கால்பந்துத் திடலில் கடல் அலை

கால்பந்து ஆடுகளத்தில ஓடும் ஒரு வீரரின் முதுகில் இருக்கும் எண், வெறும் அடையாளத்திற்காக மட்டுமல்ல; அது அந்த ஆடையின் வடிவமைப்பிற்கு ஒரு முழுமையைத் தருகிறது. 2026 உலகக்கோப்பைக்காக போர்ச்சுகல் அணிக்கு பூமா (Puma) வடிவமைத்துள்ள புதிய சீருடை, ஒரு புதிய முயற்சியைக் கையாண்டுள்ளது.

அலைகளாக மாறும் எண்கள்

இந்த சீருடையின் மிக முக்கியமான சிறப்பம்சம் அதன் எண்கள், எழுத்துகள் வடிவமைக்கப்பட்ட விதம். வாஸ்கோடகாமாவின் கடல் பயணங்களால் நமக்கு அறிமுகமான போர்ச்சுகல் நாட்டின் நெடு நீண்ட கடற்கரை வரலாற்றை நினைவூட்டும் விதமாக, எண்கள் நேர்க்கோட்டில் இல்லாமல், லேசாக வளைந்து ‘அலை’ (Ocean Waves) போன்ற தோற்றத்தைக் கொண்டுள்ளன.

வீரர்கள் ஓடும்போது ஏற்படும் உடல் அசைவுகளுக்கு ஏற்ப, இந்த எழுத்துருக்களும் ஒருவித இயக்க உணர்வைத் தருகின்றன. பொதுவாக விளையாட்டுச் சீருடைகளில் எண்கள் தடிமனாகவும், நேராகவும் இருக்கும். ஆனால், இங்கே பூமா மிக மெல்லிய, வளைந்த வடிவமைப்பைத் தேர்ந்தெடுத்துள்ளது. இது சீருடையை பார்வைக்கு இலகுவாக்குகிறது. குறிப்பாக மிகவும் தனித்துவமான 7 என்ற எண்ணின் மேற்பகுதியும், கீழ்நோக்கி வரும் கோடும் சீராக இல்லாமல், கடலின் ஓட்டத்தைப் பிரதிபலிக்கும் வகையில் லேசாக வளைந்து இருக்கிறது.

உள்நாட்டு, வெளிநாட்டுச் சீருடைகளில் வண்ணக் கலவை

ஒரு முழுமையான வடிவமைப்பாக மாற்ற, இந்த எழுத்துருக்கள் இரண்டு வகைச் சீருடைகளிலும் வெவ்வேறு விதமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன:

சொந்த மண் சீருடை (Home Kit): புதிய சீருடையானது போர்ச்சுகல் அணியின் பாரம்பரியச் சிவப்பு நிறத்திலேயே உருவாக்கப்ப​ட்டுள்ளது. அதில் அலை வடிவ எழுத்துருக்கள் வெள்ளை நிறத்தில் இருக்கும். இதன் விளிம்புகளில் ஒரு தனித்துவமான பச்சை நிறக் கோடு (Green outline) கொடுக்கப்பட்டுள்ளது. இது சிவப்பு பின்னணியில் எண்களைத் உயர்த்திக் காட்டுவதோடு, போர்ச்சுகல் தேசியக் கொடியின் வண்ணங்களையும் பிரதிபலிக்கிறது. ஓர் அணி தனது சொந்த நாட்டில் விளையாடும்போது அணியும் முதன்மையான சீருடையே சொந்த மண் சீருடை ஆகும்.

மாற்றுச் சீருடை (Away Kit): வெள்ளை நிறத்தில் அமையும் மாற்றுச் சீருடையில், பெயர்கள், எண்கள் அடர் பர்கண்டி சிவப்பு (Burgundy Red) நிறத்தில் இருக்கும். இது மிகவும் அடர்ந்த நிறம் என்பதால், சில கோணங்களில் பழுப்பு நிறத்தைப் போலத் தோன்றி ஒரு கம்பீரமான தோற்றத்தைத் தருகிறது.

சர்வதேச அணிகளுடனான ஒப்பீடு

விளையாட்டுச் சீருடைகளில் இப்படி ஒரு தனித்துவமான எழுத்துருவைப் பயன்படுத்துவது புதியது அல்ல.

பிரேசில்: ஜாகுவார் புள்ளிகளுக்குள் மறைந்திருக்கும் ‘வீரம்’

உலகக்கோப்பையின்போதும் அதற்கு முந்தைய சில தொடர்களிலும் பிரேசில் பயன்படுத்திய சீருடை வடிவமைப்பு ஜாகுவார் புலி (Onça-pintada) என்ற கருப்பொருளைக் கொண்டது. இது அமேசான் காடுகளில் வாழும் ‘ஜாகுவார்’ புலியின் வேகம், புத்திசாலித்தனத்தை குறிக்கிறது. அதோடு இந்தச் சீருடையின் எண்களுக்குள் ஜாகுவார் புலியின் தோலில் உள்ள புள்ளிகள் நுண்ணிய அளவில் அச்சிடப்பட்டிருக்கும். இது பிரேசில் நாட்டின் சுவர் ஓவியக் கலை (Muralismo) பாணியால் ஈர்க்கப்பட்டது. தூரத்திலிருந்து பார்த்தால் வெறும் எண்களாகத் தெரியும், ஆனால் அருகில் பார்த்தால் அது ஒரு காட்டின் நிலப்பரப்பைப் போலக் காட்சியளிக்கும். இது நாங்கள் மைதானத்தில் வேட்டையாடத் தயாராக இருக்கிறோம் என்ற மறைமுக எச்சரிக்கையை எதிரணிக்கு வழங்கும் குறியீடாகும்.

