பனை, வாகை: எழுத்துருக்கள் வெளியீடு

ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் 2026, செப்டம்பர் 25ஆம் நாள், வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் பனை, வாகை ஆகிய இரண்டு எழுத்துருக்கள் வெளியிடப்பட்டன. ஒண்மை அறக்கட்டளை ஆதரவுடனும் செல்லினம், முரசு அஞ்சல் வடிவமைப்பாளரும் உருவாக்குநருமான முத்து நெடுமாறன் வழிகாட்டலுடனும் தமிழ் எழுத்துருக் கூடம் உருவாக்கிய எழுத்துருக்கள் இவை. 

விழா தொடங்கியதும், தமிழ் எழுத்துருக் கூடம் பற்றிய யோசனை தோன்றிய நாளை நினைவுகூர்ந்து வரவேற்புரையாற்றினார் நூலகத் தலைவர் சுந்தர் கணேசன். ஒண்மை அறக்கட்டளை அளித்த ஆதரவில் எழுத்துரு, வனப்பெழுத்துப் பயிலரங்கங்கள், எழுத்துரு உருவாக்கம் போன்ற பலவும் சாத்தியமாகின என்றார். முத்து நெடுமாறனை வழிகாட்டியாகப் பெற்ற பிறகு, செய்யும் எதிலும் தங்கத்தரம் வேண்டும் என்கிற உந்துதல் அதிகமானதைக் குறிப்பிட்டார். 

பனை, வாகை ஆகிய எழுத்துருக்களை வெளியிட்டுப் பேசினார் ஒண்மை அறக்கட்டளை நிறுவனர் விக்னேஷ் சுந்தரேசன். ஆவணப்படுத்துதல் துறையில் எண்ணிமக் களத்தில் உள்ள நடைமுறைகள், எதிர்காலத் தேவைகள் பற்றியதாக அவர் உரை இருந்தது. 

சிந்துவெளி ஆய்வுமையத் தலைவரும் முன்னாள் குடிமைப் பணி அதிகாரியுமான ஆர். பாலகிருஷ்ணன், சிறப்புரையாற்றினார். 

“சில மாதங்ளுக்கு முன்பு வெளியான கொற்கை, தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தின் பெயர். முத்து என்ற பெயரோடு தொடர்பிருக்கும் என்று யோசித்து வைக்கவில்லை. அது தானாக அமைந்தது. பெயர் வைத்தபோது எல்லாமே வல்லின எழுத்துகளாக இருக்கிறது என்றே அதைத் தேர்ந்தெடுத்தோம். இப்போது பனை, வாகை என்ற பெயரில் எழுத்துருக்கள் வெளியாகியுள்ளன. நல்ல தமிழ்ச் சொற்களாக இருக்கவேண்டும் என்ற ஆர்வத்தில் வைக்கப்பட்ட பெயர்கள் இவை. வரை என்ற வினைச்சொல் வரைதலைச் சுட்டுகிறது. வரை என்ற பெயர்ச்சொல் மலையை, முகட்டைச் சுட்டுகிறது. கோடு என்றும் மலையை அழைப்பதுண்டு. கோடு என்பது எழுத்தையும் குறிக்கிறது. எழுதுவதால் மட்டுமல்ல, மலைபோன்று எழுவதாலும் எழுத்து எனலாம். அனைத்துமே அழகியலோடு தொடர்புடையவை. எழுத்துரு உருவாக்கும் இப்பணிக்கு ஆதரவளிக்கும் ஒண்மை அறக்கட்டளையின் பெயரை ஆராய்ந்து பார்த்தேன். ஒண்மை என்றால் வெளிச்சம், மேன்மையைக் குறிக்கிறது. இந்தக் குழுவினர் சேர்ந்து உருவாக்கும் எழுத்துருக்களில் அழகும் தரமும் இணைந்துள்ளன” என சொல்லாய்வாகத் தன் உரையை வழங்கினார். 

தமிழ் எழுத்துருக் கூடத்தின் தலைமை வடிவமைப்பாளரான ரஞ்சித் ருஸோ வாகை எழுத்துரு பற்றி விளக்கினார். 

