முரசு அஞ்சல் 12.1.11 பதிப்பு வெளியானது

முரசு அஞ்சல் 12.1.11ஆம் பதிப்பு விண்டோசு, மெக் ஆகிய இரு தளங்களிலும் இன்று வெளியிடப்பட்டது. இந்தப் பதிப்பின் முதன்மைச் சிறப்பு, முரசு அஞ்சல் கோப்பு மாற்றி (Murasu Anjal File Converter) எனும் புதிய துணைச் செயலி. பழைய குறியீட்டு முறைகளில் எழுதப்பட்ட தமிழ் ஆவணங்களை இது யூனிகோடுக்கு மாற்றித் தருகிறது.

MurasuFileConverter

படத்தில் : பழைய குறியீட்டு முறையில் அமைந்த வேர்டு ஆவணம் ஒன்றைக் கோப்பு மாற்றியில் திறந்துள்ளோம். மூன்று எழுத்துருக்களில் இரண்டு, பழைய குறியீட்டு முறையில் இருப்பதாகத் தெரிகிறது. Times New Roman எழுத்துகள் மாற்றப்படாமல் விடப்பட்டுள்ளன.

முரசு அஞ்சல் பழைய பதிப்புகளில் இந்த மாற்றியானது, மைக்ரோசாப்டு வேர்டு, பவர்பாயின்ட் ஆகியவற்றுக்கான செருகுநிரலாக (plug-in) இருந்தது. அதை நிறுத்திவிட்டோம். அதன் நிரல், பழைய மைக்ரோசாப்டு கட்டமைப்பைச் சார்ந்தது. அதனால் நிறுவுவதிலும் வெளியிடுவதிலும் தொடர்ந்து சிக்கல்கள் இருந்தன. வேர்டுக்கும் பவர்பாயின்ட்டுக்கும் உள்ளேயே இதை வைத்திருக்கும் வேறு சில வழிகளையும் ஆராய்ந்தோம்; அவை நம் தேவைகளுக்குப் பொருத்தமானதாக இல்லை. எனவே தனியாக ஒரு செயலியை உருவாக்கியுள்ளோம். .இந்த முரசு அஞ்சல் துணைச் செயலி, விண்டோசிலும் மெக்கிலும் சிறப்பாக இயங்குகிறது.

மாற்றக்கூடிய ஆவணங்கள்

TSCII, TAB, TAM, முரசு 6, அஞ்சலின் முந்தைய குறியீட்டு முறைகள் ஆகியவற்றில் அமைந்த ஆவணங்களை இந்த துணைச் செயலி ஏற்றுக்கொண்டு மாற்றித் தரும். இவற்றைத் தவிர, பரவலாகப் பயன்பாட்டில் இருந்த தாரகை, துணைவன், கணியன், மயிலை ஆகியவற்றையும் இது கையாளும். வேர்டு ஆவணங்களையும் (.docx) எளிய உரைக் கோப்புகளையும் (.txt) மாற்றலாம். இதை இயக்க மைக்ரோசாப்டு ஆபீசு நிறுவப்பட்டிருக்க வேண்டியதில்லை.

சில பழைய கோப்பு வடிவங்களுக்கு மட்டும் ஒரு கூடுதல் படி தேவை. வேர்டு 97-2003 கோப்புகளையும் (.doc) .rtf கோப்புகளையும் வேர்டிலோ அவற்றைத் திறக்கவல்ல வேறொரு செயலியிலோ திறந்து, .docx ஆக முதலில் சேமித்துக்கொள்ளுங்கள்; பிறகு உள்ளடக்கத்தை, முரசு அஞ்சல் கோப்பு மாற்றியைப் பயன்படுத்தி யூனிகோடுக்கு மாற்றலாம். பழைய முரசு .mrt கோப்புகளை முதலில் .rtf ஆக மாற்றிவிட்டு, அதே வழியைத் தொடரலாம்.

