியுள்ளது. அதே நேரத்தில், அதன் அச்சுறுத்தல்களைக் கட்டுப்படுத்துவதிலும் உலகம் இதுவரை பொறுப்புடன் செயல்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

“எங்கள் ஆராய்ச்சி, தயாரிப்பு திட்டங்கள் குறித்து நான் இதுவரை இல்லாத அளவிற்கு நம்பிக்கையுடன் இருக்கிறேன். இன்னும் பத்து ஆண்டுகளில், நிச்சயமாக நாங்கள் ‘Superintelligence’-ஐ உருவாக்குவோம்” என சம்ஆல்ட்மேன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஓபன்ஏஐ-யின் தயாரிப்புகளை நம்பி பயன்படுத்தும் பயனர்களுக்கும் நிறுவனங்களுக்கும் அவர் நன்றியை தெரிவித்தார். “அவர்கள் இல்லையென்றால், எங்கள் முயற்சி ஆய்வகத்துக்குள் மட்டுமே இருந்திருக்கும்” எனவும் உணர்ச்சிபட கூறியிருக்கிறார்.

“மனிதக்குலம் முழுவதற்கும் பயன் தரும் வகையில் AGI-யை உருவாக்குவதே எங்கள் பணி. இன்னும் நிறைய வேலைகள் எங்களுக்கு உள்ளன. ஆனால் இன்றைய பயண பாதையை நினைத்து நான் பெருமை கொள்கிறேன்” என சாம் ஆல்ட்மேன் தனது அறிக்கையை நிறைவு செய்துள்ளார்.

  • மு. இசக்கிமுத்து
Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now