“பதினெட்டாம் நூற்றாண்டில் மரத்தில் செதுக்கித் தயாரிக்கப்பட்ட அச்சு எழுத்துருவினை மறு உருவாக்கம் செய்து ஆவணப்படுத்தியுள்ளோம். தற்காலத்தில் இதற்கு என்னவிதமான பயன்பாடு இருக்கும் என்று கணிக்க இயலவில்லை. தொடக்க காலத்தில் தமிழ் அச்சானபோது இருந்த எழுத்து வடிவத்தை இன்றைய தொழில்நுட்பத்தில் ஆவணப்படுத்துவதே நோக்கம். இந்த உருவாக்கத்தில் நிறைய சவால்கள் இருந்தன. அக்காலத்தில் ஒற்றைக் கொம்பு, இரட்டைக் கொம்பு இரண்டுக்கும் ஒரே வடிவம்தான். தற்காலத் தேவைக்காக நாங்கள் இரட்டைக் கொம்பு வடிவத்தை உருவாக்கினோம். இரண்டு எழுத்துகள் இணைந்து ஒற்றை எழுத்தாகப் பயன்படுத்தும் வழக்கம் இருந்தது. நாங்கள் அவற்றைப் பிரித்து ஒற்றை எழுத்துகளாக வடிவமைத்துள்ளோம். ஆவணப்படுத்துதல் என்பதால் பழங்கால ஆனைக்கொம்பு ஐகார வடிவமும் இருக்கும், இக்காலத்தில் பயன்பாட்டில் உள்ள ஒன்றையும் உருவாக்கியுள்ளோம். ர, துணைக்கால், எ, ஏ எழுத்துகளும் வேறுபாடு இன்றியே இருந்தன அப்போது. படிக்கும்போது குழப்பம் வராமலிருக்க ஏ எழுத்துக்கு கால் சேர்ந்து இப்போது உருவாக்கியுள்ளோம். 

அந்த காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்ட ஆங்கில எழுத்துகளை பயன்படுத்தலாமா என ஆலோசனை செய்தோம். ஆனால் ஆங்கில அச்சுத்துறை பெருமளவில் அப்போது வளர்ந்திருந்தது. அந்த எழுத்துருக்கள் இந்தத் தொடக்கநிலை தமிழ் மரசெதுக்கு எழுத்துருக்களோடு பொருந்தவில்லை. எனவே அதற்குப் பொருத்தமான வடிவில் ஆங்கில எழுத்துகளை வடிவமைத்தோம்.” 

இவ்வாறு வாகை எழுத்துருவின் சிறப்புகளை எடுத்துரைத்த ரஞ்சித், பனை எழுத்துரு பற்றிப் பேச முத்து நெடுமாறனை அழைத்தார். 

தமிழ் எழுத்துரு வரலாற்றையோ அல்லது பழைய காலகட்டத்தைச் சேர்ந்த கருப்பொருள் ஒன்றையோ பேசும் நிகழ்ச்சி ஒன்றுக்கு அழைப்பிதழ் தயாரிக்க வாகை எழுத்துரு பயன்படும் எனச் சொல்லித் தன் உரையைத் தொடங்கினார் முத்து நெடுமாறன்.

“வாகை, பனை இரண்டுமே காட்சி எழுத்துருக்கள். முன்னர் வெளியிட்ட கொற்கை, பனுவல் எழுத்துரு. பனுவல் எழுத்துருவைச் சில நேரங்களில் தலைப்பெழுத்தாகவும் பயன்படுத்தலாம். ஆனால் காட்சி எழுத்துரு​வை ஒருபோதும் நூலின் உரைநடைக்குப் பயன்படுத்த முடியாது. தீபாவளியன்று பொங்கல் சாப்பிடலாம், பொங்கலன்று தீபாவளியைச் சாப்பிட முடியாது என்பதுபோலத்தான். இரு வகை எழுத்துருக்களுக்குமே சில விதிகள் பொதுவானவை. ஆனால் கோணம் வெவ்வேறு. இரண்டிலுமே எழுத்தமைதி வேண்டும் என்றாலும் பனுவல் எழுத்துருவில் அமைதி மொத்தமாக இணைந்து நம்மை ஈர்க்கவேண்டும். காட்சி எழுத்துருவில் ஒவ்வோர் எழுத்துமே என்னைப் பார் என ஈர்க்கும். நாங்கள் வடசென்னையில் நடத்திய எழுத்துலாவில் இதைப் பல இடங்களில் கண்டு ஆவணப்படுத்தினோம். நடைமுறையில் செயல்படுத்தப்படும் தீர்வுகளை சரியாக ஆவணப்படுத்தினால் அவற்றை எண்ணிமத் தளத்திலும் பயன்படுத்தலாம்.

