கூகுள் செய்தி செயலி நாளுக்கு நாள் பயனர்களுக்கேற்றார்போல் தனிப்பயனாக்கப்பட்டதாக மாறி வருகிறது. புதிய வசதிகளும், செயற்கை நுண்ணறிவு அம்சங்களும் சேர்க்கப்பட்டதால், தினசரி செய்திகளைப் பார்க்கவும் பயன்படுத்தவும் இது மேலும் வசதியாகியுள்ளது. கடந்த ஓர் ஆண்டில் செயலியின் வடிவமைப்பிலும் சில நல்ல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

ஆனால் இன்றைய காலத்தில் செய்திகளின் அளவு அதிகமாக இருக்கின்றன. எல்லா முக்கியமான செய்திகளையும் முழுமையாக வாசிக்க அனைவருக்கும் நேரம் கிடைப்பதில்லை. இந்த சிக்கலைத் தீர்க்க பல வழிகள் இருந்தாலும், கூகுள் மீண்டும் ஒருமுறை செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி இதற்கு தீர்வு காண முயற்சி செய்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு மூலம் கூகுள் செய்திச் சுருக்கத்தை ஒலி வடிவில் வழங்க ஏற்பாடு செய்துள்ளது.( News Audio Briefing). இணையத்தில் வெளியாகும் முக்கியமான செய்திகளை எடுத்து, அவற்றை எளிதாகக் கேட்கக்கூடிய ஒலி வடிவமாக இந்த வசதி மாற்றும். 9to5Google என்ற தொழில்நுட்ப தளம் இதைப் பற்றி முதலில் தகவல் வெளியிட்டுள்ளது. எதிர்காலத்தில் செய்திகளைப் பயன்படுத்தும் முறையையே இது மாற்றக்கூடும் என்று சொல்லப்படுகிறது.
இந்த ஒலி வடிவ செய்திச் சுருக்கம் எப்படி வேலை செய்கிறது என்றால், செயற்கை நுண்ணறிவு உங்களுக்கு முக்கியமானதாக இருக்கக்கூடிய செய்திகளை தேர்வு செய்து, ஒரு குறுகிய ஒலிச் செய்தித் தொகுப்பாக உருவாக்குகிறது. இதன்படி கூகுள் செய்தி செயலியில் “Listen” என்ற புதிய டேப் தோன்றும். அதைத் திறந்தால், அந்த நேரத்தின் முதன்மையான செய்திகள் ஒலி வடிவில் கிடைக்கும்.
இதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால், நீங்கள் செய்திகளை கேட்கும்போதே, அந்த செய்தி சார்ந்த கட்டுரைகளுக்கான இணைப்புகள் காட்டப்படும். விருப்பமிருந்தால், நேரடியாகச் சென்று அந்த செய்தியை முழுமையாக வாசிக்கலாம். வழக்கமான ஒலிக்கருவிகள் போல, முன்னோக்கி நகர்த்துதல், பின்னோக்கி செல்லுதல், நிறுத்துதல், மீண்டும் இயக்குதல், வேகத்தை மாற்றுதல் போன்ற வசதிகளும் இதில் இருக்கும்.
9to5Google கூற்றின்படி, ஒலிச் செய்தித் தொகுப்பு இரண்டு செய்தி தொகுப்பாளர்கள் பேசும் உரையாடல் வடிவில் உள்ளது. இதனால் செய்திகளை கேட்பது சலிப்பில்லாமல், உயிரோட்டமாக இருக்கும். எதிர்காலத்தில் இந்த வடிவம் மேலும் மாறக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செய்திகள் அனைத்தும் கூகுள் அனுமதி பெற்ற செய்தி மூலங்களிலிருந்தே உருவாக்கப்படுகின்றன.
எல்லா செய்திகளையும் ஒலி வடிவில் உடனே கேட்க முடியாது என்றாலும், இது ஒரு நல்ல தொடக்கம் என்று சொல்லலாம். இந்த அம்சம் உங்களிடம் கிடைக்கிறதா என்பதை அறிய, உங்கள் கூகுள் நியூஸ் செயலியில் “Listen” என இருக்கிறதா என்று பார்க்கலாம். இல்லையென்றால், செயலியை சமீபத்திய பதிப்புக்கு புதுப்பித்து முயற்சி செய்யலாம்.
இது வெறும் செய்திகளை காட்டும் செயலி அல்ல. நமது நேரத்தைச் சேமித்து, நமக்கு ஏற்ற முறையில் செய்திகளைப் புரிந்துகொள்ள உதவும் ஒரு புத்திசாலி உதவியாளராக கூகுள் செய்தி மாறி வருகிறது. இந்த ஒலிச் செய்திச் சுருக்கம் வசதி, வெற்றிகரமாக இருந்தால், எதிர்காலத்தில் செய்திகளை நாம் வாசிப்பதைவிட, கேட்கும் பழக்கம் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.
- மு. இசக்கிமுத்து
