பிடித்த பாடலைப் பட்டியலிடும் அமேசான் டெலிவர்டு

அமேசான் மியூசிக் செயலி, Delivered மூலம் நாம் ஆண்டு முழுவதும் கேட்ட பாடல்களைத் தொகுத்துக் கொடுக்கிறது.

அமேசான் மியூசிக் செயலியில், இசைப்பிரியர்கள் இந்த ஆண்டு முழுவதும் அதிகமாகக் கேட்டு மகிழ்ந்த பாடல்களைப் பற்றித் தெரிந்துகொள்ள Delivered சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சேவை ஸ்பாட்டிஃபை செயலியில் அறிமுகப்படுத்தப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், அமேசானிலும் அறிமுகப்படுத்தப்பட்டதற்கு இசைப்பிரியர்கள் மகிழ்ச்சி தெரிவித்துவருகின்றனர்.

Amazon Music Delivered

எவ்வளவு சிக்கலான சூழ்நிலையிலிருந்தாலும், நம் மனதிற்குப் பிடித்த பாடலை ஒரு முறை கேட்கும்போது, அது நம் மனத்தில் பேரமைதியை ஏற்படுத்திவிடும். அப்படிப்பட்ட இசையை வழங்கும் செயலிகளில் முக்கியமானது அமேசான் மியூசிக். இதில் பயனர்களைக் கவரும் வகையில் புதிய Delivered என்ற சேவை அறிமுகமாகியுள்ளது. இதன் மூலம், இந்த 2024ஆம் ஆண்டு முழுவதும் எந்தப் பாடலை அதிக முறை கேட்டுள்ளீர்கள், அதிகம் விரும்பும் இசையமைப்பாளர்கள், அதிக நேரம் கேட்ட பாட்காஸ்ட் போன்றவற்றை அறியமுடியும். உங்களுக்கு விருப்பமான பாடல்களைத் தொகுப்பாகவும் வழங்குகிறது இந்தச் சேவை.

எப்படிப் பயன்படுத்துவது?

இந்தச் சேவையைப் பயன்படுத்த உங்கள் ஆன்ட்ராய்டு அல்லது ஐஓஎஸ் திறன்பேசியில், அமேசான் மியூசிக் செயலியைத் திறக்க வேண்டும். லைப்ரரி(Library) என்ற பக்கத்தைத் தொடும்போது 2024 Delivered எனக் குறிப்பிடப்பட்டிருக்கும். அதைத் திறப்பதன் மூலம் இச்சேவையைப் பெற முடியும். அதில் உள்ள Top songs-2024ல் இந்த ஆண்டு முழுவதும் நீங்கள் விரும்பிக் கேட்ட பாடல்கள் இடம்பெற்றிருக்கும். 

அலெக்ஸா கருவியோடு அமேசான் மியூசிக் செயலியை இணைத்துள்ளவர்களுக்கு இன்னொரு பரிசும் காத்திருக்கிறது. நீங்கள் விரும்பிக் கேட்ட பாடகர் அல்லது இசையமைப்பாளரின் வாழ்த்துச் செய்திதான் அது. அது அவர்களின் சொந்தக் குரலில் இடம்பெற்றிருக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு மட்டுமே இந்தப் பரிசு. உங்களுக்கான செய்தி இருப்பின், உங்களுடைய அலெக்ஸா கருவியில் மஞ்சள் நிற ஒளி வந்து செல்லும். உடனடியாக அவர்களுடைய குரல் பதிவு ஒலிக்கத் தொடங்கும்.

ஆண்டு முழுவதும் கேட்ட பல்வேறு பாடல்களைத் தொகுப்பாக வழங்கும் சேவை பல்வேறு செயலிகளிலும் உள்ளது. எனினும் அமேசான் மியூசிக்கில், தங்கள் விருப்பமான இசைக் கலைஞரின் குரல் வாழ்த்துப் பதிவும் இருக்கிறது. இதனால் இசை ஆர்வலர்கள் மத்தியில் Delivered சேவை பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

  • இசக்கிமுத்து 
Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now