எழுத்துகளுக்கு உள்ளே இருக்கும் வெளி காட்சி எழுத்துருவில் கையாளப்படும் விதம் பனுவல் எழுத்துருவில் இருந்து வேறுபட்டது. இன்று வெளியிடப்பட்ட பனை எழுத்துருவை உருவாக்கும் முன்பு முதலில் வழக்கம்போலவே ஆய்வுகள் மேற்கொண்டோம். தேர்ந்தெடுத்த எழுத்துரு வடிவங்களை ஒண்மை அறக்கட்டளை நண்பர்களுக்கு அனுப்பி அவர்களின் கருத்துகளையும் கேட்டுக்கொண்டோம். அவர்களுக்கு அனுப்பும்போது எழுத்தின் எந்தெந்தப் பகுதியைக் கவனிக்கவேண்டும் என்பதைப் படம் வரைந்து பாகங்கள் குறித்து அனுப்பினோம். எழுத்தின் கோடுகள் முட்டும் இடம், கோடு உயரும் விதம் போன்றவற்றைக் காட்டி எதை வைத்துக்கொள்ளலாம் எதை விட்டுவிடலாம் என விளக்கியிருந்தோம். 

முதலில் தமிழ் எழுத்துகளை வடிவமைத்தோம். எங்கள் நாட்டிலும் சிங்கப்பூரிலும் எதை எழுதினாலும் ஆங்கிலத்திலும் எழுதவேண்டிய தேவை உள்ளது. மற்ற நாடுகளிலும் தமிழ் உரையின் இடையில் ஆங்கிலம் வருகிறது. தமிழ் எழுத்துகள் மட்டும் கொண்ட எழுத்துருவை உருவாக்கினால் ஆங்கில எழுத்துகள் வரும்போது எழுத்தமைதியைக் குலைக்காத ஒன்றைத் தேடுவது வடிவமைப்பாளர்களுக்குப் பெரிய வேலை. லத்தின் எழுத்துகளையும் சேர்த்தே வடிவமைப்பது சரியான தீர்வு.

அண்மையில் தாய்லாந்தில் நடந்த எழுத்துரு மாநாட்டில் கலந்துகொண்டேன். அங்கே கெம்போடிய எழுத்துருக் கலைஞர் ஒருவர் இரு மொழி எழுத்துகளை இணைத்து வடிவமைப்பது பற்றிப் பேசினார். அங்கே நான் பரிந்துரைத்த கருத்தையே இங்கும் பின்பற்றினோம். நாம் உருவாக்கும்  எழுத்துரு எந்த மொழிக்காக செய்யப்படுகிறதோ அதற்கே அதிக முக்கியத்துவம் தரவேண்டும். அதற்கு ஒத்துப்போவதுபோல லத்தின் எழுத்துகளை வடிவமைக்கலாம். லத்தின் எழுத்துகளுக்குக்காக முதன்மை எழுத்துருவில் மாறுதல் ஏற்படுத்தக்கூடாது என்பதே என் கருத்து. அதன்படியே பனை எழுத்துருவை முதன்மையாகத் தமிழிலும் அதற்கேற்ற லத்தின் எழுத்துகளுடனும் உருவாக்கினோம். இதை ஆங்கில எழுத்துருவாகப் பயன்படுத்தினால் அவ்வளவு அழகான தோற்றம் இருக்காது. ஆனால் தமிழ் உரையில் ஆங்காங்கே ஆங்கிலம் வரும்போது இந்த எழுத்துருவில் இரண்டுமே பார்க்க அழகாக இருக்கும்.

