அரியணையில் விளையாடும் மொழிகள்.
பெரும் கற்பனை உலகங்களை உருவாக்கும் போது மொழி எவ்வளவு முக்கியமானது என்பதை உலகுக்கு மீண்டும் உணர்த்திய தொலைக்காட்சித் தொடராக திகழ்கிறது கேம் ஆஃப் த்ரோன்ஸ் (Game of Thrones). உலகப் புகழ் பெற்ற, பல்வேறு விருதுகளை அள்ளிக் குவித்த இந்தத் தொடர், எழுத்தாளர் ஜார்ஜ் ஆர். ஆர். மார்ட்டின் எழுதிய ஏ சாங் ஆஃப் ஐஸ் அண்ட் பயர் (A Song of Ice and Fire) நாவல் தொடரை அடிப்படையாகக் கொண்டு உருவானது. ஆனால் இது வெறும் அரசியல் சதிகள், போர்கள், அரியணைப் போட்டிகளின் கதை மட்டுமல்ல; பல இனங்களும் பல்வேறு பண்பாடுகளும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து வாழும் ஒரு விரிந்த உலகத்தின் கதை.
அந்த உலகில் ஒவ்வோர் இனமும் தனித்த வரலாற்றையும் வாழ்க்கை முறையையும் கொண்டிருக்கிறது. அவர்களின் ஆடை, ஆயுதம், வழக்கங்கள் மட்டுமல்ல, அவர்களின் மொழியும் அந்த அடையாளத்தின் முக்கியமான பகுதியே. அதனால்தான் இந்தத் தொடரின் படைப்பாளர்கள், அந்த உலகம் உண்மையில் எங்கோ இருப்பதைப் போலத் தோன்றச் செய்ய, டோத்ராகி, வாலீரியன் போன்ற மொழிகளை திட்டமிட்டு உருவாக்கினர். ஒவ்வொரு சொல்லும் அந்த இனங்களின் வாழ்க்கை அனுபவங்களிலிருந்து பிறந்ததுபோல் ஒலிக்கிறது; ஒவ்வொரு வாக்கியமும் அவர்களின் கலாசாரத்தைச் சுமந்து செல்கிறது.

இவ்வாறு வடிவமைக்கப்பட்ட இந்த மொழிகள், திரையில் காணப்படும் காட்சிகளுக்கு வெறும் பின்னணி அலங்காரம் அல்ல. மாறாக, அந்தக் கற்பனை உலகின் இதயத் துடிப்பைப் போல செயல்படுகின்றன. அதனால்தான் இந்த மொழிகள் ஒலிக்கும் போது, பார்வையாளர்கள் வெறும் கதையைப் பார்ப்பதில்லை, அவர்கள் அந்த உலகுக்குள் நுழைந்து அதன் மக்களோடு வாழ்வதைப் போல உணர்கிறார்கள்.
இந்த மொழிகளை திரைக்கு உகந்தவாறு வடிவமைத்தவர் அமெரிக்க மொழியியல் அறிஞர் டேவிட் ஜே பீட்டர்சன். மொழிகளை உருவாக்குவதில் வல்லுநர் ஆன அவர், லங்குவேஜ் கிரியேஷன் சொசைட்டி (Language Creation Society) நடத்திய போட்டியில் வெற்றி பெற்று இந்தப் பணியைப் பெற்றார். தொடரை தயாரித்தவர்கள் அவருக்கு ஜார்ஜ் ஆர். ஆர். மார்ட்டின் நாவல்களில் இருந்த சில சொற்கள், குறிப்பு வாக்கியங்களை மட்டுமே வழங்கினர். அந்தச் சிறிய அடிப்படையை வைத்து முழுமையான இலக்கண அமைப்பும் ஆயிரக்கணக்கான சொற்களும் (3000-க்கும் மேல்) கொண்ட மொழிகளை உருவாக்குவது அவரது பொறுப்பாக இருந்தது.
இந்த தொலைக்காட்சி தொடருக்காக முதலில் உருவாக்கப்பட்ட மொழி டோத்ராகி. இந்த மொழி பேசப்படுவது மேய்ச்சல் வாழ்க்கையை வாழும் போர்முனை குதிரைப்படை இனமான டோத்ராகி மக்களிடையே. வன்முறையும் போரும் அவர்கள் வாழ்வின் முதன்மை அம்சம். அதனால் மொழியிலும் குதிரை, போர், பயணம் போன்ற கருத்துகளுக்கான சொற்கள் மிகுந்தளவில் காணப்படுகின்றன. டோத்ராகி மொழியின் ஒலியமைப்பு கடினமாகவும் வலுவாகவும் இருக்கும். இவ்வாறான இலக்கணமும் ஒலியமைப்பும் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டதால், டோத்ராகி வெறும் ஒலிகளின் தொகுப்பாக இல்லாமல் இயல்பான மொழியைப் போல செயல்படுகிறது.
