தமிழ் தட்டெழுத்தில் ஆங்கிலச் சொற்கள்

தமிழில் தட்டெழுதிவரும் ஒரு கட்டுரையின் இடையே ஒரு சில ஆங்கிலச் சொற்களைத் தட்டெழுதும் தேவையிருந்தால், முரசு அஞ்சல் செயலி, ஒரே விசையில் அந்த வசதியைக் கொடுக்கிறது.

Keyboard Ctrl-Accent

தமிழில் எழுதும்போது முழுக்க முழுக்கத் தமிழில் மட்டுமே எழுதுவது முற்றிலும் சாத்தியம். சிலர் வடவெழுத்துக் கலக்காமல் தெள்ளு தமிழில் மட்டுமே எழுதுவர். அதோடு ஒப்பிடுகையில் ஆங்கிலம் அல்லது வேறு மொழிச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்லைப் பயன்படுத்தி தட்டெழுதுவது இன்னும் எளிதானதே. அறிவியல், தொழில்நட்பம் என எந்தத் துறையாக இருந்தாலும் கலைச்சொல் உருவாக்கித் தர தமிழ்த்துறை வல்லுநர்கள் பலர் இருக்கின்றனர். அவர்கள் ஆக்கித் தரும் கலைச்சொற்களைப் பயன்படுத்தலாம்.

எனினும் பல நேரங்களில் ஆங்கிலச் சொல்லை அப்படியே தமிழில் தட்டெழுதும் வழக்கம் நம்மிடையே உண்டு. Apple TV என்பதை ஆப்பிள் டிவி என எழுதுவோம். இதில் தொலைக்காட்சியை மொழிமாற்றினாலும் ஆப்பிள் என்பது நிறுவனத்தின் பெயர் என்பதால் அப்படியே எழுதும் வழக்கமும் உண்டு. இதெல்லாம் விவாதத்துக்குரியதாக இன்றும் இருக்கிறது. எப்படியாகினும் எழுத்து, தமிழ் என்பதால் தட்டெழுதுவதில் ஒரு சிக்கலும் இல்லை. தமிழும் ஆங்கிலம் கலந்து தட்டெழுதுவது அப்படி எளிதாக இல்லை.

சில நேரங்களில் அடைப்புக்குறிக்குள் ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்த வேண்டிய தேவை இருக்கும். அப்போது தமிழ் தட்டச்சு முறையில் இருந்து ஆங்கிலத் தட்டச்சு முறைக்குத் தாவி, பின்னர் மீண்டும் இங்கிருந்து அங்கு தாவ வேண்டும். இதற்குச் செயலியைத் திறந்து அமைப்புகளில் மாற்றம் செய்வோம். Windows+Spacebar விசைகளைத் தட்டினால் கொஞ்சம் எளிதாக இதைச் செய்யலாம். ஆனால் விண்டோஸ் பல விசைமுகங்களை இந்தப் பட்டியலில் தானாகவே சேர்ப்பதால் மூன்று கடல் சுற்றி வந்து மூழ்கி முத்தெடுப்பது போல, பலமுறை இந்த விசைகளைத் தட்டினால்தான் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கும் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கும் மாற இயலும்.

மெக் கணினிகளில் தட்டச்சுமுறைத் தாவலுக்கென்றே தனி விசையை வைத்திருக்கிறார்கள். மேலும், எந்த இரண்டு முறைகளைப் பயன்படுத்துகிறோம் என்பதையும் மெக் இயங்குதளம் நினைவில் கொள்ளும். இந்தச் சிக்கல் விண்டோசில் மட்டுமே.

முரசு அஞ்சல் செயலியில் இதை ஒரே விசையில் செய்யலாம். கன்ட்ரோல் + எக்சன் (ctrl + `) விசைகளைத் தட்டினால் தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு உடனே மாற்றித் தட்டெழுத இயலும். மீண்டும் தமிழுக்கு மாற அதே விசைகளைத் தட்டினால் போதும்.

முரசு அஞ்சல் செயலி பல்வேறு உள்ளீடு முறைகளின் வழியாகத் தமிழை எழுத உதவுகிறது. தமிழ் தட்டச்சு (டைப்ரைட்டர்), பாமினி, தமிழ்99, அஞ்சல் முதலிய பல்வேறு விசைமுகத்தில் எதைப் பயன்படுத்தினாலும் இந்த வழிமுறை வேலை செய்யும்.

குறிப்பாக தமிழ் தட்டச்சு. பாமினி பயன்படுத்துவோர் ஆங்கிலச் சொற்களுக்கு மட்டுமின்றி அரைக்காற்புள்ளி, மேற்கோள் போன்றவற்றுக்கும் ஆங்கில விசைப்பலகைக்கு மாறிப் பின் தமிழுக்கு வருகின்றனர். கதை எழுதுபவர்கள் வசனங்களை எழுதும்போது அதிகம் மேற்கோள்களைப் பயன்படுத்துகின்றனர். பெரும்பாலும் 1 விசைக்கு முன்னர் இருக்கும் விசையை மேற்கோளாகப் பயன்படுத்தும் வழக்கம் உள்ளது. பார்க்க மேற்கோள் மாதிரி தெரிந்தாலும் அது மேற்கோள் அல்ல. அதற்கு பதிலாக, Ctrl+~ விசைகளைத் தட்டினால் ; ‘ ” – / = * போன்றவற்றை எளிதாகத் தட்டெழுதலாம். வேகமாகத் தட்டச்சு செய்யும்போது அந்த வேகம் குறையாமல் மாற்றிக் கொள்ள இயலும்.

  • செல்லினம் குழு.
Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now