நாவி – அவதார் உலகுக்கு உயிர் கொடுத்த மொழி
பாண்டோரா. நீல ஒளியில் நனைக்கும் காடுகள், இசை போல மினுங்கும் தாவரங்கள், மனிதரைப் போல உணர்ச்சிகள் கொண்ட, அதே நேரத்தில் மாறுபட்ட ஓர் இனமான நாவி மக்கள். ஜேம்ஸ் கேமரூன் அவதார் படத்தை உருவாக்கும்போது அவர் கொண்டிருந்த கனவு ஒன்றேதான். “இந்த பாண்டோரா உலகம் உண்மையாக உணரப்பட வேண்டும்.” அதைத் திரையில் நிகழ்த்த உதவிய முக்கியமான கருவி நாவி மொழி.
நாவி மொழியை அவதார் திரைப்படத்திற்காக உருவாக்கியவர் பால் ஃப்ராமர் (Paul Frommer). இளம் வயதில் இருந்தே அவர், அறிவியலிலும் கணிதத்திலும் ஆழமான அறிவைக் கொண்டிருந்தார். நியூயார்க் நகரத்தில் வளர்ந்த அவர், ரோச்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் பட்டப்படிப்பு முடித்தார். அதன் பின்னர் மலேசியாவில் ஆசிரியராக இரண்டு ஆண்டுகள் பணியாற்றி, ஆங்கிலத்தையும் உயர்நிலைப் பள்ளி கணிதத்தையும் கற்பித்தார். இந்த அனுபவம் அவருக்கு மொழிகளின் மீது தீவிரமான ஆர்வத்தை உருவாக்கியது. கணிதமும் மொழியியலும் பகுப்பாய்வு, கட்டமைப்பு அடிப்படையில் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்ற புரிதல் அவரை மொழியியல் துறைக்கு இட்டுச் சென்றது.
1981 ஆம் ஆண்டு பால் ஃப்ராமர் தெற்கு கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் மொழியியலில் முனைவர் பட்டம் பெற்றார். ஈரான் நாட்டில் பெற்ற அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு பாரசீக மொழி இலக்கணத்தின் ஓர் அம்சத்தை ஆய்வு செய்து தனது முனைவர் ஆய்வை நிறைவு செய்தார். அதன் பின்னர், தொழில்துறை, கல்வித்துறை எனப் பணியாற்றினார்.
பால் ஃப்ராமர் ஹீப்ரூ, யிடிஷ், லத்தீன், பிரெஞ்சு, ஜெர்மன், மலாய், இந்தோனேஷிய, பாரசீகம், மந்தரின் சீனம் போன்ற பல மொழிகளை கற்றிருந்தாலும், ஆங்கிலத்தில் மட்டுமே முழுமையான தேர்ச்சி உள்ளதாக அவரே ஒருமுறைக் கூறியுள்ளார்.
மேலும், பால் ஃப்ராமர் எட்வர்ட் ஃபைனிகன் உடன் இணைந்து பல மொழிகளின் கூறுகளை எடுத்துரைக்கும் ஒரு பயிற்சி நூலை எழுதியுள்ளார். அவதார் திரைப்படத்திற்காக அந்நிய உலக மக்களுக்கான புதிய மொழியை உருவாக்க நிபுணரைத் தேடிய போது, அந்த திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெற்கு கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறையை அணுகியது. அங்கு பணியாற்றிய எட்வர்ட் ஃபைனிகன், இந்த வாய்ப்பை பால் ஃப்ராமரிடம் கொண்டு சென்றார்.
அந்த நேரத்தில் பால் ஃப்ராமர் ஏற்கனவே ஒரு செயற்கை மொழியை பயிற்சியாக உருவாக்கியிருந்தார். பின்னர் ஜேம்ஸ் கேமரூனை சந்தித்தபோது, பல விதமான அந்நிய மொழி ஒலி மாதிரிகளை அவர் முன்வைத்தார்: அதில் ஒன்று தான் திடீர் காற்றழுத்த ஒலிகளைக் கொண்ட மொழி. அந்த திடீர் ஒலி அமைப்பு கேமரூனை கவர்ந்தது. சுமார் தொண்ணூறு நிமிடங்கள் நீண்ட அந்த சந்திப்பின் முடிவில், இன்று “நாவி” என்று அறியப்படும் மொழியை உருவாக்க பால் ஃப்ராமர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.உலக மொழிகளின் ஒலியியல் அமைப்புகளை ஆராய்ந்த அனுபவம், மொழி உருவாக்கத்தில் தேவையான படைப்பாற்றல், மனிதர்கள் இயல்பாக உச்சரிக்கக்கூடிய ஒலிகளின் மீதான அறிவு ஆகியவை நாவி மொழி உருவாக்கத்தில் அவருக்கு பெரிதும் உதவின.

