ரோல்ட் தாலின் விந்தையான படைப்புகளுக்கு ஒரே மாதிரியான தோற்ற முகவரியை வடிவமைத்திருக்கிறது நெட்பிளிக்ஸ்.

தொழில்நுட்ப திரைகளின் யுகத்தில் ஒரு வணிக முத்திரை (Brand) நுகர்வோரின் மனத்தில் எப்படி இடம்பிடிக்கிறது? வண்ணமயமான விளம்பரங்கள், கவர்ச்சிகரமான காணொளிகள் ஆகியவற்றைத் தாண்டி, ஒரு முத்திரையின் ஆன்மாவைத் தீர்மானிப்பது அதன் அச்சுக்கலை வடிவமைப்புதான். இலக்கிய உலகில் தனக்கென ஒரு மாபெரும் அடையாளத்தை உருவாக்கிய ரோல்ட் தால் படைப்புகளை, உலகளாவிய ஒளிபரப்பும் தளமான நெட்பிளிக்ஸ் வாங்கிய பிறகு, அதற்கு அவர்கள் கொடுத்துள்ள புதிய அச்சுக்கலை வடிவமைப்பு இதற்கு ஒரு சிறப்பான உதாரணம்.
ரோல்ட் தாலின் எழுத்து நடை
நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் இந்த மாபெரும் அச்சுக்கலை உத்தியைப் புரிந்துகொள்வதற்கு முன்னால், ரோல்ட் தாலின் அசல் எழுத்து நடை எப்படிப்பட்டது என்பதை நாம் உணர்வது அவசியமாகும். அவர் குழந்தைகளுக்கான கதைகளை எழுதினாலும், அவரது அசாத்திய கற்பனைத் திறனும் எழுத்து பாணியும் முற்றிலும் விந்தையானவை.
பெரும்பாலான குழந்தைக் கதை எழுத்தாளர்கள், “சமத்துப் பிள்ளையாக இருக்க வேண்டும்” என்று நீதி போதனைகளை எழுதிக் கொண்டிருந்த காலத்தில், தால் முற்றிலும் மாறுபட்டார். குழந்தைகளுக்குள் இருக்கும் குறும்புத்தனம், பெரியவர்கள் மீதான அவர்களின் பயத்தையும் கோபத்தையும், அவர் அப்படியே தன் எழுத்தில் கொண்டு வந்தார்.

குழந்தைகள் கதைகள் என்றாலே எல்லாம் இனிமையாக இருக்க வேண்டும் என்ற விதியை அவர் உடைத்தார். கதைகளில் ஒருவிதமான இருண்ட, வித்தியாசமான நகைச்சுவையைப் புகுத்தினார். சூனியக்காரிகள் குழந்தைகளை எலியாக மாற்றுவது போன்ற ஆபத்தான, பயமுறுத்தும் கற்பனைகள் வாசகர்களை அவரது புத்தகங்களை நோக்கிச் சுண்டி இழுத்தன.
தனக்குத் தேவையான உணர்வுகளை வெளிப்படுத்த ஆங்கிலத்தில் போதிய சொற்கள் இல்லை என்று தோன்றியபோது, அவரே புதிய சொற்களை உருவாக்கினார். அதற்கு ‘காபிள்ஃபங்க்’ (Gobblefunk) என்று பெயர். இத்தகைய விளையாட்டுத்தனம் மிக்க எழுத்து நடைக்கு அச்சு வடிவம் கொடுப்பது என்பது அச்சுக்கலைஞர்களுக்கு சவாலானதுதான்.
மாபெரும் வணிகக் கொள்முதலும் நெட்பிளிக்ஸின் உத்தியும்
கடந்த 2021-ஆம் ஆண்டில், நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரோல்ட் தாலின் கதைகளையும், கதாபாத்திரங்களையும் அவற்றின் ஒட்டுமொத்தப் பதிப்புரிமைகளையும் நிர்வகித்து வந்த ‘ரோல்ட் தால் கதை நிறுவனம்’ (The Roald Dahl Story Company – RDSC) என்ற நிறுவனத்தை முழுமையாக விலைக்கு வாங்கியது.
இந்தக் கொள்முதலின் நோக்கம் வெறுமனே புத்தகங்களை இணையத்தில் வெளியிடுவது மட்டுமல்ல; ‘சார்லி அண்ட் தி சாக்லேட் ஃபேக்டரி’, ‘மாடில்டா’, ‘தி பி.எஃப்.ஜி’ போன்ற ரோல்ட் தாலின் உலகப் புகழ்பெற்ற பல கதைகளையும் ஒரே ஒரு மின்னிமக் குடையின் கீழ் கொண்டு வந்து, ஒரு ‘கதை உலகத்தை’ (Story Universe) உருவாக்குவதே நெட்பிளிக்ஸின் தனித்துவமான உத்தி ஆகும்.

