குறுஞ்செய்திச் சேவைக்கு முப்பத்திரண்டு வயது

இந்த டிசம்பர் மாதத்துடன் குறுஞ்செய்திச் சேவை தொடங்கப்பட்டு முப்பதிரண்டு ஆண்டுகள் ஆகின்றன.

இன்றைய காலகட்டத்தில், குறுஞ்செய்திச் சேவை பெரும்பாலும் ஒரு முறை பயன்படுத்தும் கடவுச் சொல்லுக்காக (OTP) மட்டுமே உதவுகிறது. சரியாக முப்பத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 1992ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மூன்றாம் தேதி உலகின் முதல் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது. அந்தச் செய்தி “Merry Christmas”. கணினியிலிருந்து இரண்டாம் தலைமுறை (2G) தொலைத்தொடர்பு சேவைகொண்ட அலைப்பேசிக்கு வோடஃபோன் நிறுவனத்தைச் சேர்ந்த பொறியாளர் நீல் பாப்வொர்த் என்பவரால் அந்தச் செய்தி அனுப்பப்பட்டது. 

குறுஞ்செய்தி

ஃப்ரைட்ஹெல்ம் ஹில்ப்ரான்ட் மற்றும் பெர்னார்ட் கில்பர்ட் என்ற இரண்டு பொறியாளர்கள் 1984ஆம் ஆண்டு குறுஞ்செய்தி தொடர்பான கருத்தை முதன் முதலாக உருவாக்கினார்கள். பயனர்கள் அனுப்பும் குறுஞ்செய்திகளுக்குப் பயன்படக்கூடிய அலைப்பேசிகளை 1993ஆம் ஆண்டு நோக்கியா நிறுவனம் அறிமுகப்படுத்தியது. குறுஞ்செய்தி பெறப்பட்டதற்கான தகவலை ஒலியோடு தெரியப்படுத்தும் வசதியும் இதே ஆண்டில் தான் அறிமுகமானது. அடுத்த நான்காண்டுகளில் முழு விசைப்பலகையைக் கொண்ட கம்யூனிக்கேட்டர் வகை அலைப்பேசிகளைச் சந்தைக்குக் கொண்டு வந்தது நோக்கியா நிறுவனம்.

எல்லாத் தொழில் நுட்பங்களைப் போலவே குறுஞ்செய்திகளின் பயன்பாடு ஆரம்பக்காலங்களில் மிகக் குறைவாகவே இருந்தது. வேறு நெட்வொர்க்கில் இயங்கும் பயனர்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்பமுடியும் என்ற நிலை தொண்ணூறுகளின் இறுதியில் சாத்தியமான பிறகு இதனைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகமானது. 2005ஆம் ஆண்டு பொங்கல் நாளில், தமிழில் குறுஞ்செய்தி அனுப்பும் சேவையை செல்லினம் அறிமுகப்படுத்தியது. 160 எழுத்துகள் என்ற கட்டுப்பாட்டோடு பின்னாளில் அறிமுகமான டிவிட்டர்க்கு இந்தக் குறுஞ்செய்தி தொழில்நுட்பம் தான் முன்னோடி. கட்டுப்படுத்தப்பட்ட எழுத்துகளின் பயன்பாடு காரணமாகவே LOL, FYI, TIA எனச் சுருக்கி எழுதும் வித்தையை மக்கள் கற்றிருக்க வேண்டும். 

இன்று பயன்பாட்டில் இருக்கும் தொடுதிரைகள் கொண்ட திறன்பேசிகள் இல்லாத காலங்களில் அலைப்பேசியில் இருக்கும் விசைப்பலகைகள் பயன்படுத்தப்பட்டன. ஒவ்வொரு எண்ணுக்கும் மூன்று ஆங்கில எழுத்துக்கள் இணைக்கப்பட்டிருக்கும் விசைப்பலகைகள் அப்போது பயன்பாட்டில் இருந்தன. பலமுறை விசைகளை அழுத்தித் தட்டச்சு செய்யும் இந்தமுறைக்குப் பதிலாக T9 எனப்படும் முன்கூட்டியே வார்த்தைகளைக் கணிக்கும் (Predective Text) தொழில்நுட்பம் அறிமுகமானது. 2011ஆம் ஆண்டு swype எனப்படும் எழுத்துகளை இணைத்து வார்த்தைகளை உருவாக்கும் முறை பயன்பாட்டுக்கு வந்தது. திறன்பேசிகளில் இருக்கும் மெய்நிகர் விசைப்பலகைகள் குறுஞ்செய்திகளின் பயன்பாட்டை இன்னும் அதிகமாக்கின. அலைப்பேசியில் பேசுவதற்குப் பதிலாகச் செய்திகளை அதிகமாக அனுப்பத் தொடங்கி பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டன. 

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸப், டெலிகிராம் எனச் சமூக ஊடகங்களின் பயன்பாடு அதிகரித்திருக்கிறது. இந்தச் சமூக ஊடகங்களின் வாயிலாக அதனைப் பயன்படுத்தும் அனைவரோடும் உரையாட முடிகிறது. ஆனால் இவற்றையெல்லாம் பயன்படுத்தாத மக்கள் இன்னும் இருக்கவே செய்கின்றனர். அலைப்பேசி வைத்திருக்கும் அனைவரும் பயன்படுத்தக்கூடியதாக இருப்பது இந்தக் குறுஞ்செய்தி மட்டும் தான். வாடிக்கையாளர்களுக்குத் தங்கள் நிறுவனம் சார்ந்த விளம்பரங்களை அனுப்ப இன்றைக்கும் இந்தக் குறுஞ்செய்திகளின் பயன்பாடு மிக அவசியமாக இருக்கின்றது. 

  • அ.பாண்டியராஜன்

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

Four Tamil word games, beautifully crafted for iPhone & iPad.

Download Now