இந்தியாவின் மரபுத் தையல் கலையை அடிப்படையாகக் கொண்டு உருவான எழுத்துருக்கள் உலகளாவிய பரிசை வென்றுள்ளன. குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ‘கட்ச்’ பகுதியின் ராபரி சமூகத்தின் மரபார்ந்த தையல் கலையில் இருந்து உருவானவை இந்த எழுத்துருக்கள். நியூயார்க்கைச் சேர்ந்த எழுத்துரு வடிவமைப்பாளர்கள் அமைப்பின் 72ஆவது விருதில் இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்த எழுத்துருக்களை உருவாக்கியவர் இந்திய வடிவமைப்பாளரும் ஆய்வாளருமான இஷான் கோஸ்லா ஆவார்.

இஷான் கோஸ்லா, அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள காட்சிக் கலைப் பள்ளியில் வடிவமைப்பில் பட்டம் பெற்றவர். எழுத்துரு வடிவமைப்பாளர், ஆய்வாளர், கல்வியாளர் எனப் பல தளங்களில் செயல்பட்டு வரும் இவர், அதிகம் கவனிக்கப்படாத விளிம்புநிலைச் சமூகங்களின் குரல்களை வடிவமைப்பின் வழியாக வெளிக்கொண்டு வருவதில் கவனம் செலுத்துகிறார்.
இதற்கென ஓர் அமைப்பைத் தொடங்கியுள்ள இஷானின் அடிப்படை நோக்கம், கைவினைக் கலைஞர்கள், பழங்குடியினக் கலைஞர்கள், பெண்கள், அகதிகள் உள்ளிட்ட பல்வேறு சமூகத்தினருடன் இணைந்து, அவர்களின் மரபுக் கலை வடிவங்களிலிருந்து கணினியில் பயன்படுத்தக்கூடிய எழுத்துருக்களை உருவாக்குவதே.
ராபரி தையலிலிருந்து எழுத்துரு
ராபரி மக்கள், கால்நடை மேய்ப்புத் தொழிலுடன் தொடர்புடைய நாடோடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அச்சமூகத்துப் பெண்கள் தங்கள் பண்பாட்டை வெளிப்படுத்தும் முதன்மையான வழிகளில் ஒன்றாகத் தையல் கலையைப் பயன்படுத்துகின்றனர். ஒட்டகம், மயில், கிளி, தேள், அணிகலன்கள், கோயில்கள், மரங்கள் போன்றவை அவர்களின் தையல் கலைக்கே உரிய தனித்துவமான வடிவங்களாகும்.
இந்தக் கைவினை மரபிலிருந்து உருவான ‘ராபரி எழுத்துரு’ இரண்டு விதங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முதலாவதான ‘ராபரி பாரத்’ எழுத்துகளின் தடிமனில் வெவ்வேறு அளவுகளைக் கொண்டது. இரண்டாவதான ‘ராபரி ரங்க்பெரங்கி’ பல அடுக்குகளைக் கொண்ட பலவண்ண எழுத்துருவாக உருவாக்கப்பட்டுள்ளது. தையலில் பயன்படுத்தப்படும் வண்ணங்கள், வடிவங்கள் மற்றும் கண்ணாடிப் பதிப்புகள் உள்ளிட்ட கைவினைத் தன்மைகள் இவ்வெழுத்துகளின் காட்சியமைப்பில் எதிரொளிக்கின்றன.
இந்தத் திட்டத்தில் ராபரி சமூகத்தைச் சேர்ந்த பல்லி பென், பர்மா பென், ஜெனி பென், தாவல் பென், சேஜு பென் உள்ளிட்ட கைவினைக் கலைஞர்கள் நேரடியாகப் பங்கேற்றுள்ளனர். எழுத்துரு வடிவமைப்பில் இஷான் கோஸ்லா வடிவமைப்பு இயக்குநராகவும், ஸ்பெயினைச் சேர்ந்த எழுத்துரு வடிவமைப்பாளர் ஆண்ட்ரேயு பாலியஸ் எழுத்துரு உருவாக்கத்திலும் பங்களித்துள்ளனர்.