மனிதர்கள் எளிதாக உச்சரிக்கக்கூடியதாக இருந்தாலும், உலகில் உள்ள எந்த ஒரு மொழியுடனும் முழுமையாக ஒத்துப் போகக்கூடாது என்ற எண்ணத்தில் ஃப்ராமர் அதன் ஒலி அமைப்பை வடிவமைத்தார். அதற்காக சில பூர்வகுடி மொழிகளில் காணப்படும் தனித்துவமான ஒலிகளை அவர் சேர்த்தார். குறிப்பாக ‘எஜெக்டிவ்’ எனப்படும் சிறிய வெடிப்பு (Pop) போன்ற ஒலிகள் நாவி மொழிக்கு அந்நிய உலகின் அனுபவத்தை அளித்தன. நாவி மொழியில் இவை, எக்ஸ் உச்சரிப்பு (px, tx, kx) வடிவத்தில் எழுதப்படுகின்றன. காற்றை திடீரென வெளியேற்றும் விதத்தில் இவை உச்சரிக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டு: pxe: மூன்று, txe’lan: இதயம்/ உள்ளம் போன்ற வெடிப்பொலி கொண்ட சொற்கள்.
ஒலியமைப்புக்குப் பின்னர் உருவானது அதன் இலக்கணம். பல மொழிகளில் சொற்களின் முன்புறம் அல்லது பின்னால் சேரும் உருபுகள் பொருளை மாற்றும். ஆனால் நாவி மொழியில் இன்பிக்ஸ் (infix) எனப்படும் உட்பொதிவு ஒலி, வினைச் சொல்லுடன் பயன்படுத்தப்படுகிறது. அதாவது, ஒரு வினைச்சொல்லின் நடுப்பகுதிக்குள் சிறிய ஒலிகள் சேர்க்கப்பட்டு காலம் அல்லது செயல் நிலை மாற்றப்படுகின்றது. எடுத்துக்காட்டாக, டரோன் (taron) என்ற சொல்லுக்கு “வேட்டையாடுதல்” என்று பொருள். இதன் உட்பகுதியில் ஒல் (ol) என்ற உட்பொதிவு ஒலி சேர்க்கப்பட்டால் ட<ஒல்>அரோன் [ta<ol>aron] ஆக மாறி “வேட்டையாடிக் கொண்டிருக்கிறான்” என்ற பொருளை தருகிறது. இவ்வாறு வினைச்சொல்லின் உட்பகுதிக்குள் சேர்க்கப்படும் சிறிய ஒலிகள் மூலம் செயல் நடைபெறும் காலம், நிலை, நுணுக்கங்களை வெளிப்படுத்துவது நாவி மொழியின் தனித்துவமான இலக்கண அம்சமாகும்.
பெயர்ச்சொற்களும் சுட்டுப்பெயர்களும் எண்ணிக்கையை மிகவும் துல்லியமாகக் காட்டும் தனித்துவமான அமைப்பைக் கொண்டுள்ளது நாவி. ஒரே நபர், இருவர், மூவர், பலர் என எண்ணிக்கையைத் தெளிவாக வேறுபடுத்தும் சிங்குலர், டூயல், ட்ரியல், ப்ளூரல் என்ற அமைப்பு இதில் உள்ளது. எடுத்துக்காட்டாக, Oe (நான்), Moe (நாங்கள் இருவர்), Pxoe (நாங்கள் மூவர்), Ayoe (நாங்கள் பலர்) போன்ற சொற்கள் எண்ணிக்கையை நேரடியாகக் காட்டுகின்றன. இதேபோல் பெயர்ச்சொற்களிலும் முன்னொட்டுகள் சேர்த்து எண்ணிக்கை மாற்றம் வெளிப்படுத்தப்படுகிறது: இக்ரான் (ikran) – ஒரு பறக்கும் உயிரி. மெய்க்ரான் (meikran) – இரண்டு பறக்கும் உயிரி. பிசிக்ரான் (pxikran) – மூன்று இக்ரான். அயிக்ரான் (ayikran) – பல இக்ரான்.
மேலும், இந்த மொழியில் சொற்களின் வரிசையை மாற்றினாலும் பொருள் பொதுவாக மாறாது; எடுத்துக்காட்டாக “ஒய் லு நாவி (Oe lu Na’vi)” (நான் நாவி) என்று சொன்னாலும் சொற்களின் வரிசையை மாற்றிச் சொன்னாலும் (Na’vi lu oe) அதே கருத்தைத் தெரிவிக்க முடியும். இந்த இலக்கண அமைப்பு பாண்டோராவின் இயற்கை வாழ்வியலோடு நெருங்கிய தொடர்பை வெளிப்படுத்துகிறது. மரியாதை, உறவு, இயற்கையோடு இணைந்த வாழ்க்கை ஆகியவை நாவி சொற்களின் பின்னணியில் ஒலிக்கின்றன.
