ஆப்பிள் நிறுவனம் உருவாகி ஐம்பது ஆண்டுகள் ஆகின்றன. 1976, ஏப்ரல் 1ஆம் தேதி வாகனம் நிறுத்துமிடத்தில் தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தின் பற்றுக்கோடு, மாற்றி யோசி என்பதுதான். ஐம்பதாண்டுக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, ‘பித்தர்களே உலகை மாற்றுகிறார்கள்’ எனும் ஸ்டீவ் ஜாப்ஸ் வரிகளை மேற்கோள்காட்டி அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார் டிம் குக்.

ஐம்பதாண்டுகளாகப் பல்வேறு பொருள்களையும் சேவைகளையும் வழங்கி தன் துறையில் முதல் நிலையில் இருக்கிறது ஆப்பிள். ஆப்பிள் கணினி, மெக் கணினி, ஐபாட், ஐபோன், ஐபேட், ஆப்பிள் கைக்கடிகாரம், காதணிபாடி போன்றவையாகட்டும் மற்றபிற ஆப்பிள் சேவைகளாகட்டும், அடிப்படைக் கொள்கை வித்தியாசமாகச் சிந்திப்பதுதான். இந்நிறுவனத்தின் வெற்றிக்கு இதுவே காரணமாக இருந்துவந்துள்ளது.
வித்தியாசமாகச் சிந்திப்பவர்களால்தான் உலகம் வழிநடத்தப்படுகிறது என்பது ஸ்டீவ் ஜாப்ஸ் உயர்த்திப்பிடித்த தத்துவங்களில் முக்கியமானது. ஆப்பிள் நிறுவனத்தை இப்போதும் இதுவே வழிநடத்துகிறது. இதைக் குறிப்பிட்டு தொழில்நுட்பம் அல்ல, அதைக்கொண்டு என்னவெல்லாம் செய்யமுடியும் என்பதே தங்களுக்கு உத்வேகம் அளிப்பதாகத் தன் வாழ்த்துச் செய்தியில் டிம் குறிப்பிட்டுள்ளார்.
ஆப்பிள் நிறுவனம் நேற்றை நினைவுகூர்வதைவிட நாளையைக் கட்டியெழுப்புவதில் அதிக கவனம் செலுத்துகிறது. எனினும் இந்த முக்கியமான கட்டத்தை, ஆப்பிளை ஆப்பிள் ஆக்கும் மக்களுக்கு நன்றி சொல்லாமல் கடக்கமுடியாது. உலகெங்கும் உள்ள ஆப்பிள் குழுவினர், நிரலாளர் சமூகம், இந்தப் பயணத்தில் இணைந்த ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் நன்றி என நெகிழ்ச்சியுடன் டிம் தெரிவித்துள்ளார். முத்தாய்ப்பாக ஸ்டீவ் ஜாப்ஸின் 1997ஆம் ஆண்டு உரையை நினைவுகூர்ந்து முடிகிறது வாழ்த்து அறிக்கை.
‘உலகை மாற்றிவிடலாம் என நம்பத் துணியும் பித்தர்கள்தான் உண்மையிலேயே உலகை மாற்றுகிறார்கள்.’
காந்தி, மார்ட்டின் லூதர் கிங் முதலிய பலரின் படங்கள் கறுப்பு வெள்ளைப் பின்னணியில் தெரிய ஸ்டிவ் ஜாப்ஸ் இந்த வரிகளைப் பேசிய தருணம் ஆப்பிள் வரலாற்றில் முக்கியமானது. ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து விலகி பின்னர் மீண்டும் இணைந்த காலக்கட்டத்தில் பேசிய உரை இது. ஆப்பிள் நிறுவனத்தின் எல்லா விளம்பரங்களுமே புகழ் வாய்ந்தவைதான். இந்த குறிப்பிட்ட விளம்பரம் ஆப்பிள் வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி சாதிக்கத் துடிப்பவர்களின் மனத்திலும் ஆழப்பதிந்த ஒன்று. பொதுச்சமூகத்தின் சிந்தனையில் இருந்து மாற்றி யோசிக்கும் ஒவ்வொருவரும் கொண்டாடும் வரிகள் இவை.
‘இதோ… அந்தப் பித்தர்களுக்காக!
சமூகத்தோடு பொருந்தாதவர்கள்…
கலகக்காரர்கள்…
இடையூறாளர்கள்…
சதுரக் குழியில் அடைக்க முடியாத உருண்டை ஆப்புகள்…
உலகை வேறு ஒரு கோணத்தில் பார்க்கும் மாற்றுச் சிந்தனையாளர்கள்!’
வெறுமனே விளம்பர வரிகளாக நின்றுவிடாமல் இதைச் செயல்படுத்தியதே ஆப்பிள் நிறுவனத்தின் வெற்றிக் காரணி. மாற்றி யோசித்துக் கனவு காணும் பித்தர்கள் அனைவரின் சார்பாகவும் ஆப்பிள் நிறுவனத்துக்கு வாழ்த்துகள்.

ஸ்டீவ் ஜாப்ஸ் குரலில் மாற்றி யோசி விளம்பரம்