ஒரே மாதிரியான தோற்ற முகவரி
நெட்பிளிக்ஸ் போன்ற ஒரு பன்னாட்டு நிறுவனம் 20 வெவ்வேறு கதைகளைக் கையாளும்போது, அவர்களுக்கு இருந்த மிகப்பெரிய சவால் ‘காட்சி ஒருமைப்பாடு’ (Visual Consistency) ஆகும். ரோல்ட் தாலின் கதைகள் ஒவ்வொன்றும் அதன் தனித்துவமான இருண்ட நகைச்சுவை, வித்தியாசமான உலகத்தைக் கொண்டிருப்பதால், அந்தந்தக் கதையின் ஆன்மா கெடாமல், அதே நேரத்தில் நுகர்வோரால் அதை ஒரே தொகுப்பாகப் புரிந்து கொள்ளக்கூடிய ஒரு பொதுவான வடிவமைப்பு தேவைப்பட்டது.
இதைத் தீர்க்கவே, அவர்கள் ‘ஒரே மாதிரியான தோற்ற முகவரி’ (Consistent Visual Identity) என்ற கோட்பாட்டைக் கையில் எடுத்தனர். இதற்காக ‘பாக்ஸ்டர் & பெய்லி’ என்ற வடிவமைப்பு குழு உருவாக்கப்பட்டது. அவர்கள் ஒவ்வொரு கதைக்கும் அதன் தன்மைக்கு ஏற்ப, விளையாட்டுத்தனமான, துடிப்பான, ஆனால் அதே நேரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை போன்ற தோற்றமளிக்கும் 20 புதிய ‘முத்திரைத் தலைப்புகளை’ (Logotitles) உருவாக்கினர்.
அடித்தளம் மாறாத மறுவடிவமைப்பு
ஓர் அடையாளத்தை நவீனப்படுத்த வேண்டும் என்பதற்காக அதன் பாரம்பரியத்தை முற்றிலும் அழித்துவிடக் கூடாது என்பதில் வடிவமைப்புப் பொறியாளர்கள் மிகக் கவனமாக இருந்தனர். ‘ஃபெண்டாஸ்டிக் மிஸ்டர் ஃபான்ட்’ (Fantastic Mr.Font) என்ற எழுத்துருதான் ரோல்ட் தாலின் புத்தகங்களில் பயன்படுத்தப்பட்டது. அவருடைய எழுத்து நடைக்கு தனித்துவமான வடிவத்தை கொடுப்பதாக இருந்தது. அதனை எமிலி ஓபர்மேன் என்பவர் உருவாக்கியிருந்தார். புதிய வடிவமைப்பு குழு இந்த அசல் அடித்தளத்தை அப்படியே பயன்படுத்திக் கொண்டது. அந்த எழுத்துருவில் இருந்த 19 குறிப்பிட்ட எழுத்துரு வடிவங்களை மட்டும் எடுத்து, கொஞ்சம் புது மெருகூட்டி மீண்டும் வடிவமைத்தனர்.
இதன் விளைவாக, தாலின் எழுத்தில் உள்ள குறும்புத்தனம் மாறாமல், ஆனால் புதிய வடிவம் கிடைத்தன. ஆனால், அவை அனைத்தும் ‘ரோல்ட் தால்’ என்ற ஒரே தோற்ற முகவரியின் கீழ் கச்சிதமாகப் பொருந்தின.
ஒரே குடைக்குள்
இவர்கள் மேற்கொண்ட இந்த அச்சுக்கலை உத்தி என்பது வெறும் புத்தகங்களின் அட்டைப்பட எழுத்துருக்களை மாற்றுவதோடு நின்றுவிடவில்லை. இது அனைத்து வணிக தளங்களிலும் பயன்படுத்துவதை கருத்தில் கொண்டே வடிவமைக்கப்பட்டது.
இந்த ஒரே மாதிரியான தோற்ற முகவரி இனிவரும் காலங்களில் பின்வரும் நான்கு உலகளாவிய வணிகத் தளங்களில் முக்கியமாக பயன்படுத்தப்படும்:
நெட்பிளிக்ஸ் செயலியைப் பயனர்கள் திறக்கும்போது, திரைப்படங்கள் அல்லது இயங்குபட தொடர்களின் தலைப்பு அட்டைகளிலும் சிறுபடங்களிலும் (Thumbnails) இந்த எழுத்துருக்களே தோன்றும்.
திரைப்படங்களின் விளம்பரப் பலகைகள், முன்னோட்டக் காணொளிகள், விளம்பரச் சுவரொட்டிகள் அனைத்திலும் இந்த முத்திரைத் தலைப்புகளே பயன்படுத்தப்படும்.
கதாபாத்திரங்களை மையமாக வைத்து உருவாக்கப்படும் உடைகள், பொம்மைகள், விளையாட்டுப் பொருள்கள், நுகர்பொருள்களின் மீது இதே எழுத்துருக் குறியீடுதான் அச்சிடப்படும்.
இவர்களின் கதைகள் உலகப் புகழ்பெற்ற நகரங்களில் மாபெரும் மேடை நாடகங்களாக அரங்கேறும்போது, அந்த அரங்குகளின் நுழைவாயில் முகப்புகளில் கூட இந்தத் தனித்துவமான எழுத்துருக்கள்தான் அடையாளமாக ஒளிரும்.
இதன் மூலம் நுகர்வோர் எந்தத் திரையில், எந்தப் பொருளைப் பார்த்தாலும், அந்த எழுத்துரு வடிவத்தைக் கண்ட மாத்திரத்திலேயே அது ரோல்ட் தாலின் உலகம் என்பதை படிமுறைத் தீர்வை (Algorithm) தாண்டியும் மனரீதியாக உணர்ந்து கொள்கிறார்கள்.
- மு. இசக்கிமுத்து