அடுத்ததாக எழுத்துகள் எந்த விதத்தில் இருக்கவேண்டும் என்பதை முடிவு செய்வது. பேனாவால் எழுதியதுபோன்ற வடிவத்தில் இவ்வெழுத்துகளை வடிவமைத்துள்ளோம். இழுப்புகள் பற்றி ஜெரார்டு எழுதிய நூலை (The Stroke – Theory of Writing – Gerrit Noordzij) இத்துறையில் பணியாற்றுபவர்கள் அவசியம் படிக்கவேண்டும். பேனாவைக் காகிதத்தில் இருந்து எடுக்காமல் ஆங்கில என் (n) எழுத்தின் நேர்க்கோட்டையும் அதை ஒட்டியுள்ள வளைவுக் கோட்டையும் எழுதும்போது ஒரு விதமான தோற்றம் இருக்கும். அதே எழுத்தை நேர்க்கோடு எழுதியதும் பேனாவை எடுத்து மேற்பகுதியில் வைத்து வளைவுக் கோட்டைத் தொடங்கி எழுதினால் வேறு தோற்றம் தரும். இதுபோன்று இழுப்புகளின் தன்மை பற்றித்தான் தி ஸ்ட்ரோக் நூல் விளக்குகிறது. பனை எழுத்துருவை பேனாவை எடுத்து வைத்து எழுதினால் என்ன தோற்றம் கிடைக்குமோ அதன்படி வடிவமைக்க முடிவு செய்தோம். எழுத்தமைதியோடு கூடிய எழுத்துருக்களை உருவாக்க இதுபோன்ற வடிவமைப்பு முடிவுகள் அனைத்து எழுத்துகளிலும் ஒன்றுபோலவே பின்பற்றப்படவேண்டும்.

எட்டு விதமான தடிமன்களில் இவ்வெழுத்துகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மெல்லிய தடிமன் கொண்ட எழுத்தினையே முதலில் உருவாக்கினோம். அதிகத் தடிமன் கொண்ட எழுத்தை வடிவமைக்கையில் மீண்டும் ஒரு முக்கியமான வடிவமைப்புத் தீர்மானத்தை மேற்கொண்டோம். கொற்கை எழுத்துருவிலும் இதைப் பின்பற்றியுள்ளோம். எழுத்துகளின் தடிமன் கூடும்போது எல்லா கோடுகளும் ஒன்றுபோலவே தடிமனாக்கினால் எழுத்தின் உள்வெளி இருண்டுவிடும். மெலிந்தும் அடர்த்தியாகவும் வெவ்வேறு தடிம வேறுபாட்டுடன் எழுத்தை வடிவமைக்கும்போது பார்க்க அழகாக இருக்கும். அப்படித்தான் பனை எழுத்துவின் அதிக எடை கொண்ட எழுத்துரு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் இப்படி யாரும் செய்வதில்லை. தமிழுக்கேற்றவாறு நாங்கள் இந்தப் புதுமையான வழிமுறையைப் பின்பற்றியுள்ளோம். 

மெல்லிய தடிமன், அதிக தடிமன் இரண்டையும் வடிவமைத்தபிறகு இடையில் உள்ள ஆறு எடைகளை கணினி நுட்பத்தின் உதவியுடன் தானாகவே உருவாக்கும்படி செய்தோம். தற்காலத்திய அச்சு வடிவமைப்பாளர்களுக்கு இந்த எடைகள் போதுமானதாக இருப்பதில்லை. இரண்டு எடைகளுக்கு இடைப்பட்ட ஏதோ ஒன்று பொருத்தமாக இருக்கும் என நினைத்தால் அந்த அளவில் அந்த எழுத்துரு இருக்கவேண்டும் என நினைக்கிறார்கள். எனவே இந்த எழுத்துருவை வேரியபிள் எழுத்துருவாக உருவாக்கியுள்ளோம். எந்த அளவில் வைத்துப் பயன்படுத்தினாலும் அதன் தோற்றம் அழகாகத் தெரியும்படியான நுட்பமான வடிவமைப்பு விதிகளை எழுத்துருவின் உள்ளேயே சேர்த்துள்ளோம். 

