அண்மைக் காலங்களில் கூகுள் அறிமுகப்படுத்தியுள்ள செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் அன்றாட வாழ்க்கையில் பெரிதும் உதவும் வகையில் உள்ளன. தேடல், கல்வி, பயணம், அலுவலகப் பணி, திறன்பேசி பயன்பாடு போன்ற பல துறைகளில் இந்த வசதிகள் எளிதாகவும் பயனுள்ளதாகவும் செயல்படுகின்றன. பொதுவாக பலருக்கு தெரியாமல் இருக்கும் இத்தகைய அம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

தேடலில் கேள்விகளுக்கு நேரடி உதவி
கூகுளின் புதிய தேடல் அனுபவத்தில், செயற்கை நுண்ணறிவு இணைக்கப்பட்டதால், பயனர்கள் ஒரு தகவலை மட்டும் தேடுவதற்குப் பதிலாக, அதைப் பற்றி தொடர்ச்சியான கேள்விகளையும் கேட்க முடிகிறது. தேடலின்போது குறுக்குக் கேள்விகளைக் கேட்டால், நாம் மெச்சும் அளவிற்கு விதவிதமான பதில்களைத் தருகிறது கூகுளின் செயற்கை நுண்ணறிவு.
கடினமான உரைகளை எளிதாக்கும் வசதி
இணையத்தில் உள்ள சில கட்டுரைகள், அரசு ஆவணங்கள் அல்லது தொழில்நுட்ப விளக்கங்கள், பொதுமக்களுக்கு புரியாத அளவிற்கு சிக்கலாக இருப்பதுண்டு. இதனை எளிதாக்க, கூகுள் எளிமையாக்கு (Google simplify) என்ற வசதியை வழங்குகிறது. இது உரையை எளிய மொழியில் மாற்றியமைத்துக் காட்டுகிறது. பயனர் வாசிக்கும் பக்கத்தை விட்டு வெளியே செல்லாமல், அதே இடத்தில் விளக்கம் கிடைப்பதால், இது மாணவர்களுக்கு பெரிதும் உதவுகிறது. ஆனால் இது இப்போதைக்கு, ஐஓஎஸ் இயங்குதளத்தில் மட்டுமே கிடைக்கிறது.
பயணத் திட்டமிடலில் புதிய எளிமை
பயணம் செல்ல விரும்புவோருக்கெனவே கூகுள் வழங்கிய செயற்கை நுண்ணறிவு வசதி கேன்வாஸ் (Canvas). இது பயணம் செய்யும் தேதிகள், இடங்களை பலமுறை மாற்றி தேட வேண்டிய அவசியத்தை குறைத்துள்ளது. பயனர் சாதாரணமாக பேசும் மொழியில் தனது தேவையைக் கூறினாலே, அதற்கு ஏற்ற சலுகைகள், பயண இடங்களை செயற்கை நுண்ணறிவு பரிந்துரைக்கிறது. மேலும், இணையத்தில் பார்த்த இடங்களின் படங்களை சேமித்தால், அவற்றை தானாகவே வரைபடப் பட்டியலாக மாற்றும் வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது.
காட்சிகள் மூலம் கற்றுத்தரும் ஜெமினி 3
தொழில்நுட்பம் அல்லது அறிவியல் சார்ந்த சிக்கலான தகவல்களை, காட்சிப்படுத்தல்களின் மூலம் எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். ‘ஜெமினி 3’ செயற்கை நுண்ணறிவு கடினமான கருத்துகளைக்கூட எளிமையான காட்சிகளாகவும், காணொளிகளாகவும் மாற்றித்தருகிறது. நீங்கள் வழங்கும் எந்த வகையான உள்ளீடாக இருந்தாலும் அதாவது உரை, காணொளி, நிரல் குறியீடு போன்ற அனைத்தையும் புரிந்து கொண்டு, எளிதாகப் புரியும் முறையில் கற்றுக்கொள்ள இது உதவுகிறது.
ஜெமினி, நானோ பனானாவில் சிறப்பான படங்களை உருவாக்கலாம்
சிறிய வாக்கியங்களை கொடுத்து நல்ல படங்களை உருவாக்க கூகுள் அளித்த அசத்தல் வாய்ப்புதான் ஜெமினி. அதைவிடவும் மேலாக ஒரே ஒரு சுயபடத்தை (Selfie) கொடுத்தால் முழு படத்தையும் உருவாக்கும் நானோ பனானா வசதியும் இருக்கிறது.
ஜெமினியில் பணிகளை திட்டமிட்டு செய்யலாம்
ஜெமினியின்திட்டமிடப்பட்ட செயல்கள் (scheduled actions) அம்சம் மூலம் அன்றாட வேலைகளை எளிதாக்கலாம். அடிக்கடி மறந்துபோகும் செயல்களை ஜெமினியின் காதில் போட்டுவைத்துவிட்டால் போதும். மீண்டும் மீண்டும் நினைவூட்டி அந்த பணிகளை செய்யவைத்துவிடும் ஜெமினி.
தொழில்நுட்பத்தை சிக்கலாக்காமல், மனிதர்களின் நேரத்தையும் உழைப்பையும் மிச்சப்படுத்துவதே இவ்வசதிகளின் நோக்கமாக உள்ளது. இது போன்ற அம்சங்களை பற்றிய கூடுதல் தகவல்களை கீழே உள்ள இணைப்பில் படித்து தெரிந்துகொள்ளலாம்.
– மு. இசக்கிமுத்து

