பிக்சல் நெருக்கடி கால அழைப்பு

பிக்சல் திறன்கடிகாரங்களில் நெருக்கடி கால அழைப்புகளை (SOS) செயல்படுத்துவதற்கு புதிய வழிமுறையை வெளியிட்டுள்ளது கூகுள் நிறுவனம்.

Pixel SmartWatch

கூகுள் நிறுவனம் தனது பிக்சல் திறன்கடிகாரங்களைக் கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் வெளியிட்டது. அப்போது முதல் பல்வேறு புதுவித அம்சங்களை அறிமுகப்படுத்திவருகிறது கூகுள். இந்நிலையில் பிக்சல் கைக்கடிகாரங்களில், நெருக்கடி நேர அழைப்புகளை மேற்கொள்வதற்கான வழிமுறைகளை மாற்ற உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வந்தன. இப்போது கூகுள் அந்த மாற்றங்களை அதிகாரப்பூர்வமாகச் செய்துள்ளது. 

பொதுவாக, நாம் ஏதேனும் நெருக்கடியிலோ ஆபத்திலோ இருக்கும்போது, நம் நண்பர்கள் அல்லது அரசின் காவல் உதவி எண்ணுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க நெருக்கடி கால அழைப்பு (SOS) அம்சம் உதவி புரிகிறது. முன்பெல்லாம் பிக்சல் திறன் கைக்கடிகாரத்தில் இதைச் செயல்படுத்துவதற்கு, அதன் தலைப்பகுதியை  (watch’s crown) ஐந்துமுறை அழுத்தினால் போதும். உடனடியாக ஐந்து, நான்கு , மூன்று என இறங்குமுக எண்வரிசை கடிகாரத் திரையில் தோன்றும். இது நெருக்கடி கால உதவி சேவைகளைத் தொடர்புகொள்ளப் போவதற்கான அறிகுறியாகும். அதன்பிறகு உடனடியாக அழைப்பு மேற்கொள்ளப்படும். 

நீங்கள் தற்செயலாகவோ, தெரியாமலோ தொட்டிருந்தால், அதை நிறுத்துவதற்கான வாய்ப்பே இந்த ஐந்து நொடி கால தாமதம். அந்தத் தடுக்கும் வசதியையும் மீறி, இதன்மூலம் பல நெருக்கடி கால அழைப்புகள் தவறுதலாக மேற்கொள்ளப்பட்டு வந்தன. இது பலருக்குத் தேவையற்ற இடையூறுகளையும் ஏற்படுத்தும் வாய்ப்பு இருந்துவந்தது. ஆனால் இப்போது கொண்டுவரப்பட்டுள்ள புதிய பதிப்பில், தலைப்பகுதியை ஐந்து முறை அழுத்திய பிறகு, திரையை மூன்று நொடிகளுக்கு அழுத்திப் பிடிக்க வேண்டும். அதன் பிறகு உதவி கோரும் அழைப்பு மேற்கொள்ளப்படும் . ஒரு வேளை மூன்று நொடிகளுக்குத் தொடர்ச்சியாக அழுத்தத் தவறினால் மீண்டும் முதலிலிருந்து தொடங்க வேண்டும்.

உடனடியாக உதவி தேவைப்படும் நெருக்கடியான நேரத்தில் இந்த வழிமுறை சிக்கலானதாக இருக்க வாய்ப்புள்ளது. அதற்கு ஏதேனும் தீர்வைப் பின்னர் அறிவிப்பார்கள். தற்போதைக்கு, தேவையற்ற, தற்செயலான உதவி கோரும் அழைப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள், இந்த புதிய பதிப்பின் மூலம் குறையும் எனக் கருதப்படுகிறது .

இந்த புதிய மாறுதல், அனைத்து பயனர்களுக்கும் கொண்டுவரப்பட்டுள்ளது. நீங்கள் இந்த புதிய அம்சத்தை விரும்பவில்லை என்றால் பழைய வழிமுறையைப் பின்பற்றிக்கொள்ளலாம். அதற்கு அமைப்புகள் > பாதுகாப்பு மற்றும் நெருக்கடி நிலை > நெருக்கடி கால SOS போன்றவற்றை முறையே சொடுக்க வேண்டும்‌. அதன் பின்னர் தொடங்குவதற்கான வழிகள் என்று திரையில் தோன்றும். அதைப் பயன்படுத்தி நீங்கள் பழைய வழிமுறையைச் செயல்படுத்திக்கொள்ளலாம்.

  • மு. இசக்கிமுத்து.
Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now