அவதார் திரைப்படக் கதை எழுதும்போது கேமரூன் சுமார் முப்பது நாவி சொற்களை மட்டும் உருவாக்கியிருந்தார். அவற்றின் ஒலி அமைப்பில் பசிபிக் தீவுப் பகுதிகளில் பேசப்படும் மொழிகளின் இசைத் தன்மை போன்ற ஓர் ஒலி உணர்வு இருந்தது. அந்தச் சிறிய விதைகளிலிருந்து முழுமையான மொழியை வளர்த்தவர் ஃப்ராமர். புதிய சொற்கள், இலக்கண விதிகள், வாக்கிய அமைப்புகள், உரையாடல் முறைகள் ஆகிய அனைத்தையும் அவர் வடிவமைத்தார்.
திரைப்படம் வெளியான காலத்தில் நாவி மொழியில் சுமார் ஆயிரம் சொற்கள் இருந்தன. பின்னர் இந்த மொழி திரைப்படத்தைத் தாண்டி ரசிகர்களின் உலகிற்குள் நுழைந்தபோது அதன் சொற்களஞ்சியம் வேகமாக வளர்ந்தது. இன்று மூவாயிரத்திற்கு அருகிலான சொற்கள் வரை வளர்ந்து கொண்டிருக்கிறது.
அவதார் வெளியான சில ஆண்டுகளிலேயே உலகம் முழுவதிலுமுள்ள ரசிகர்கள் இணையத்தில் ஒன்று கூடி நாவி மொழியை ஆராயத் தொடங்கினர். படத்தில் கிடைத்த குறைந்த எண்ணிக்கையிலான சொற்கள், உரையாடல்களை வைத்து அதன் இலக்கண அமைப்பை புரிந்துகொள்ள முயன்றனர். இந்த முயற்சிகள் பின்னர் பெரிய இணைய சமூகங்களாக வளர்ந்தன. அவற்றில் முக்கியமான ஒன்று லேர்ன்நாவி தளம் (LearnNavi.org). இந்த இணைய சமூகமானது நாவி மொழி கற்க விரும்புவோருக்கான உலகின் மிகப்பெரிய வளமாக வளர்ந்து, அகராதிகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வழிமுறைகளை உருவாக்கியது.
பின்னர் 2020 ஆம் ஆண்டில் நாவி மொழியை நீண்ட காலமாக கற்றும் கற்பித்தும் வந்த ஒரு குழு புதிய முயற்சியாக (kelutral) கெலூற்றல் என்ற இணைய சமூகத்தை உருவாக்கியது. “கெலூற்றல்” என்ற நாவி சொல்லுக்கு “இல்லமரம் (home tree)” என்று பொருள். உலகம் முழுவதிலுமுள்ள அவதார் ரசிகர்கள் ஒன்றுகூடி மொழியை கற்கவும், கலாசார அனுபவத்தைப் பகிரவும் ஒரு மெய்நிகர் இல்லமாக அது அமைக்கப்பட்டது. இந்த சமூகத்தின் நோக்கம் நாவி மொழி கற்றலை புதிய தலைமுறைக்கு எளிதாகவும் புதுமையான முறைகளிலும் கொண்டு செல்வதாகும். இந்த சமூகத்தின் முயற்சிகளால் வருடந்தோறும் இணையத்தில் நடைபெறும் “ஒமாட்டிகான்” என்ற மாநாடும் உருவானது. உலகம் முழுவதிலுமுள்ள அவதார் ரசிகர்கள் ஒன்று கூடி மொழி, கலை, கலாச்சாரம் ஆகியவற்றை கொண்டாடும் ஒரு நிகழ்வாக அது வளர்ந்து வருகிறது.
இன்றும் நாவி மொழி வளர்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பால் ஃப்ராமர் புதிய சொற்களையும் இலக்கண விளக்கங்களையும் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். அவை முதலில் நாவிதெரி என்ற (Naviteri.org) அவரது வலைப்பதிவில் வெளியிடப்படுகின்றன. “நாவிதெரி” என்ற சொல்லுக்கு “நாவி பற்றியது” என்று பொருள். அந்த தளம் நாவி மொழியின் வளர்ச்சியைப் பதிவு செய்யும் முக்கியமான ஆவணமாக உள்ளது.
ஒரு திரைப்படத்திற்காக உருவாக்கப்பட்ட மொழி உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான மக்களால் கற்றுக்கொள்ளப்பட்டு பேசப்படும் நிலைக்கு வந்திருப்பது அரிதான நிகழ்வு. நாவி மொழி இன்று வெறும் கற்பனை மொழி அல்ல; அது மனித உணர்ச்சி, உறவு, கவிதை, ஒலி, கற்பனை ஆகிய அனைத்தையும் தாங்கும் ஒரு உயிருள்ள மொழி அனுபவமாக மாறியுள்ளது. பாண்டோராவின் காடுகளில் பிறந்த அந்த மொழி, இப்போது பூமியின் பல பகுதிகளில் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.
நாவியைப் போன்றே தனித்துவமான அனுபவத்தைத் தன்னுடைய “பாம்புகளின் மொழி” வழியாக வழங்கிய பார்சல்டங் குறித்து அடுத்த கட்டுரையில் அறிந்து கொள்வோம்.
- அருட்செல்வம்
