எம் கோடு, உணர்வுகளின் வீடு

எழுத்து வரிவடிவங்களுக்குப் பின்னால் நெடிய வரலாறு இருப்பதைப் போலவே ஒவ்வொரு குறியீடுகளும் வரலாறு உண்டு. எம் (M) கோட்டுக்குப் பின்னாலும் பல்வேறு செய்திகள் உள்ளன.

நமது எண்ணங்களையும் உணர்வுகளையும் திரையில் கடத்துவதற்கு வெறும் எழுத்துக்கள் மட்டுமே சில நேரங்களில் போதுமானதாயிருப்பதில்லை. அதனால்தான், நிறுத்தற்குறிகளும், அச்சுக்கலை வடிவங்களும் மொழியின் மிக முக்கியமான அங்கங்களாக மாறுகின்றன. இன்றைய தொழில்நுட்ப யுகத்தில், செயற்கை நுண்ணறிவும், கணினி படிமுறைத் தீர்வுகளும் (Algorithm) நாம் எழுதும் ஒவ்வொரு வாக்கியத்தையும் செதுக்கி, நேர்த்தியான தொழில்முறை மொழியாக மாற்ற முயல்கின்றன.

இலக்கணப் பிழைகளைத் திருத்தும் மென்பொருள்கள் நம் எழுத்தைச் சீராக்கும்போது, உணர்ச்சியற்ற சுருக்க வடிவில் மாற்றி, அதன் இயல்பான மனிதத்தன்மையைக் குறைத்து விடுகின்றன. இத்தகைய சூழலில், மனித மூளையின் பல அடுக்குச் சிந்தனைகளையும், திடீர் உணர்ச்சித் திருப்பங்களையும் திரையில் அப்படியே படியெடுக்கும் ஓர் அற்புதமான கலகக்காரக் குறியீடு உண்டென்றால், அது ‘எம்’ கோடுதான். (Em Dash —)

நம்மில் பலருக்குப் பள்ளிப் பருவத்தில் ஆங்கில இலக்கணம் கற்பிக்கப்பட்டபோது, இந்த எம் கோடு என்பது ஏதோ ஒரு வேண்டாத விருந்தினரைப் போலத்தான் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும். வாக்கியங்களை கச்சிதமாக, ஒழுங்காக எழுத வேண்டும் என்ற விதிகளுக்கு நடுவே, “இதை அதிகமாகப் பயன்படுத்தாதீர்கள்; இது உங்களது எழுத்தை ஒரு பதற்றமான, ஒழுங்கற்ற மனநிலையைக் காட்டுவது போல் மாற்றிவிடும்” என்றே ஆசிரியர்கள் எச்சரித்திருப்பார்கள்.

இன்றும் கூட நம்மைச் சுற்றியுள்ள பலருக்கு இதன் அசல் பயன்பாடு தெரிவதில்லை. ஒரு சிறிய ஹைபனுக்கும் (Hyphen -), நடுத்தர அளவுள்ள ‘என்’ கோட்டிற்கும் (En Dash –), நீளமான ‘எம்’ கோட்டிற்கும் (Em Dash —) உள்ள வேறுபாடுகள் தெரியாமல், எல்லாவற்றிற்கும் ஒரே சிறிய கோட்டையே (Hyphen) பயன்படுத்தி விடுகிறார்கள். ஆனால், அச்சுக்கலையின் நீண்ட மரபில், கோடுகள் (Dashes) அவற்றின் நீளத்தைக் கொண்டே வகைப்படுத்தப்படுகின்றன.

பாரம்பரிய அச்சுக்கோர்ப்பு முறையில், ஆங்கிலப் எழுத்தான எம் (M) எவ்வளவு அகலத்தைக் கொண்டிருக்குமோ, அதே அகலத்தைக் கொண்ட நீளக் கோடுதான் இந்த ‘எம் கோடு. சர்வதேச அச்சுக்கலை விதிகளின்படி, இந்த எம் கோட்டைப் பயன்படுத்தும்போது அதற்கு இருபுறமும் எந்தவொரு இடைவெளியும் விடக் கூடாது (சான்று: சொல்—சொல்). கணினியிலோ அல்லது திறன்பேசியிலோ தட்டச்சு செய்யும்போது, இரண்டு சிறிய கோடுகளை(-) அடுத்தடுத்து அழுத்தினால், அது தானாகவே ஒரு நீளமான எம் கோடாக மாறிக்கொள்ளும்.

தட்டச்சு இயந்திரங்களின் வரலாற்றை உற்று நோக்கினால், இந்த எம் கோட்டிற்கு விசைப்பலகையில் தனியாக ஒரு விசை ஒதுக்கப்பட்டிருக்கவே இல்லை என்ற உண்மை புலப்படும். தட்டச்சு இயந்திரத்தை வடிவமைத்தவர்கள், எழுத்தாளர்கள் இரண்டு முறை சிறிய கோடு பொத்தானை தட்டிவிட்டுத் தங்களின் எண்ண ஓட்டத்தைத் தொடர்வார்கள் என்றே நம்பினர். இலக்கண விதிகளுக்குள் அடங்க மறுக்கும் இலக்கிய மேதைகளுக்கு இந்த எம் கோடு எப்போதுமே ஒரு மாபெரும் வடிகாலாக இருந்துள்ளது.

