வாட்சாப் நிலைத்தகவல் இன்ஸ்டா பக்கத்தில்

பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்சாப் அனைத்திலும் ஒரே நிலைத்தகவல் இடம்பெறும் வசதி வரப்போகிறது. உலகளவில் அரட்டைக்காகப் பயன்படுத்தப்படும் செயலிகளில் முதலிடம் வகிப்பது மெட்டா நிறுவனத்தின் வாட்சாப் செயலி. இதில் தங்கள் அனைத்து சொந்தக் கதைகளையும் நண்பர்கள், உற்றார், உறவினருக்குப் பகிரும் அம்சம் வாட்சாப் நிலைத்தகவல். நேர்காணலில் உங்கள் பிடித்த பழக்கம் என்னவென்று கேட்டால், வாட்சாப் நிலைத்தகவல் வைப்பது பார்ப்பது எனக் கூறும் அளவிற்கு நம்மோடு இரண்டறக் கலந்துவிட்டது. 

whatsapp status

நம்மில் பலர் ஒரே புகைப்படத்தை, வாட்சாப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக்கில் விதவிதமான குறிப்புகளோடு பகிர்வதற்குள் பெருமூச்சு விட்டுவிடுவோம். இதன் மூலம் நாம் சிரமப்படுவதை உணர்ந்த மெட்டா நிறுவனம் மாற்றுவழியை அறிமுகப்படுத்த உள்ளது. வாட்சாப்பில் வைக்கும் நிலைத்தகவலை, பேஸ்புக், இன்ஸ்டாகிராமுக்கு பகிரும் அம்சம்தான் அது. 

முன்பெல்லாம் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் இடையேவும், வாட்சாப், பேஸ்புக் இடையேவும் இந்த அம்சம் பயன்பாட்டில் இருந்தது. ஆனால் இப்போதைய புதிய அம்சத்தில் நீங்கள் வாட்சாப்பில் நிலைத்தகவல் வைத்தால் மட்டும் போதும். தானாகவே பேஸ்புக்கிலும் இன்ஸ்டாகிராமிலும் பகிர வேண்டுமா எனக் கேட்கப்படும். நீங்கள் பகிர விரும்பினால், அதைப் பயன்படுத்தி உங்கள் நிலைத்தகவலை எளிதாகப் பகிர முடியும். 

இந்த அம்சமானது கணக்கு மையம் (Accounts centre) என்ற இன்னும் சில மாதங்களில் கொண்டுவரப்பட உள்ள வசதியின் மூலமே சாத்தியப்படும். இது 2020ஆம் ஆண்டில் மெட்டா நிறுவனத்தின் செயலிகளில் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. பயனர்கள் தங்கள் மெட்டா கணக்குகளையும் மெட்டாவின் மற்ற செயலிகளுக்குட்பட்ட சேவைகளையும் திறம்பட நிர்வகிக்க அனுமதிக்கும் ஒரு வழியாக இது அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம், பயனர்கள் கணக்குகளை இணைக்கலாம். அவர்களுடைய சுயவிவரப் படத்தையும் பெயரையும் பிற செயலிகளிலும் ஒரே மாதிரியாக வைக்கலாம். 

ஒரு சமூக வலைத்தளத்தில் ஏற்படும் மாற்றமானது மற்றொன்றிலும் எதிரொலிப்பதை இது உறுதிசெய்கிறது. இந்த அம்சம் முற்றிலும் விருப்பத்திற்கேற்றது. ஏனெனில் நீங்கள் விரும்பவில்லை எனில் முடக்கி வைத்துக்கொள்ளலாம். பயனர்களின் விருப்பப்படி காலப்போக்கில் இந்த அம்சத்தை விரிவுபடுத்துவதாகவும் தெரிவித்துள்ளது மெட்டா நிறுவனம் . கணக்கு மையத்தின் இப்புதிய அம்சங்கள் இன்னும் இரண்டு அல்லது மூன்று மாத காலத்துக்குள் பயன்பாட்டிற்கு வரும் எனக் கருதப்படுகிறது.

  • மு.‌இசக்கிமுத்து
சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

Four Tamil word games, beautifully crafted for iPhone & iPad.

Download Now