மாற்றும் முறை

.docx கோப்பு ஒன்றை மாற்றியில் இழுத்துப்போடுங்கள்; அல்லது Browse பொத்தானைப் பயன்படுத்தி ஆவணத்தைத் தேர்ந்தெடுங்கள். ஆவணத்தில் உள்ள எல்லா எழுத்துருக்களையும் செயலி பட்டியலிடும். உள்ளீடு செய்த கோப்பினில், பழைய குறியீட்டு முறையில் உள்ள உரை எவ்வளவு, எந்தக் குறியீட்டு முறை என்று செயலி கருதுகிறது போன்ற தகவல்களைக் காட்டும். Convert பொத்தானை அழுத்தும்வரை எதுவும் மாறாது.

எழுத்துருவின் பெயரிலிருந்து கண்டறியப்படும் பழைய குறியீட்டு முறை பொதுவாகச் சரியாகவே இருக்கும். ஆனால் பழைய ஆவணங்களில் சில நேரங்களில் எழுத்துருவின் பெயர் விடுபட்டிருக்கும். அப்போது உரையில் உள்ள எழுத்துகளைக் கொண்டே எந்தக் குறியீட்டு முறை என்பதைக் கணிக்க வேண்டியுள்ளது. அப்படிக் கணித்தது சரியாக இல்லையெனில் ஒவ்வொரு வரிக்கும் குறியீட்டு முறையை நீங்களே மாற்றிக்கொள்ளலாம். ஏற்கெனவே யூனிகோடில் உள்ள அல்லது அடையாளம் காண முடியாத வரிகள் உங்கள் கோப்பில் இருப்பின் அவை மாற்றம் செய்யாமல் அப்படியே விடப்படும்.

உள்ளீடு செய்யப்பட்ட கோப்பில், செயலி எந்த மாற்றத்தையும் செய்யாது. கோப்பின் பெயரின் இறுதியில் “(Anjal)” என்று சேர்த்து, புதிய கோப்பு ஒன்றைப் பக்கத்திலேயே உருவாக்கும். எடுத்துக்காட்டாக, Report.docx என்பது Report (Anjal).docx ஆக உருவாகும்.

இலக்கு எழுத்துரு

மாற்றப்பட வேண்டிய எழுத்துருவாக ‘Anjal InaiMathi New’ முன்கூட்டியே தானாகத் தேர்வாகியிருக்கும். மாற்றத்தைத் தொடங்குவதற்கு முன் ஒவ்வொரு வரிக்கும் நீங்கள் விரும்பும் புதிய எழுத்துருவைத் தேர்ந்தெடுக்கலாம். உங்கள் உரிமத்தில் உள்ளடங்கிய அஞ்சல் எழுத்துருக்கள் மட்டுமே தேர்வுப்பட்டியலில் இருக்கும்.

யூனிகோடு ஆவணங்களில் எழுத்துரு மாற்றம்

சில நேரங்களில், ஏற்கெனவே யூனிகோடில் அமைந்த ஆவணங்களையும் மாற்றவேண்டிய தேவை உண்டாகிறது. இணையத்திலிருந்தோ மின்னஞ்சலிலிருந்தோ வெட்டி ஒட்டப்பட்ட தமிழ் உரை பெரும்பாலும் தானாகவே லதா அல்லது நிர்மலா எழுத்துருவில் அமைந்துவிடுகிறது. முரசு அஞ்சல் 10இல் உருவாக்கிய ஆவணங்கள் ஏற்கெனவே யுனிகோடில்தான் உள்ளன; ஆனால் அவற்றில் உள்ள எழுத்துருக்கள் பழைய வடிவங்கள். அவை முரசு அஞ்சல் 12இல் மேம்படுத்தப்பட்டுள்ளன.