புகழ்பெற்ற அமெரிக்கக் கவிஞர் எமிலி டிக்கின்சன் தனது கவிதைகளில் இந்த எம் கோட்டைத் தாராளமாக—ஒருவித அடங்காத வெறியோடு—பயன்படுத்தியவர்.
அவரது வரிகளில் வரும் எம் கோடுகள் வெறும் நிறுத்தற்குறிகள் அல்ல; அவை வாசகரை ஒரு கணம் நிறுத்தி, மூச்சடக்கி அந்தக் கவிதைக்குப் பின்னால் இருக்கும் ஆழமான அமைதியை அல்லது ஒருவிதமான தத்தளிப்பை உணர வைக்கும் கடத்திகளாகச் செயல்பட்டன.

இதனால்தான், “காற்புள்ளி என்பது ஒரு சிறு மெளனம் என்றால், எம் கோடு என்பது ஒரு உரத்த கூச்சல்” என்று அச்சுக்கலைஞர்கள் இதனைக் குறிப்பிடுகிறார்கள். ஒரு வாக்கியத்தின் நடுவே நாம் திடீரெனக் கொடுக்க நினைக்கும் ஒரு பெரும் அழுத்தத்தை—வாசகனின் கவனத்தைச் சட்டென்று ஈர்க்கும் காட்சி உத்தியாக—இந்த நீளக் கோடு மாற்றுகிறது.


இலக்கிய உலகில் எமிலி டிக்கின்சன் மட்டுமல்ல, ‘மொபி டிக்’ (Moby-Dick) நாவலை எழுதிய ஹெர்மன் மெல்வில் (Herman Melville) போன்ற மாபெரும் எழுத்தாளர்களும் எம் கோட்டின் தீவிர ரசிகர்களாகவே இருந்திருக்கிறார்கள். மெல்வில்லின் வியப்பூட்டும் தத்துவார்த்த வரிகளுக்கு நடுவே, இந்த எம் கோடுகள் வாசகரின் சிந்தனையை ஒரு கணத்தில் இருந்து அடுத்த கணத்திற்குத் தாவ வைக்கும் பாலங்களாகச் செயல்பட்டன.


அதேபோல், எழுத்தாளர் கார்சன் மெக்கல்லர்ஸ் (Carson McCullers) தனது படைப்புகளில் மனிதர்களின் தனிமையையும், மனப் போராட்டங்களையும், வார்த்தைகளால் விவரிக்கமுடியாத ஏக்கங்களையும் வெளிப்படுத்த இந்த நீளக் கோட்டை கையாண்டார். வழக்கமான நிறுத்தற்குறிகள் தராத ஒரு தனித்துவமான விடுதலையை இது எழுத்தாளர்களுக்கு வழங்குகிறது. ஒரு வாக்கியத்தின் ஓட்டத்தை உடைக்காமல், நடுவே ஒரு கூடுதல் விளக்கத்தையோ அல்லது துணைத் தகவலையோ தரும்போது, பயன்படுத்தும் அடைப்புக்குறிகளுக்குப் பதிலாக இந்த எம் கோட்டைப் பயன்படுத்தலாம்.


அடைப்புக்குறிகள் வாக்கியத்தின் நடுவே எதையோ ஒளித்து வைப்பது போன்றது—அது வாக்கியத்தின் முக்கியத்துவத்தைக் குறைத்துவிடும். அது வாக்கியத்தின் முக்கியத்துவத்தைக் குறைத்துவிடும். ஆனால் எம் கோடு அப்படியல்ல—அது தன் நடுவே தாங்கி வரும் தகவலை இன்னும் கம்பீரமாக, இன்னும் உரக்க வாசகர்களுக்குப் பறைசாற்றுகிறது.


செயற்கை நுண்ணறிவு மென்பொருள்கள் நேர்த்தியான, இலக்கணச் சுத்தமான வாக்கியங்களை உருவாக்கலாம். ஆனால்,மனித மூளையின் ஆழமான உணர்ச்சிச் சிதறல்களையும், நம் ஆன்மாவின் இயல்பான தடுமாற்றங்களையும் மனிதர்களே சிறப்பாகப் பதிவு செய்ய இயலும்.


எந்திரங்களின் விதிகளுக்குள் அடங்காமல், “மனிதராகிய நான்தான் இதை எழுதுகிறேன்; என் சிந்தனையில் வேகம் இருக்கிறது, குறும்புத்தனம் இருக்கிறது, திடீர் திருப்பங்கள் இருக்கிறது—எல்லாவற்றிற்கும் மேலாக என்னிடம் உணர்வுகள் இருக்கின்றன” என்பதை உரக்கச் சொல்லும் அடையாளமாக எம் கோடு திகழ்கிறது. இது குறித்த கூடுதல் தகவல்கள் கீழே உள்ள ஆங்கில கட்டுரைகளில் உள்ளன.

  • மு.இசக்கிமுத்து

மேலதிகத் தகவல்களுக்குக் கீழே உள்ள கட்டுரையைப் படிக்கலாம்.

கட்டுரை 1

கட்டுரை 2

Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now