அலெக்சா நன்றாகப் படிக்கட்டும்

அமேசான் அலெக்சா வகைக் கருவிகளின் நம்பகத்தன்மையை மேம்படுத்துவதில் பன்னாட்டு நிறுவனங்கள் அதிகம் மெனக்கெடுகின்றன. 

Amazon Alexa

படைப்பாற்றல் கொண்ட செயற்கை நுண்ணறிவு (Generative artificial intelligence) என்பது கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தொழில்நுட்ப உலகை அதிரவிட்டுவரும் சொற்கள். ஓப்பன்ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி பயன்பாட்டுக்கு வந்ததிலிருந்து, கூகுள் மற்றும் ஆப்பிள் போன்றவை தங்களையும் அந்த உலகத்தில் முன்னணியில் வரப் போராடி வருகின்றனர். அதன்படி கூகுள் துணைவன், ஆப்பிள்-சிரி போன்றவற்றில் செயற்கை நுண்ணறிவை மேம்பாடுகளுடன் கொண்டுவர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அமேசானின் அலெக்சாவும் இதற்கு விதிவிலக்கல்ல. அமேசான் நிறுவனம் அலெக்சாவில் செயற்கை நுண்ணறிவை மேம்படுத்த முயற்சி எடுத்து வருகிறது. 

அலெக்சாவை செயற்கை நுண்ணறிவின் அடிப்படையில் உருவாக்குவதன் மூலம், பயனர்களுக்கு உணர்வுப்பூர்வமான உரையாடல் அனுபவம் கிடைக்கும். இது பயனருக்குப் பிடித்த பாடல்களை இசைப்பது, எழுப்பொலிகளை அமைப்பதோடு மட்டுமல்லாமல் ஒரு நண்பர் உடனிருப்பது போன்ற உணர்வைக் கொடுக்கும்.

இது பற்றிப் பேசிய அமேசானின் செயற்கை பொது நுண்ணறிவு (AGI) குழுவின் தலைவரான ரோஹித் பிரசாத், “அலெக்சா உங்கள் உதவியாளராகச் செயல்படுவதைக் கற்பனை செய்து பாருங்கள். இரவு உணவை எங்குச் சாப்பிடுவது, உங்கள் பயணத்தை எப்படித் திட்டமிடுவது, நீங்கள் தூங்க வேண்டிய நேரத்தில் விளக்கை அணைப்பது, போன்ற செயல்களைச் செய்யும்படியான எண்ணற்ற மாற்றங்கள் புதிய அலெக்சாவில் வரவுள்ளன.

உலகளவில் 500 மில்லியனுக்கும் அதிகமான அலெக்சா கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. செயற்கை நுண்ணறிவோடு இணைக்கப்பட்ட அலெக்சா வாரந்தோறும் பில்லியன் கணக்கான தரவுகளைக் கையாள வேண்டியிருக்கும். இது எளிதானதல்ல. அலெக்ஸா, அதன் மற்ற சில போட்டியாளர்களைவிட ஏன் சிறந்த உதவியாளராக மாறவில்லை என்று நீங்கள் யோசித்துக்கொண்டிருந்தால், அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அலெக்ஸாவின் வடிவமைப்பானது இந்த வகையான செயற்கை நுண்ணறிவுக்காக உருவாக்கப்படவில்லை. இந்த பழைய அமைப்பை இன்றைய அதிக சக்திவாய்ந்த படைப்பாற்றல் கொண்ட செயற்கை நுண்ணறிவுடன் இணைப்பது எதிர்பார்த்ததை விட மிகவும் சிக்கலானதாக மாறியுள்ளது.

இந்த தொழில்நுட்ப இடையூறுகளுக்கு நடுவிலும், அலெக்சாவின் தனித்த அடையாளத்தைப் பாதுகாக்க முயல்கிறோம். அதே நேரத்தில் உணர்வுப்பூர்வமான, சுதந்திரமான உரையாடல் போன்ற புதிய அம்சங்களையும் வழங்கவிருக்கிறோம்” என்றார்.

அடுத்ததாக இதன் நோக்கத்தைப் பற்றிப் பேசியபோது, “செயற்கை நுண்ணறிவு கொண்ட அலெக்சா எப்போது வெளிவரும் என்பதற்கான கால அளவு எதுவும் இல்லை. எனினும் அந்த காத்திருப்பு மதிப்புள்ளதாக அமையும் என அமேசான் உறுதியளிக்கிறது. நம்பகத்தன்மையுடன் கூடிய உதவியாளரை உருவாக்குவதில் முனைப்பு காட்டுகிறோம். அமேசான் தனது சொந்த நோக்கத்திற்காகச் செயற்கை நுண்ணறிவை இணைக்க முயலவில்லை. மாறாக வாடிக்கையாளர் வசதிக்காகவும் திருப்திக்காகவும் நாங்கள் இதைச் செய்கிறோம். பயனர் திருப்தியே எங்கள் இறுதி இலக்கு.” என்றும் கூறியுள்ளார்.

சுருக்கமாகச் சொல்வதென்றால் மனிதர்களுடன் தவறின்றி உரையாடத் தேவையான அளவுக்கு நன்றாகப் படித்துத் தயாராகிக்கொண்டிருக்கிறது அலெக்சா. ஒழுங்காகப் படித்தால்தான் நமக்குச் சரியாக ஆலோசனை வழங்கமுடியும். நல்லதுதான்.

– மு. இசக்கிமுத்து

Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now