தாய்லாந்திய எழுத்தில் புதுமை

அண்மையில் தாய்லாந்தில் எழுத்துரு மாநாடு நடந்தது. முரசு அஞ்சல், செல்லினம் செயலிகளின் வடிமைப்பாளர் முத்து நெடுமாறன் அதில் கலந்துகொண்டதைப் பற்றித் தம் இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். அதனை இங்கே வெளியிடுகிறோம்.

சில பத்தாண்டுகளுக்கு முன்பிருந்தே பாங்காக் மாநகருக்கு அடிக்கடி சென்று வருகிறேன். இந்தத் தென்கிழக்காசிய ஊர் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. தாய்லாந்திய மக்கள் பேசும் மொழி கேட்பதற்கு இனிமையாக இருக்கும். பேச்சில் உள்ள ஏற்ற இரக்கம் அவர்களின் எழுத்திலேயே குறியீடுகளாக இருக்கும். ஓசைநயம் மிக முக்கியமான ஒன்று. இயல்பாகவே ஒரு பணிவான தொணி அவர்களின் பண்பை எடுத்துக்காட்டும்.

thai loop loopless

பாங்காக் முழுவதும் மிகப் பெரிய விளம்பரப் பலகைகள் இருக்கும். அவற்றில் தாய்லாந்திய எழுத்துகளுக்கே முதலிடம் கொடுக்கப்பட்டிருக்கும். அவை சொல்லும் செய்திகளுக்கேற்ப எழுத்துருவும் வடிவமைக்கப்பட்டிருக்கும். பல்லவ கிரந்த வடிவத்தை மூலமாகக் கொண்ட கெமெர் எழுத்துகளே தாய்லாந்திய வடிவத்தின் முன்னோடி. ஆனால் தாய்லாந்திய மக்கள் தங்கள் எழுத்துகளின் வடிவங்களை தொடர்ச்சியாக எளிமைபடுத்தி வந்துள்ளனர் – இன்றும் எளிமைபடுத்தி வருகின்றனர். அண்மைக்காலத்தில் ஏற்பட்டுவரும் அதிரடி மாற்றங்கள் வேறோர் எழுத்து வடிவமாகவே கருதப்பட்டு வருகிறது. இங்கு நடைபெறும் எழுத்துருவியல் மாநாடுகளில், இந்த மாற்றங்களைப் பற்றிய உரையாடல்கள் இல்லாமல் இருப்பதில்லை. போராட்டம், விவாதம் என்று இல்லாமல், கலை நுட்பம் என்று கலந்துரையாடல்கள் மாறி வருகின்றன.

தாய்லாந்திய எழுத்துருக்களில் இன்று இரண்டு வகையான வடிவங்களைப் பார்க்கலாம் – இவற்றை சுழியுள்ள எழுத்துகள் (looped) என்றும் சுழியற்ற எழுத்துகள் (loopless) என்றும் பிரித்துள்ளனர். இதை எளிதாகப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், தமிழில் உள்ள ‘வ’ எழுத்தையும், மலையாள ‘വ’ எழுத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். இரண்டுமே ‘வ’தான். தமிழில் சுழியோடு தொடங்கும், மலையாளத்தில் சுழி இல்லாமல் தொடங்கும். இதுபோல, ல, ள, ண, ன முதலிய எழுத்துகளில் சுழியில்லாமல் எழுதிப்பார்த்தால் எப்படி இருக்கும்?
சுழியற்ற வடிவமே “நவீன” தாய்லாந்திய எழுத்துருவாகப் பெரும்பாலும் கருதப்படுகிறது. ஆயினும், இந்த வடிவம் நேற்றோ இன்றோ தொடங்கிய ஒன்றல்ல. இதன் வளர்ச்சிக்கு ஒரு தனித்துவமான வரலாறு உண்டு.

கெமெர் எழுத்தில் சுழிகள் இல்லை. தாய்லாந்திய எழுத்தை வேறுபடுத்திக் காட்ட வேண்டும் என்பதற்காகவும், ஒரே இழுப்பில் ஓர் எழுத்தை எழுதி முடிக்க வேண்டும் என்பதற்காகவும் சுழிகள் சேர்க்கப்பட்டன.

பெயர் பலகைகளில் பெரிய எழுத்துகளாக பல முறை எழுதவேண்டிய தேவை ஏற்பட்டது. 1863ஆம் ஆண்டிலேயே ‘நாரிஸ்’ எனப்படும் எழுத்துரு, அகன்ற முனைப் பேனாவால் (broad-nib pen) வடிவமைக்கப்பட்டது. சுழிகளோடு எழுதுவதற்கான வசதி அந்தப்பேனாவில் இருந்தாலும், விரைவாகப் பல படிகளை எழுதுவதற்கு நேரம் செலவானது. இதனாலேயே சுழிகள் தவிர்க்கப்பட்டன. பின்னர் உள்ளூர் கலைஞர்களால் மேலும் வளர்த்தெடுக்கப்பட்டது. தொடக்கத்தில் தலைப்புகளிலும் புத்தகங்களிலும் செய்தித்தாள்களிலும் வணிகப் பொருள்களின் முகப்புகளிலும் தனித்துவமான தோற்றத்தை ஏற்படுத்த இவ்வெழுத்துரு பயன்படுத்தப்பட்டது.

1940களில் எழுத்தோவியக் கலைஞர்களும், பெயர்ப்பலகை வரைபவர்களும் இவ்வெழுத்துருவை பரவலாகப் பயன்படுத்தத் தொடங்கினர். லெட்ராசெட் (Letraset) போன்ற உலர்-பரிமாற்ற எழுத்துருக்களின் காலத்தில் இவ்வடிவம் மேலும் பல்வேறு ஆய்வுகளுக்கு உள்ளானது. குறிப்பாக, எழுபதுகளில் தாய்லாந்தில் நடைபெற்ற மாணவர் போராட்டங்களின் சுவரொட்டிகளில் இவ்வெழுத்துரு பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டதை பலர் சுட்டிக்காட்டுகின்றனர். இன்று, தாய்லாந்தின் அன்றாட வாழ்க்கையில் இவ்வெழுத்துரு முக்கியமான பங்கை வகித்து வருகிறது.

கால ஓட்டத்தில், கலாசார மாற்றங்களால் சுழியற்ற எழுத்துரு மேலும் எளிமையாக்கப்பட்டுள்ளது. நவீனமானது பண்பாட்டோடு ஒட்டியிருப்பது என்பதை வேறுபடுத்திக்காட்டவும் இந்த வடிவங்கள் பங்காற்றுகின்றன. தலைப்பெழுத்துகளுக்காக பயன்படுத்தப் பட்ட சுழியற்ற வடிவம், நீண்ட பனுவல்களைப் படிப்பதற்கும் எளிமையாக உள்ளதாக இன்றைய இளைய தலைமுறையினர் கருதுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

மேலும் படங்கள்:
https://www.facebook.com/share/p/1DpSZnbjiX/

தோக்கியோவில் 2019ஆம் அண்டு நடந்த எ.டைப்.ஐ. மாநாட்டில் படைக்கப்பட்டக் கட்டுரை:
The Evolution of Thai Loopless Script | Promphan Suksumek | ATypI 2019 Tokyo

Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now