ரொட்டித்துகள்களைத் தட்டிவிடும் கூகுள்

திறன்பேசிகளிலுள்ள கூகுள் தேடுபொறியில், கடந்த பதினாறு வருடங்களாகச் செயல்பட்டுவந்த பிரெட்கிரெம்ப்சு அம்சத்தை நீக்குவதாக அறிவித்துள்ளது கூகுள். திறன்பேசிகளில் இணையத்தளத் தேடல் அனுபவத்தை எளிமையாக்குவதற்காக இம்முடிவை எடுத்துள்ளதாகக் கூறியுள்ளது.

google breadcrumbs

பிரெட்கிரெம்ப்சு என்பவை ஓர் இணையத்தளத்தில் நாம் எங்கே இருக்கிறோம் என்ற இடத்தைக்காட்டும் தகவல்தொடராகும். வலைத்தளமொன்றின் முகப்புப்பக்கத்திலிருந்து இப்போது எங்கிருக்கிறோம் என்பதை அறிந்துகொள்ள இவை உதவுகின்றன. எடுத்துக்காட்டாக, sellinam.com/about என்பது ஒரு பிரெட்கிரெம்ப்சு. செல்லினம் இணையத்தளத்தில் செல்லினம் பற்றிய பக்கத்தில் இருக்கிறோம் என்ற தகவலை இது வழங்குகிறது.

இந்த வசதிக்கு ஏன் பிரெட்கிரெம்ப்சு எனப் பெயரிட்டார்கள்?

நினைவுகளின் தூசியைத் தட்டிப் பார்த்தால் நாம் அறிந்த கதைதான். ஹான்செல், கிரேட்டல் அண்ணன் தங்கைக் கதையை நாம் படித்திருக்கிறோம்தானே. காட்டில் தங்களைத் தொலைத்துவிட சிற்றன்னை போடும் திட்டத்தை அறிந்துகொண்ட ஹான்செல், போகும் வழியில் தன்னிடமிருந்த ரொட்டித்துகள்களைத் தூவிக்கொண்டே செல்வான். திரும்பிவரும் வழியை ரொட்டித்துகள்கள் காட்டும் என அவன் நம்பினான். ஜெர்மனியில் குழந்தைகளுக்குப் படுக்கைநேரக்கதையாக வழங்கப்படும் கதையிது. இதிலிருந்துதான் பிரெட்கிரெம்ப்சு என்ற வார்த்தை பெறப்பட்டுள்ளது.

‘ஏற்கெனவே, சிறிய திரைகள்கொண்ட திறன்பேசிகளில் பிரெட்கிரெம்ப்சுகள் காணப்படுவதில்லை. அதன் இல்லாமை பயனரைப் பாதிக்கவும் செய்வதில்லை. எனவே, திறன்பேசிகளில் பிரெட்கிரெம்ப்சு அம்சம் அவசியமான ஒன்றாகத் தெரியவில்லை. அதேநேரம் அந்த அம்சத்தை நீக்கினால், திரையில் குறிப்பிடத்தக்க பரப்பளவைச் சேமிக்கவியலும். இதனால், திரையானது ஒழுங்குடனும் எளிமையுடனும் நெறிப்படுத்தப்பட்டதாகவும் தோற்றமளிக்கும்.’  இவ்வாறாக விளக்கமளித்துள்ளது கூகுள். 

‘பிரெட்கிரெம்ப்சுகளின் நீக்கம் கைக்கணினிகளிலும்கூட நடைமுறைக்கு வருகிறது. கூகுள் தேடுபொறி பயன்படுத்தப்படும் அனைத்துப் பகுதிகளிலும் மொழிவேறுபாடின்றி இம்முடிவு செயலாக்கம் பெறுகிறது. இருப்பினும், மேசைக்கணினிகள் மற்றும் மடிக்கணினிகளில் இச்சேவை தொடர்ந்து வழங்கப்படும்’ எனத் தெளிவுபடுத்தியுள்ளது கூகுள்.

ஹான்செல் இறைத்திருந்த ரொட்டித்துகள்களைப் பறவைகள் உண்டுவிட்டதால் அவனால் தன் தங்கையுடன் காட்டிலிருந்து திரும்பமுடியவில்லை. முதல்முறை கூழாங்கற்களை இறைத்திருந்ததால் சிற்றன்னையின் திட்டத்தைத் தோற்கடித்திருந்தான் ஹான்செல். அடுத்த முயற்சியில், கையிலிருந்த ரொட்டித்துகள்களைப் பயன்படுத்தியதால் அவனது திட்டம் தோல்வியடைந்தது. 

இணையத்தளத்தில் பயனர் நடந்துசெல்லும் பாதையைக்காட்டும் இவ்வசதிக்கு நியாயமாக கூழாங்கல் என்றுதான் பெயரிடப்பட்டிருக்கவேண்டும். ரொட்டித்துண்டுகள் என்ற எதிர்மறைப்பெயர் ஏன் சூட்டப்பட்டது என்பது கூகுளுக்குத்தான் வெளிச்சம். ஏதோ ஒரு கூகுள் பறவை, இணையத்தளங்களில் இடப்பட்டிருந்த ரொட்டித்துகள்களை உண்டுவிட்டது. 

-ரிஷி ரமணா

Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now