பார்செல்டங் — ஹாரி பாட்டர் உலகின் மர்ம மொழி
மொழி என்பது என்ன? சொற்களா? இலக்கணமா? அல்லது இரண்டும் இல்லாமலேயே ஓர் உயிரினம் இன்னொன்றை புரிந்துகொள்ளும் திறனா? இந்த கேள்விக்கு ஹாரி பாட்டர் உலகம் ஓர் அசாதாரண பதில் தருகிறது, பார்செல்டங் என்ற மர்ம மொழி வழியாக.
ஜே. கே. ரௌலிங் ஒரு “மொழி” உருவாக்க வேண்டும் என்று திட்டமிடவில்லை. அவர் ஒரு கதாபாத்திரத்தின் மரபை, அதன் இருண்ட அடையாளத்தை வெளிப்படுத்தும் கருவி ஒன்றைத் தேடினார். அதன் விளைவாக உருவானதுதான் பார்செல்டங் — பாம்புகளுடன் பேசும் திறன். இது கற்றுக்கொள்ளக்கூடிய மொழியாக அமைக்கப்படவில்லை; மாறாக, ஒரு மாயத் திறனாகவே கருதப்பட்டது. ஒருவர் பார்செல்மவுத்தாகப் பிறந்திருந்தால், எந்த பயிற்சியும் இல்லாமல் இயல்பாகவே அதைப் பேசுவார்; இல்லையென்றால், எந்த முயற்சியும் பலிக்காது. இங்குதான் பார்செல்டங் மற்ற எல்லா கட்டமைக்கப்பட்ட மொழிகளிலிருந்தும் அடிப்படையில் வேறுபடுகிறது.
டோல்கினின் குவென்யா (Quenya), கேம் ஆப் துரோன்சின் டோத்ராகி போன்ற மொழிகள் அனைத்தும் கட்டமைக்கப்பட்ட மொழி (Constructed Language) உலகின் முழுமையான உருவங்கள். ஆனால் பார்செல்டங் அந்த வழியில் செல்லவில்லை. ரௌலிங் அதை ஒரு கற்கக்கூடிய மொழியாக உருவாக்கவில்லை; இதற்கு எந்த சொல்லகராதியோ, இலக்கண கட்டமைப்போ அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
இந்த குறைபாடே அதன் வலிமை. பார்செல்டங்கை விரிவுபடுத்தாமல் வைத்திருப்பதன் மூலம் அதன் மர்மம் பாதுகாக்கப்படும் என்று கருதினார் ரௌலிங். ஒரு முழுமையான இலக்கண நூல் இருந்திருந்தால், அது ரசிகர் கற்றுக்கொள்ளும் பொழுதுபோக்கு மொழியாக மாறியிருக்கும். ஆனால் இங்கு நோக்கம் வேறு. நடிகர்களால் உச்சரிக்கப்படக்கூடியதாக இருக்க வேண்டும், ஆபத்தான ஒலி வீச்சு இருக்க வேண்டும், பாம்பின் இயல்புக்கு பொருத்தமாக இருக்க வேண்டும் என்பதே படைப்பாளரின் குறிக்கோளாக இருந்தது.

திரையில் பார்செல்டங்கை உயிர்ப்பிக்க நியமிக்கப்பட்டவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகப் பேராசிரியர் பிரான்சிஸ் நோலன். அவர் ஒலியியல், ஒலியமைப்பியல், தடயவியல் மொழியியல் ஆகியவற்றில் விற்பன்னர். அவர் பிரிட்டிஷ் கல்விசார் ஒலியியலாளர்கள் சங்கத்தின் தலைவராக இருந்தார். அவர், ஜான் எஸ்லிங்குடன் இணைந்து, 1999 ஆம் ஆண்டு வெளியான சர்வதேச ஒலியியல் சங்கத்தின் கையேட்டின் இணை ஆசிரியர்களில் ஒருவராக இருந்தார்.