வாழும் ஆவணம்
ராபரி தையல் மட்டுமல்லாமல், தெற்காசியாவின் பல்வேறு கைவினை மரபுகளை இஷான் கோஸ்லா எழுத்துருக்களாக மாற்றியுள்ளார். கர்நாடகத்தின் தரை ஓவிய வடிவமான ‘சித்தாரா’விலிருந்து இலத்தீன் எழுத்துக்களை உருவாக்கியுள்ளார். மத்திய இந்தியப் பழங்குடியினரின் பச்சைக் குத்துக் கலையான ‘கோட்னா’லிருந்தும் எழுத்துரு உருவாக்கப்பட்டுள்ளது. இம்முயற்சியின் மூலம் உடலில் பதிக்கப்படும் நிரந்தரக் குறியீடுகளைத் திரையில் பயன்படுத்தக்கூடிய எழுத்து வடிவங்களாக அவர் மாற்றியுள்ளார்.
பைகா பழங்குடியினரின் பச்சைக் குத்துக் கலையை அடிப்படையாகக் கொண்ட எழுத்துருவும் இதில் குறிப்பிடத்தக்கது. பைகா கலைஞர்களுடன் இணைந்து உருவாக்கப்பட்ட இந்த எழுத்துருவில், அவர்களின் உடல் அலங்காரக் குறியீடுகள் எழுத்துகளாக மாற்றப்பட்டுள்ளன. குஜராத்தின் கைவினைத் தையல் மரபிலிருந்தும் எழுத்துருக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றிலும் பல பெண் கைவினைக் கலைஞர்கள் நேரடியாகப் பங்கேற்றுள்ளனர்.
பீகாரின் மிதிலா நாட்டுப்புறக் கலையிலிருந்து தேவநாகரி எழுத்துருவும், ராமாயணக் காட்சிகளை அடிப்படையாகக் கொண்ட இலத்தீன் எழுத்துருவும் உருவாக்கப்பட்டுள்ளன. குஜராத்தின் பந்தனி கலையை அடிப்படையாகக் கொண்டு அரபு, உருது, பாரசீக எழுத்துமுறைகளுக்கான எழுத்துருக்களும் உருவாக்கப்பட்டுள்ளன. பந்தனியில் துணியை முடிச்சிட்டு வண்ணமிடுவதால் உருவாகும் வடிவங்கள், எழுத்துகளின் வடிவமைப்பில் பயன்படுத்தப்பட்டுள்ளன. பாலஸ்தீனத்தின் ‘தத்ரீஸ்’ தையல் கலையிலிருந்தும் அரபு மற்றும் இலத்தீன் எழுத்துருக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் கோலமும் எழுத்துருவாக மாற்றப்பட உள்ளது. இதற்கு முன்னரே உதயசங்கர் கோல எழுத்துருக்களை உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், இஷான் முன்னெடுக்கும் முயற்சிகளின் அடிப்படை நோக்கம் கைவினைக் கலைஞர்களுடன் நேரடியாக இணைந்து பணியாற்றுவதே ஆகும்.
இவருடைய பணிகள் பல்வேறு நாடுகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வெழுத்துகள், நாம் வழக்கமாகப் பார்க்கும் வடிவங்களில் அமையாமல், புத்தம்புதிய வடிவங்களாகவும், அதே சமயம் பண்பாட்டின் வேரை நினைவூட்டும் வகையிலும் இருக்கின்றன. எழுத்துரு வடிவமைத்தல் என்பதைத் தாண்டி, இந்தியக் கலைகளைத் தற்காலப் பயன்பாட்டுக்கு ஏற்ற வாழும் ஆவணமாக மாற்றுவதே இவருடைய முதன்மை நோக்கமாக இருக்கிறது.