இவை போன்று ஏற்கெனவே யூனிகோடு முறையில் இருக்கும் ஆவணங்களில் எழுத்துருவை மட்டும் மாற்ற, குறியீட்டு முறை பட்டியலில் “Change font only” என்பதைத் தேர்ந்தெடுங்கள். உரை அப்படியே இருக்க, எழுத்துரு மட்டுமே மாறும். அஞ்சல் 10 எழுத்துருக்கள், அவற்றுக்கு ஏற்ற புதிய அஞ்சல் எழுத்துருவாக மாற்றப்படும். எடுத்துக்காட்டாக, Anjal Paari எழுத்துருவில் உள்ள ஆவணம் Anjal Paari New என்றாகும்; அதாவது ஆவணத்தை எழுதியவர் தேர்ந்தெடுத்த அதே எழுத்துரு, ஆனால் மேம்பட்ட புதிய வடிவில்.

ஆசிரியர்களுக்கு இது நன்கு பயன்படும். Anjal InaiMathi Sch Book எழுத்துருவில் உருவாக்கிய ஆவணங்களை இந்த கோப்பு மாற்றி பயன்படுத்தி Anjal New InaiMathi Sch Book எழுத்துருவுக்கு மாற்றிக்கொள்ளலாம்.

தமிழ் உரை மட்டுமே மாறும்; ஆங்கில உரை, ஆவணத்தை எழுதியவர் பயன்படுத்திய எழுத்துருவிலேயே இருக்கும். ஆங்கில உரையும் மாற வேண்டுமெனில் “Apply font to” என்பதை “All text” என அமைத்துக்கொள்ளுங்கள்.

MurasuFileConverter

படத்தில்: மெக்கில் கோப்பு மாற்றி துணைச் செயலி.

கோப்பு மாற்றியைத் திறக்க

விண்டோசு, மெக் ஆகிய இரு தளங்களிலும் முரசு அஞ்சல் தெரிவுப்பட்டியில் (Menu bar) இருந்தே கோப்பு மாற்றியைத் திறக்கலாம். முரசு அஞ்சல் , வழக்கம்போல விண்டோசில் கீழுள்ள அறிவிப்புப் பகுதி தெரிவுப்பட்டியிலும் (tray icon menu), மெக்கில் உள்ளிடு முறை தெரிவுப்பட்டியிலும் (input method menu) காணப்படும்.

பவர்பாயின்ட் கோப்புகள்

பவர்பாயின்ட் (.pptx) கோப்புகளை மாற்றுவதற்கான ஆதரவு இன்னும் சேர்க்கப்படவில்லை. பழைய விளக்கக்காட்சிகளை மாற்ற வேண்டிய தேவை போதிய அளவில் இருந்தால் சேர்க்கலாம். அத்தகைய கோப்புகள் உங்களிடம் இருந்தால் [email protected] முகவரிக்கு எழுதுங்கள்.

புதுப்பிப்பைப் பெற

https://anjal.net/download இணைப்பில் புதிய முரசு அஞ்சல் 12.1.11 பதிப்பைப் பதிவிறக்கம் செய்யலாம், முரசு அஞ்சல் செயலியுடன் சேர்த்தே கோப்பு மாற்றியும் நிறுவப்படும். இதை இயக்குவதற்கு முரசு அஞ்சல் 12 Personal அல்லது Premium உரிமம் தேவை.

பல பழைய ஆவணங்களை நாங்கள் மாற்றம் செய்து பார்த்தபோது, மாற்றப்பட்ட உரை, மூல ஆவணங்களில் இருந்தவாறே யூனிகோடு குறியீட்டு முறைக்கு மாறி இருந்தது. எனினும் பழைய கோப்புகள் பலவகைப்பட்டவை. ஏதேனும் ஒன்று சரியாக மாறவில்லை எனில், அதை [email protected] முகவரிக்கு அனுப்புங்கள்; அவற்றைச் சரிசெய்ய முயல்கிறோம்.

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

Four Tamil word games, beautifully crafted for iPhone & iPad.

Download Now