அவர் வெறும் ஒலிகளை மட்டும் உருவாக்கவில்லை — ஒரு மொழியியல் கட்டமைப்பை வடிவமைத்தார். உலகில் பெரும்பாலான மொழிகள் எழுவாய்- பயனிலை – வினை (SOV) அல்லது எழுவாய்-வினை-பயனிலை (SVO) வரிசையைப் பின்பற்றுகின்றன. ஆனால் இங்கு வினை-எழுவாய்- பயனிலை என்ற வரிசை பின்பற்றப்படுகிறது. இது மிகவும் அசாதாரணமான மொழியியல் தேர்வு.
பாம்பின் உடலமைப்பை அடிப்படையாக கொண்டு, உதட்டொலிகளை (labial consonants) நீக்கினார். அதாவது ப , ம, வ போன்ற எழுத்துக்களை உச்சரிக்க உதடுகளை மூட வேண்டும். பாம்புக்கு அந்த திறன் இல்லை. அதனால் நோலன் இந்த ஒலிகளை பார்செல்டங்கில் இருந்து முற்றிலும் நீக்கினார். பாம்பு உண்மையிலேயே பேசுவது போல இருக்க வேண்டும் என்பதற்காக தொண்டை ஆழொலிகளை சேர்த்தார் (Pharyngeal Consonants). இவை தொண்டையின் ஆழப்பகுதியில் உருவாகும் மெய் ஒலிகளாகும். நாக்கின் அடிப்பகுதி தொண்டையை நோக்கி நெருங்கும்போது காற்று உராய்ந்து வெளியேறுவதால் இவ்வொலி உருவாகிறது. உலக மொழிகளில் அரிதாகக் காணப்படும் இந்த ஒலிகள் அரபு போன்ற சில மொழிகளில் முக்கியமாக இடம்பெறுகின்றன.
பேசும் போது காற்று ஒரு குறுகிய இடைவெளியில் உராய்ந்து வெளியேறும்போது உருவாகும் மெய் ஒலிகளை உராய்வொலி (Frigatives) என்று அழைப்பர். ஸ், ஷ், ஹ் போன்ற உராய்வொலிகள் அதிக எண்ணிக்கையில் பயன்படுத்தப்பட்டன. பாம்பின் இயல்பான ‘ஹிஸ்’ சத்தமே இந்த வகைதான்.
அதேபோல், “க்”, “ட்” போன்ற முழுத்தடை ஒலிகள் (Plosive), “ச்”, “ஜ்” போன்ற கலப்பொலிகள் (Affricate), “ல்”, “ள்” போன்ற பக்கவழி மெய்யொலிகள் (Lateral consonant) ஆகியவையும் இதில் இடம்பெறுகின்றன.
“ர்”, “ற்” போன்ற நடுக்கொலிகள் (Trill/Tap), “ம்”, “ந்”, “ங்” போன்ற மூக்கொலிகள் (Nasal consonant), “ஐ”, “ஔ” போன்ற இரட்டுயிரொலிகள் (Diphthong) ஆகிய ஒலிகளும் சேர்ந்து, இந்த மொழிக்கு தனித்துவமான ஒலி அமைப்பை உருவாக்குகின்றன.
ஹாரி பாட்டர் திரைப்படங்களில்ள, நடிகர்கள் பேசும் குரலின் திசையை மாற்றி, பின்னணியில் பாம்பு ஒலி அடுக்குகள் சேர்த்து, மனிதக் குரல் அல்லாத ஓர் “உயிர்” பேசுவது போல வடிவமைக்கப்பட்டது. புத்தகங்களில், ஜே. கே. ரௌலிங் பார்செல்டங்கை சில கிசுகிசு சொற்களாக மட்டுமே காட்டுகிறார். ஆனால் திரைப்படத்தில் அது முழுமையான ஒலி அனுபவமாக மாறுகிறது.இங்கு கருத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால், பார்செல்டங் மொழியின் இலக்கண விதிகள், சில சொற்களின் விளக்கங்கள் அதிகாரப்பூர்வமாக முழுமையாக வெளியிடப்படவில்லை. எனவே, இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள சில இலக்கண விளக்கங்களும் பயன்பாட்டு குறிப்புகளும் ரசிகர்கள் உருவாக்கிய (holparseltongue.weebly.com) இணையதளத்தில் உள்ள தகவல்களைக் கொண்டு எழுதப்பட்டுள்ளன.