ஒலியியல் அமைப்பில், டோத்ராகி மொழி தனித்துவமான தன்மையைக் கொண்டுள்ளது. (“kh”, “zh”, “ch”, “sh”, “th”) போன்ற இணையொலிகள் இதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன; இவ்வொலிகள் சேர்ந்து மொழிக்கு ஒரு வலுவான, கரடுமுரடான ஒலியினை வழங்குகின்றன. இந்த ஒலி அமைப்பு, ஸ்பானிஷ், அரபிக் மொழிகளின் சில ஒலித்தன்மைகளை நினைவூட்டும் வகையில் வடிவமைத்துள்ளார் பீட்டர்சன்.
இலக்கண ரீதியாக, டோத்ராகி மொழி கருப்பொருள்–வினை–பொருள் (Subject–Verb–Object) என்ற வரிசையைப் பின்பற்றுகிறது. இதனால் வாக்கியங்கள் தெளிவாகவும் நேரடியாகவும் அமைவதைக் காணலாம். எடுத்துக்காட்டாக, “அன்ஹா டோத்ராகி (Anha dothrak)” என்பது “நான் சவாரி செய்கிறேன்” என்றும், “கால் ஆஹாஸ் அராக் (Khal ahhas arakh)” என்பது “கால் வாளை கூர்மையாக்கினான்” என்றும் பொருள் தருகின்றன.
டோத்ராகி மொழியில் பெயர்ச்சொற்கள் உயிருள்ளவை, உயிரற்றவை என இரண்டு வகைகளாகப் பிரிகின்றன. உயிருள்ள பெயர்ச்சொற்கள் மட்டுமே பன்மை வடிவம் பெறும் என்பது முக்கியமான விதியாகும். எடுத்துக்காட்டு: ராக் (rakh-சிறுவன்) என்பது உயிருள்ள பெயர்ச்சொல்; அதன் பன்மை வடிவம் ராகிஸ்/ராகின் (rakhis / rakhin -சிறுவர்கள்) ஆகும். ஆனால் அராக் (arakh-வாள்) என்பது உயிரற்ற பெயர்ச்சொல்; இது பொதுவாக பன்மை வடிவத்தில் மாறாது. மேலும், பெயர்ச்சொற்கள் கருப்பொருள் (nominative), பொருள்(accusative), உரிமை (genitive), நோக்கி (allative), விலகி(ablative) என ஐந்து வேற்றுமைகளில் மாறுகின்றன, இது மொழிக்கு ஓர் இலக்கண கட்டமைப்பை வழங்குகிறது.
வினைச்சொற்கள் பகுதியில், டோத்ராகி மொழியின் அடிப்படை வடிவங்கள் பொதுவாக “ல்அட்[-(l)at]” என்ற இறுதிச்சேர்க்கையுடன் முடிவடைகின்றன; எடுத்துக்காட்டாக “டோத்ராலட் (dothralat)” என்பது “சவாரி செய்ய” என்று பொருள். மேலும், இந்த மொழியின் மிகச் சுவாரஸ்யமான அம்சங்களில் ஒன்று, (is/am/are) என்ற இணைப்பு வினை இல்லாததே ஆகும். இரண்டு சொற்களை நேரடியாக இணைப்பதன் மூலம் பொருள் உருவாகிறது; உரிச்சொற்கள் பொதுவாக பெயர்ச்சொல்லுக்குப் பின்னால் வரும், மேலும் அவை அந்த பெயர்ச்சொல்லின் வேற்றுமைக்கும் எண்ணிக்கைக்கும் ஏற்ப மாற்றம் அடையும். இதனால் வாக்கிய அமைப்பு இயல்பாக தோன்றுகிறது.
டோத்ராகி மொழியின் சொல்லகராதியில் அதன் மரபு அடையாளம் தெளிவாக எதிரொலிக்கிறது. கடல் சார்ந்த வாழ்க்கை முறையின் காரணமாக, “கப்பல்” என்பதற்கான தனிப்பட்ட சொல் இதில் இல்லை; அதற்குப் பதிலாக ஹராஷீப் இடோ (hrazef ido-மரக்குதிரை) என்ற உருவகச் சொல் பயன்படுத்தப்படுகிறது. அதேபோல், வணிக செயல்பாடுகள் குறைவாக உள்ள சமூகம் ஆகையால், “நன்றி” என்பதை குறிக்கும் தனிப்பட்ட சொல் இந்த மொழியில் இல்லை.
