ஆப்பிள் ஸ்டோர் இந்தியாவிலும்

ஆப்பிள் கருவிகளை இணையத்தில் வாங்கப் பயன்படுத்தப்படும் ஆப்பிள் ஸ்டோர்(Apple store) செயலி இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஆப்பிளின் சொந்தக் காட்சிக்கூடத்துக்குச் சென்று ஆப்பிள் கருவிகளை வாங்கிவிடவேண்டும் என்பது பல பயனர்களின் கனவு. ஏனெனில் இந்தியா முழுவதுமே இரண்டு ஆப்பிள் காட்சிக்கூடங்கள்தான் உள்ளன. கடந்த 2023ஆம் ஆண்டு திறக்கப்பட்ட அவை இரண்டும் மும்பை, டெல்லியில் அமைந்துள்ளன. உலகின் இரண்டாவது மிகப்பெரிய சந்தையான இந்தியாவில், மொத்தமாகவே இரண்டு கடைகள் இருப்பது கொஞ்சம் வருத்தமான ஒன்றுதான். இதைப் போக்குவதற்காக இந்தியாவில் மேலும் நான்கு புதிய ஆப்பிள் காட்சிக்கூடங்களைத் தொடங்க உள்ளதாக ஆப்பிள் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி டிம் கூக் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிவித்திருந்தார்.

Apple Apps Store

இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, இணையத்திலும் தங்கள் விற்பனையை மேம்படுத்த, கடந்த 2020ல் அறிமுகப்படுத்தப்பட்டது ஆப்பிள் ஸ்டோர் செயலி. பிற நாடுகளில் பயன்பாட்டிலிருந்தாலும் இந்தியாவில், அறிமுகப்படுத்தப்படாமலே இருந்து வந்தது. இந்நிலையில் இந்தியாவிலும் தன் சேவையைத் தொடங்கியுள்ளது ஆப்பிள் ஸ்டோர் செயலி.

இதன் அறிமுகத்தைப் பற்றிய அறிக்கையில், ஆப்பிளின் இணைய விற்பனைத் தலைவர் கரேன் ராஸ்முசென், “ஆப்பிளில் நாங்கள் செய்யும் எல்லாவற்றிலும் எங்கள் வாடிக்கையாளர்கள் மையமாக இருக்கின்றனர். மேலும் இந்தியாவில் இன்னும் அதிகமான பயனர்களைச் சென்றடைய, ஆப்பிள் ஸ்டோர் செயலியை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இதன்மூலம் எங்கள் வாடிக்கையாளருடனான இணைப்பை மேம்படுத்துகிறோம்” என்று தெரிவித்துள்ளார். 

இச்செயலியைப் பயன்படுத்தி ஆப்பிள் திறன்பேசிகள், ஆப்பிள் திறன்கடிகாரங்கள், ஆப்பிள் மேக் கணினிகள் போன்ற அனைத்து ஆப்பிள் கருவிகளையும் வாங்கிக்கொள்ளலாம். இதில் உங்களுக்கென தனிப்பட்ட பரிந்துரைகளை வழங்கும் அம்சமும் இடம்பெற்றுள்ளது. மிகவும் முக்கியமானது என்னவெனில் நீங்கள் வைத்திருக்கும் ஆப்பிள் திறன்பேசியைக் கொடுத்துவிட்டு, புதிய ரக ஆப்பிள் திறன்பேசியை வாங்கிக்கொள்ளலாம்.

மேலும் இச்செயலியைப் பயன்படுத்தி, உங்கள் அருகில் உள்ள ஆப்பிள் அனுமதி பெற்ற மறு விற்பனையாளர்களையும் கண்டறிய முடியும். அவர்களின் கடைகளைப் பற்றிய அனைத்து தரவுகளும் அதில் கொடுக்கப்பட்டுள்ளன‌. இச்செயலியை எளிதாக ஆப்பிள் திறன்பேசிகளில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம்.

  • மு. இசக்கிமுத்து.
Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now