பார்செல்டங் மொழியில் கேள்வி அமைப்பு சற்று வேறுபட்டதாக இருக்கும். தமிழில் “நீ எங்கே போகிறாய்?” என்று கேள்விச் சொல் நடுவில் வரும். ஆனால் பார்செல்டங்கில், அந்த கேள்விச் சொல் வாக்கியத்தின் இறுதியில் இடம் பெறும்.
இதை எளிமையாக புரிந்துகொள்ள, “நீ எங்கே போகிறாய்?” என்ற வாக்கியத்தை “நீ போகிறாய் எங்கே?” என்று மாற்றிக் கொள்ளலாம். அதாவது, நபரும் செயலும் (போகிறாய்) முதலில் வந்து, கேள்விச் சொல் (எங்கே) கடைசியில் வருகிறது.
இதேபோல், பார்செல்டங்கில் “யார் (Haʃ), என்ன (Teʃ), எப்போது (Fiʃ), ஏன் (Vuʃ), எங்கு (Doʃ), எப்படி (Baʃ)” போன்ற கேள்விச் சொற்கள் எல்லாம் “ஷ் (ʃ)” ஒலியில் முடிவதால், அவற்றை ஷ்-சொற்கள் (esh-words) என்று அழைக்கிறார்கள். இது கேள்விகளை அமைக்க உதவும் ஒரு முக்கியமான இலக்கண அம்சமாகும்.
பார்செல்டங் மொழியில், சொற்களின் இறுதி அவற்றின் வகையை அறிய உதவுகிறது. பொதுவாக “நா” (na) என்று முடியும் சொற்கள் பெயரடைகள் (na-words) — எ.கா: Firna (சூடான), Tina (சிறிய). “நே/நீ” (ne) என்று முடியும் சொற்கள் வினையடைகள் (ne-words) — எ.கா: Derne (மெதுவாக), ʃine (வேகமாக).தமிழில் “வேகமான பையன்” → “வேகமாக ஓடுகிறான்” என்று மாறுவது போல, பார்செல்டங்கிலும் “நா” என்பதை “நீ” ஆக மாற்றினால், பெயரடை வினையடையாக மாறும்.
பார்செல்டங் மொழியில் எண்ணிக்கை முறை எளிமையானது. “1” என்பது “i”; அதற்கு “si” சேர்த்தால் அடுத்த எண்கள் உருவாகும் — isi (2), isisi (3), isisisi (4). எண்ணிக்கை அதிகரிக்கும் போது சொல்லின் நீளமும் அதிகரிக்கும். எழுத்தில் “I, II, III” என்று எழுதினாலும், உச்சரிப்பு “i, isi, isisi” என்றே இருக்கும். “sisisisi” என்பது “பல” என்று பொருள் தரும். “எண்ணுதல்” என்பது கனுஷே (kaunʃe) என்று அழைக்கப்படுகிறது.
பார்செல்டங் என்பது ஒரு செயற்கை மொழி மட்டுமல்ல, ஓர் அனுபவம். ஒரு கதாபாத்திரத்தின் பயணத்தை முன்னெடுத்து, கற்பனை உலகத்தை உண்மை போல உணர்த்தும் ஒலி வடிவம். ஒலி உருவாக்கத்தின் மூலம் உயிர் பெற்ற மொழிகளில், பார்செல்டங் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது.
வெறும் ஒலியாக மட்டும் அல்லாமல் மிரட்டும் சொற்களுடனும் கிளிக் என்ற ஒலியுடனும் உருவாக்கப்பட்ட மற்றொருமொரு திரையில் பிறந்த மொழியான கிளிக்கி/கிலிகிலி பற்றி அடுத்த கட்டுரையில் காணலாம்.
- https://www.phonetics.mmll.cam.ac.uk/people/francis-nolan
- https://harrypotter.fandom.com/wiki/Francis_Nolan
- https://holparseltongue.weebly.com/
- அருட்செல்வம்