ஒளகார எழுத்தில் உள்ள ள வடிவமும் ளகர வடிவமும் யூனிகோடில் வெவ்வேறு எழுத்துகளாகத்தான் உள்ளன. நாம் உருவாக்கும் எழுத்துருவிலோ இரண்டும் பார்ப்பதற்கு ஒன்றுபோலவே தோற்றமளிக்கின்றன. ஒளகாரக் குறியீட்டின் ள எழுத்தை அளவு குறைவாக வைக்கும் பரிந்துரை ஒன்று முன்வைக்கப்பட்டது. அழகியல் கோணத்தில் அந்தப் பரிந்துரையில் எனக்கு உடன்பாடில்லை. எனவே 2014ஆம் ஆண்டு நான் ஐகார எழுத்தின் மேல்பாதியை ஒளகார எழுத்தின் ள-வுக்குப் பயன்படுத்தலாம் எனும் தீர்வினை முன்வைத்தேன். கொற்கை எழுத்துருவிலும் இந்த வடிவத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். முதலில் பார்த்தவுடன் விந்தையாக இருந்தது ஆனால் புரிகிறது, அழகாக இருக்கிறது என நேர்மறையான கருத்துகளே வந்தன. இந்த எழுத்துருவிலும் ஒளகார எழுத்தின் ள வடிவத்துக்கும் ளகரத்துக்கும் வடிவ மாறுபாட்டைத் தெளிவாக உணர்த்தும் வடிவங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.” 

இன்னும் பல சிறப்புக்கூறுகள் இருந்தாலும் நேரம் கருதி மிகச் சிலவற்றை மட்டும் இங்கே விளக்கியுள்ளேன் எனத் தன் உரையை முடித்துக் கொண்டார் முத்து நெடுமாறன். 

அதன் பின்னர் கொற்கை எழுத்துருப் பயனர்களில் ஒருவருக்குப் பேச வாய்ப்பளிக்கப்பட்டது. தன்னுடைய யூட்யூப் தளத்தில் தான் பதிவேற்றும் காணொளிகளுக்கு கொற்கை எழுத்துருவைப் பயன்படுத்துவது பற்றிப் பேசினார் நாகராஜ். அதன் அழகை மெச்சியவர் பனுவல் எழுத்துரு என்றாலும் அதைக் காட்சி எழுத்துருவாகவும் பயன்படுத்துகிறேன் என்றார். தற்போது வெளியாகியுள்ள எழுத்துருக்களையும் பயன்படுத்த ஆர்வம் காட்டினார். அண்மையில் தான் பதிவேற்றிய கல்வெட்டு பற்றிய காணொளிக்கு பழங்கால வடிவம் கொண்ட வாகை எழுத்துரு பொருத்தமாக இருக்கும், உடனேயே மாற்றிவிடுகிறேன் என்றார். 

நிறைவுப் பகுதியாக ஒண்மை அறக்கட்டளையின் கலை நெறியாளர் நரேந்திரன்.க நன்றியுரையாற்றினார். நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களைக் குறிப்பிட்டு நன்றி தெரிவித்த நரேந்திரன், எழுத்துருக்களுக்குப் பெயர் வைத்ததைப் பற்றியும் பேசினார். நீளமான பெயர்களை இட்டால் மற்ற மொழி பேசும் மக்கள் அதை உச்சரிக்கக் கடினமாக இருக்கும். மரத்தைச் செதுக்கி உருவாக்கிய அச்சு எழுத்துரு என்பதால் வாகை மரத்தின் பெயரை வைத்தோம். பனையோலையை நினைவுகூரும்படி பனை என்று பெயரிட்டோம். குறைவான எழுத்துகளுடன் எழுதவும் உச்சரிக்கவும் எளிமையாக இருக்கும் பெயர்கள் இவை. காக்கைப்பாடினியார், பிசிராந்தையார் என்று எனக்குப் பிடித்த பெயர்களை வைப்பதைத் தடுத்து இப்பெயர்களைத் தேர்ந்தெடுக்க உதவினார் முத்து எனக் கலகலப்பாகத் தன் நன்றியுரையை முடித்துக்கொண்டார். 

நிகழ்ச்சி நிறைவுற்ற பிறகும் கலையாமல் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டிருந்தனர். தமிழ் எழுத்துருத் துறையில் ஆர்வம் கொண்டோர் சந்தித்து உரையாடும் களமாக மாறிக்கொண்டிருக்கிறது ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்.  இந்த ஆர்வம் நிறைய தமிழ் எழுத்துருக்களை உருவாக்க உதவும்.

Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now