நெதர்லாந்து: ‘அர்டெகோ’ கட்டிடக்கலையும் அச்சுக்கலையும்

நெதர்லாந்து அணி தனது சீருடையின் அச்சுக்கலையில் எப்போதும் ஓர் ஒழுங்கையும் நவீனத்தையும் கடைபிடிக்கும். இந்த எழுத்துருக்கள் டச்சு நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற வடிவமைப்பாளர் விம் குரோவெல் (Wim Crouwel) என்பவரின் ‘கிரிட்’ (Grid) பாணியால் ஈர்க்கப்பட்டவை என கூறப்படுகிறது. சீருடையில் உள்ள எண்களும் எழுத்துக்களும், சாதாரணமாக இல்லாமல், மிகத் துல்லியமான கோணங்களில் வெட்டப்பட்டிருக்கும். அதாவது ‘8’ அல்லது ‘O’ என்ற எழுத்தை எடுத்துக் கொண்டால், அது முட்டை வடிவில் இருக்காது. மாறாக, ஒரு எண்கோணத்தை வெட்டியது போல, அதன் மூலைகள் மிகச் சரியான கோணங்களில் (45° அல்லது 90°) திருப்பப்பட்டிருக்கும்.

இதனை நெதர்லாந்தின் நவீனக் கட்டிடக்கலை நுணுக்கங்களுடன் வடிவமைப்பாளர்கள் ஒப்பிடுகிறார்கள். “எங்கள் ஆட்டம் மைதானத்தில் ஒரு கட்டிடத்தின் வரைபடத்தைப் போலத் துல்லியமாக இருக்கும்” என்பதை இந்த எழுத்துருக்கள் பறைசாற்றுகின்றன.

நைஜீரியா: கழுகுகளின் இறக்கையும் வேகமும்

2018-ல் நைஜீரியா அறிமுகப்படுத்திய நைஜா (Naija) சீருடை வெளியான சில நிமிடங்களிலேயே 30 லட்சம் பேர் முன்பதிவு செய்த வரலாற்றுச் சாதனையைக் கொண்டது. இதன் குறுக்குமறுக்கான (Zig-zag) கோடுகள், நைஜீரியா அணியின் அடையாளமான கழுகின் (Super Eagles) இறக்கைகளைக் குறிக்கின்றன. இது “புவியீர்ப்பு விசையை மீறி ஒரு கழுகு பறப்பதைப் போல, எங்கள் அணியின் வேகமும் துடிப்பும் இருக்கும்” என்ற இளைஞர்களின் வேகத்தைப் பிரதிபலிக்கிறது. விளையாட்டு சீருடை என்பதைத் தாண்டி, இது புதிய ஆடை கலாசாரமாக (Streetwear) மாறிவிட்டது.

இந்தியாவிலும் கிரிக்கெட் சீருடைகளில் இத்தகைய அச்சுக்கலை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB): நவீனமும் வேட்கையும்

பெங்க​ளூரு அணியின் எழுத்துருக்கள் எப்போதும் ஒரு நவீனத் தோற்றத்தைக் கொண்டிருக்கும். சீருடையின் எழுத்துருவில் உள்ள கூர்மையான விளிம்புகள், அந்த அணியின் முத்திரையில் இருக்கும் சிங்கத்தின் நகங்களை (Lion’s Claws) நினைவூட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. எண்களின் வடிவமைப்பில் ஒரு லேசான ‘சாய்வு’ (Italic/Slant) இருக்கும். இது ‘வேகத்தைக்’ குறிக்கும் ஒரு குறியீடு.  

ராஜஸ்தான் ராயல்ஸ் (RR): பாரம்பரியத்தின் மீள் உருவாக்கம்

ராஜஸ்தான் அணி தனது எழுத்துருக்களில் ‘ஜெய்ப்பூர்’ நகரத்தின் ஆன்மாவை வைத்திருக்கிறது. சீருடையில் உள்ள எழுத்துருக்களின் விளிம்புகளை உற்று நோக்கினால், அரச காலத்துக் கோட்டை முகப்புகளின் சாயல் தெரியும். பல சமயங்களில் ​பிளவுபட்ட (Stencil) எழுத்துருக்களைப் பயன்படுத்தப்படுகிறது. இது பாரம்பரியச் சின்னங்களில் எண்களைச் செதுக்குவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு பழைய முறை.

சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK): நிலைத் தன்மை

சென்னை அணி அதன் கொள்கைகளைப் போலவே, எழுத்துருக்களிலும் ஒரு நிலைத்தன்மையைக் கடைபிடிக்கிறது. மற்ற அணிகள் அலை அலையாகவோ அல்லது கூர்மையாகவோ எழுத்துருக்களை மாற்றினாலும், சென்னை அணி பெரும்பாலும் தடிமனான, நேரடியான எழுத்துருவையே பயன்படுத்துகிறது. இது நிதான ஆட்டத்தை குறிப்பதாக வடிவமைப்பாளர்கள் கூறுகிறார்கள். அதிக அலங்காரங்கள் இல்லாததால், மைதானத்தின் கடைசி வரிசையில் அமர்ந்திருக்கும் ரசிகருக்கும் ‘7’ என்ற எண் மிகத் தெளிவாகத் தெரியும். இதே போல ஒவ்வொரு நாட்டின் விளையாட்டு சீருடைகளும் தம்முள் கதைகளை கொண்டே ஓடுகின்றன.

  • மு. இசக்கிமுத்து
Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now