சாட்ஜிபிடி, தன் பயனர்களுக்கு நினைவூட்டல் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. செயற்கை நுண்ணறிவு உரையாடல் செயலிகளில் வெற்றிகரமாக இயங்குவது ஓப்பன்ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி என்பது நாம் அறிந்ததே. மின்னஞ்சல் முகவரி இருந்தால் போதும். யார் வேண்டுமானாலும் சாட்ஜிபிடி சேவைகளைப் பயன்படுத்த முடியும். இளம் தலைமுறை மாணவர்கள் மத்தியில் தனித்துவமான வரவேற்பைப் பெற்றுள்ளது சாட்ஜிபிடி. பள்ளிக்கூட வீட்டுப்பாடம் என்றாலும் கல்லூரி அளவிலான நிரலாக்கம் என்றாலும் எளிதாகப் பெற்றுவிடமுடிகிறது.

உள்ளடக்கம் உருவாக்குபவர்களுக்கும் பேருதவியாக இருக்கிறது சாட்ஜிபிடி. பல மணி நேரம் புத்தகங்களைப் படித்துக் குறிப்பெழுதும் வேலையைச் சில நிமிடங்களில் முடித்துவிடுகிறது. சிக்கலான கணிதங்களுக்கு விடைதேடவும் பயன்படுகிறது. முழுநேர நிரல் எழுதுபவர்கள் துணைக்கு வைத்துக்கொள்ளும் பணியாளர் போலவும் செயல்படுகிறது. பிளஸ், புரோ வகைகள் இருபது டாலர்களில் இருந்து இருநூறு டாலர்கள் வரை செலவானாலும் பரவாயில்லை என்று தொழில்சார் அறிஞர்கள் தயங்காமல் செலவு செய்து சாட்ஜிபிடியைப் பயன்படுத்துகின்றனர்.
கட்டணம் செலுத்திப் பயன்படுத்தும் பயனர்களில் சிலருக்கு மட்டும் முன்னோட்ட வசதியாக (beta) நினைவூட்டும் அம்சத்தை வழங்குகிறது. ஆண்டிராய்டு, ஐஓஎஸ், மேக், வலைத்தளம் என எதில் சாட்ஜிபிடியைப் பயன்படுத்தினாலும் பரவாயில்லை. நினைவூட்டல் குறிப்பை மின்னஞ்சல் வழியாகவோ அறிவிக்கைகள் வழியாகவோ பெறலாம்.
எதிர்காலத் திட்டங்களைக் குறித்து வைத்து நினைவுகூர இவ்வசதியைப் பயன்படுத்தலாம். நாள்தோறும் செய்யவேண்டிய செயல்களை நினைவூட்டவும் உதவும். காலையில் தலைப்புச் செய்திகளை அனுப்பச் சொல்லலாம். இன்று மழை பெய்யுமா, வெயில் அடிக்குமா போன்ற காலநிலை தகவல்களை பற்றி எச்சரிக்கை கொடுக்கும்படி அமைத்துக்கொள்ளலாம். இதெல்லாம் பயன்படுத்துவோரின் சிந்தனையைப் பொறுத்தது.
கட்டணம் செலுத்தும் பயனராக இருந்தாலும் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே இக்கூறு அறிமுகமாகிறது. சாட்ஜிபிடி மாடல் உள்ள இடத்தில் தட்டிப் பார்த்தால் “GPT-4o with scheduled tasks” எனக் காட்டும். இது தெரிந்தால் நீங்கள் நினைவூட்டல் வசதியைப் பயன்படுத்தமுடியும். நன்றாக இருக்கிறதே என்று ஐஓஎஸ், ஆண்டிராய்டு திறன்பேசிகளில் இருக்கும் நினைவூட்டல் வசதிக்கு முழுக்குப் போடலாம் என நினைக்காதீர்கள். அதற்கு இன்னும் கொஞ்சம் காலம் ஆகலாம். இப்போதைக்குப் பத்து நினைவூட்டல் மட்டுமே சாட்ஜிபிடியில் சாத்தியம்.
பயன்படுத்திப் பார்த்தவர்கள் எந்தக் குறையும் இல்லை என்கிறார்கள். ஆனால் எதற்கும் இருக்கட்டும் என்று ஓப்பன்ஏஐ நிறுவனத்தினர் பொறுப்புத் துறப்புத் தகவல் ஒன்றையும் இணைத்துள்ளனர். விமானத்தில் ஏற நினைவூட்டச் சொல்லியிருந்தேன், சாட்ஜிபிடி மறந்துவிட்டதால் பயணம் செய்ய முடியாமல் போனது என்று யாரும் சண்டைக்கு வரக்கூடாதல்லவா. தற்போது சோதனை கட்டத்தில் இருப்பதால் இதையே முழுக்க நம்பாதீர்கள் என ஓப்பன்ஏஐ நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.