வலீரியன் மொழி அதற்கு மாறுபட்ட தன்மையைக் கொண்டது. வலீரியன் ஒருகாலத்தில் வலிமையான பேரரசின் மொழியாக இருந்தது என்ற கற்பனை பின்னணியைக் கொண்டது. அதனால் அதன் ஒலி மென்மையாகவும் இசையோடு கலந்ததாகவும் வடிவமைக்கப்பட்டது. தொடரில் நாம் கேட்பது பெரும்பாலும் “ஹை வாலீரியன்” வடிவமும் அதன் பல்வேறு வட்டார வடிவங்களும்தான். இந்த மொழியில் வினைச்சொற்களும் பெயர்ச்சொற்களும் பல்வேறு வடிவங்களில் மாறும் சிக்கலான இலக்கண அமைப்புகள் உள்ளன. பாலினம், எண்ணிக்கை, உருபு போன்றவற்றின் அடிப்படையில் சொற்களின் வடிவம் மாறுவது இதன் முக்கியமான அம்சமாகும். இந்த அமைப்பு பழைய வரலாற்று மொழிகளை நினைவூட்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
ஹை வலீரியனில் சொற்களின் முடிவுகளே முக்கியம். ஒரு சொல்லின் இறுதியில் வரும் மாற்றங்கள் அதன் வாக்கியத்தில் உள்ள பங்கைத் தெரிவிக்கும். இதுவே “விகுதி அமைப்பு” என்று அழைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டு, “டிராகன் ராணியை பார்க்கிறது” என்ற கருத்தை எடுத்துக்கொண்டால், இதில் யார் செய்பவர், யார் செயப்படுபவர் என்பதைக் காட்டுவது சொல் வரிசை அல்ல, சொல்லின் முடிவுகள்தான். இதனால், சொற்களின் வரிசை மாறினாலும் பொருள் மாறாமல் இருக்கும்.
ஹை வலீரியன் மொழியில் ஒரே கருத்தை பல்வேறு வாக்கிய அமைப்புகளில் வெளிப்படுத்த முடியும். இதில் எந்த பகுதியை வலியுறுத்த விரும்புகிறோம் என்பதன் அடிப்படையில் சொற்களின் வரிசை மாறுகிறது. இப்படியான நெகிழ்வுத்தன்மை பழமையான மொழிகளின் ஒரு முக்கியச் சிறப்பாகும். ஆகவே, இந்த மொழியைப் புரிந்துகொள்ளும்போது சொற்களின் நிலையை மட்டும் பார்க்காமல், அவற்றின் இலக்கண குறியீடுகளை கவனிப்பதே மிகவும் முக்கியமானது.
இதனால் சொற்களின் உருவாக்கத்திலும் ஒரு திட்டமிட்ட அணுகுமுறை உள்ளது. இந்த மொழியில் வரும் பல சொற்கள் வலீரியன் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. டிராகன்கள் இந்த பண்பாட்டின் மையமாக இருப்பதால், அதனைச் சுற்றி பல சொற்கள் உருவாக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டு, சால்ட்ரீஸ் (Zaldrīzes) என்பது டிராகன் என்பதைக் குறிக்கும், ட்ரகாரிஸ் (Dracarys) என்பது டிராகன் தீயைக் குறிக்கும் கட்டளை, சவ்ஸ் (Sōvēs) என்பது பற என்பதைக் குறிக்கும். அதேபோல், அதிகாரம், அரசியல் அமைப்பைச் சுற்றியும் பல சொற்கள் உள்ளன; டாரியா (Dāria: அரசர் / அரசி), டாரிலரோஸ் (Dārilaros:இளவரசர்), ரபகோன் (Rēbagon: ஆட்சியாளர்/ஆளுநர்) போன்றவை அந்த சமூகத்தின் படிநிலைகளை வெளிப்படுத்துகின்றன. அன்றாட வாழ்க்கைக்கான சொற்களும் இந்த மொழியில் காணப்படுகின்றன; அப்ரா (Ābra: பெண்), வள (vala: ஆண்) போன்றவை எளிய தொடர்பாடலுக்கு பயன்படுகின்றன.
இந்த மொழி உருவாக்கப்பட்ட விதமும் அதன் பண்பாட்டுப் பின்னணியுடன் நேரடியாக தொடர்புடையது. கேம் ஆப் துரோன்ஸ் உலகில் வலீரியன் பேரரசு ஒரு பழமையான, சக்திவாய்ந்த நாகரிகமாகக் காட்டப்படுகிறது. அதனால், அதன் மொழியும் உயர்ந்ததாகவும் செம்மையானதாகவும் இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டது. இந்த அணுகுமுறை, லத்தீன், கிரேக்கம் போன்ற பழமையான பேரரசு மொழிகளின் தாக்கத்தை நினைவூட்டுகிறது.
இவ்வாறு டோத்ராகி, வலீரியன் போன்ற மொழிகள் கற்பனை உலகத்தை வெறும் காட்சிகளாக அல்லாமல் உயிருள்ள நாகரிகங்களாக மாற்றின. மொழி என்பது வெறும் உரையாடலுக்கான கருவி மட்டுமல்ல; அது ஓர் இனத்தின் வரலாறு, பண்பு, உலகக் கண்ணோட்டம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் சக்தி என்பதையும் இந்தத் தொடர் மீண்டும் நினைவூட்டியது.
அறிவியல் புனைவுக் கதை உலகத்தை மட்டும் அல்லாமல், மொழிகளின் உலகத்தையும் புதிதாக சிந்திக்க வைத்த ஸ்டார் ட்ரெக் தொடரில் பிறந்த கிளிங்கன் எனும் கற்பனை மொழி எப்படி ஓர் உண்மை உலக அனுபவமாக மாறியது? அந்த வித்தியாசமான பயணத்தை அடுத்த வாரம் தொடங்கலாம்.
- அருட்செல்வம்
1. கேம் ஆப் துரோன்ஸ் பிரிட்டானிகா
2. Language Creation Society official site;
3. Peterson interviews (WIRED, TED Talk).
