மொழி மனிதரின் முக்கியமான படைப்புகளில் ஒன்று. எளிய ஒலிகளிலிருந்து தொடங்கி, காலப்போக்கில் கருத்து, உணர்ச்சி, தத்துவம், கலைநயம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் சிக்கலான அமைப்பாக அது வளர்ந்தது. மொழிகள் வெறும் தகவல் பரிமாற்றக் கருவிகளாக மட்டும் அல்லாமல் அவை அந்த மொழியைப் பேசும் நாகரிகத்தின் வாழும் பதிவுகளாக விளங்குகின்றன. வரலாறு, புவியியல் அடையாளம், தொழில்முறை மரபுகள், சமூக அமைப்புகள், நம்பிக்கைகள், வாழ்க்கைமுறை, உலகப் பார்வை ஆகிய அனைத்தையும் மொழி தன்னுள் தாங்கி நிற்கிறது.

உலகில் ஒரு மொழி தோன்றுவது இயற்கையான, காலநீடித்த செயல்முறை. உலகில் உள்ள அனைவருக்கும் பொதுவான மொழியாக உருவாக்க எண்ணி எல். எல். ஜாமென்ஹோஃப் என்பவரால் உருவாக்கப்பட்ட மொழியான எஸ்பெராண்டோ (Esperanto) மொழி போன்ற சில விதி விலக்குகளைத் தவிர முழுமையான மொழி தனி ஒருவரால் திட்டமிட்டு உருவாக்கப்படுவதில்லை; பல தலைமுறைகளின் தொடர்புகள், இடம்பெயர்வுகள், பண்பாட்டு பரிமாற்றங்கள், சமூகத் தேவைகள் ஆகியவற்றின் வழியே அது மெதுவாக வளர்கிறது. இலக்கணம், சொற்கள், உச்சரிப்பு ஆகியவை காலப்போக்கில் இயல்பாக சீரமைக்கப்படுகின்றன.
இந்த இயற்கை வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில், திரைப்படம், தொலைக்காட்சி தொடர் அல்லது கற்பனை உலகங்களுக்காக உருவாக்கப்படும் திடீர் மொழிகள் வியக்கத்தக்க அறிவாற்றல் முயற்சிகள். குறுகிய காலத்திற்குள் ஒலியியல் அமைப்பு, இலக்கண விதிகள், வாக்கிய அமைப்பு, பண்பாட்டு பின்னணி ஆகியவற்றை வடிவமைப்பது தலைமுறைகள் எடுக்கும் செயல்முறையைச் சுருக்கமாக நிறைவேற்றுவதற்குச் சமமானது. இம்மொழிகள் கதைகளுக்கு உயிரூட்டுவதோடு, கற்பனை நாகரிகங்களுக்கு தனித்துவ அடையாளத்தையும் நம்பகத்தன்மையையும் அளிக்கின்றன.இலக்கியம், சினிமா, தொலைக்காட்சி போன்ற துறைகளில் உருவாக்கப்பட்ட செயற்கை மொழிகளில் சில, சிக்கலான கட்டமைப்பும் பண்பாட்டு ஆழத்தால் தனிச்சிறப்பும் பெற்றுள்ளன.
2015ஆம் ஆண்டு வெளியான பாகுபலி திரைப்படத்துக்காக உருவாக்கப்பட்ட கிலிகி மொழி பார்வையாளர்களின் கவனத்தை கவர்ந்திருந்தது. ஒவ்வோர் ஒலியும் அந்த இனத்தின் பண்பையும் உணர்வையும் பிரதிபலிக்க வேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்ட கிலிகி, இந்திய சினிமாவில் புதிய முயற்சியாக அமைந்தது.
திரைப்படத்திற்காக புதிய மொழி உருவாக்குவது இந்திய சினிமாவில் அரிதானதாக இருந்தாலும், உலகத் திரைப்பட வரலாற்றில் இது நீண்ட காலமாக நடைபெற்று வரும் படைப்பாற்றல் முயற்சி. நாவி, கிளிங்கான், எல்விஷ், டோத்ராகி போன்ற மொழிகள் ஒவ்வொன்றும் கற்பனை நாகரிகங்களின் பண்பாடு, பழக்கவழக்கம், வரலாறு, உணர்ச்சி ஆகியவற்றை பிரதிபலிக்கும் மொழி உலகங்களாக உருவாக்கப்பட்டவை. இம்மொழிகள் கதையை வெறும் நிகழ்வுகளின் தொகுப்பாக அல்லாமல், தனித்த உலகம் கொண்ட பேரண்டமாக மாற்றுகின்றன.இந்த மொழிகள் உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்றுள்ளன. நாவி மொழி கற்றல் வகுப்புகள் பல நாடுகளில் நடத்தப்பட்டன; எல்விஷ் இன்று வரை ஆயிரக்கணக்கானோரால் படிக்கப்படுகிறது. பார்சல்டங் முழுமையான மொழி அல்லாதிருந்தாலும், அதன் ஒலி உலகளாவிய பொதுப்பண்பாட்டில் ஓர் அடையாளமாக நிலைத்துள்ளது.
ஒரு திரைப்படம் புதிய உலகை உருவாக்கும் போது, மொழியே அந்த உலகின் உயிர்நாடி ஆகிறது. இவ்வாறு திரைப்படங்களுக்காக உருவாக்கப்படும் மொழிகளை “கட்டமைக்கப்பட்ட மொழிகள் (Constructed Languages:Con-Lang)” என அழைக்கிறோம். திரைப்பட மொழிகள் இன்று தனி கலை வடிவமாகவும் உலகப் பண்பாட்டின் ஒரு பகுதியாகவும் வளர்ந்துள்ளன. திரையில் பிறந்த மொழிகளையும் அவை உருவான கதைகளையும் கொஞ்சம் விரிவாக அறிந்துகொள்வோம்.
- அருட்செல்வம்
