கையடக்கக் கருவிகளில் தமிழ்

முத்து நெடுமாறன்


அரசு மற்றும் பெருநிறுவனங்களின் பயன்பாட்டில் மட்டும் இருந்த கணினித் தொழில்நுட்பம், ‘பெர்சனல் கம்பியூட்டர்’ எனப்படும் தனிநபர் கணினிகளின் வழிதான் பொதுமக்களின் பயன்பாடிற்கு வந்தது.

இந்தத் தனிநபர் கணினிகளின் தோற்றமும் பயன்பாடும் தொடக்க காலத்தில் மேற்கு நாடுகளிலேயே இருந்ததால், இவற்றின் ‘ஆட்சி மொழியாக’ ஆங்கிலமே மேலோங்கி இருந்தது. கணினியை இயக்கும் கட்டளைகளும் அவற்றிற்கேற்பக் கணினி வழங்கும் மறுமொழியும் ஆங்கிலத்திலேயே இருந்தது — அதுவும் அமேரிக்க ஆங்கிலத்திலேயே இருந்தது.

தனிநபர் கணினிகள் உலகளாவிய பயன்பாட்டிற்கு வந்த போதுதான் மற்ற மொழிகளிலும் இந்தக் கணினிகள் இயங்கவேண்டிய தேவை ஏற்பட்டது. ஆங்கிலம் இரண்டாம் மொழியாகக் கூட இல்லாத நாடுகளின் தாய்மொழிகள் முதலில் சேர்க்கப் பட்டன. ஜெர்மன், பிரஞ்சு, இத்தாலி போன்ற ஐரோப்பிய மொழிகள், சீனா, ஜப்பான், கொரியா மற்றும் அரபு மொழிகள் முதலில் சேர்க்கப்பட்டன.

இந்தியாவில் ஆங்கிலப் புழக்கம் அதிகமாக இருந்ததாலும், கணினி வாங்கக் கூடிய வசதி உள்ளவர்கள் ஆங்கிலதில் பேசவும் எழுதவும் நல்ல தேர்ச்சி பெற்றிருந்ததாலும் இந்திய மொழிகளைக் கணினியில் சேர்க்க வேண்டிய கட்டாயம் எந்தக் கணினி நிறுவனத்திற்கும் ஏற்பட்டதில்லை. சீனா, ஜப்பான் நாடுகளைப்போல இந்திய மொழிகளின் தேவையைக் கட்டாயப் படுத்தும் சட்டம் எந்த நாட்டிலும் இல்லை.

இரண்டாயிரமாம் ஆண்டிற்குப் பிறகே, இந்திய மொழிகள் கணினிகளுக்குள் இயல்பாக ஊடுருவத் தொடங்கின. தமிழும் அவ்வாறே இயல்பாகக் கணினிகளில் இடம்பெறத் தொடங்கியது. அதுவரை, தமிழ் ஆர்வம் உள்ள கணினி வல்லுநர்கள் (கணிஞர்கள்) அவரவர் சிந்தனைக்கேற்பத் தமிழ் மொழியின் பயன்பாட்டைக் கணினிக்குள் சேர்த்தனர். ஒன்றுபடுத்தப்பட்ட தமிழ்த் தொழில்நுட்பத் தரங்கள் (Tamil technology standards) அதன்பின் அறிமுகப்படுத்தப் பட்ட போதும், பழைய முறைகள் பல காரணங்களுக்காக இன்றும் கூட ஒருமைப்படுத்தப்பட்ட தரங்களுக்கு மாறவில்லை.

கையடக்கக் கருவிகள்

தனிநபர் கணினிகளின் பயன்பாடும் வடிவமைப்பும் பலவகையான மாறுதல்களைக் கண்டும் கடந்தும் வந்துள்ளது. ஒரு மேசையின் மேல் இடம் கோரும் தனிநபர் கணினிகளின் அடுத்த பரிணாமம் கையடக்கக் கருவிகளே என்று பலரும் கருதுகின்றனர். கணினி, செல்பேசி, புகைப்படக் கருவி (கமிரா), திசைகாட்டி (காம்பஸ்), நாள்காட்டி, கடிகாரம் போன்ற கருவிகளின் செயல்கள் அனைத்தையும் ஒரே கருவியில் அடக்கும் சாதனைதான் இன்றைய தொழில்நுட்ப உலகை வலிந்து ஈர்க்கிறது.

தமிழ் மொழிக்குக் கணினிகளில் ஏற்பட்ட பின்னடைவு, கையடக்கக் கருவிகளிலும் ஏற்பட்டு விடக் கூடாது எனும் வற்றாதக் குறிக்கோளோடு உலகளாவிய நிறுவனங்களுடன் நடத்திய சந்திப்புகளும் கலந்துரையாடல்களும் வரவேற்கத்தக்கப் பயன்களை அளித்துள்ளன.

ஆப்பிள் நிறுவனத்தின் மெக்கிண்டாஷ் கணினிகளில் மட்டும் அல்லாது, ஐ-போன், ஐ-பேட், ஐ-பாட் டச் மற்றும் ஆப்பிள்-டிவி கருவிகளிலும் முரசு அஞ்சலில் உள்ள தமிழ் எழுத்துருக்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதனோடு, எச்.டி.சி. நிறுவனம் இந்தியாவில் வெளியிடும் அவர்களின் (ஆண்டிராய்டு வகை) கையடக்கக் கருவிகளிலும் முரசு அஞ்சலின் எழுத்துருக்களும் தமிழ் உட்பட மற்ற இந்திய மொழிகளுக்கான உள்ளீட்டு முறைகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்தக் கருவிகளில் தவழ்ந்து வரும் தமிழைக் கீழ்க்கணும் படங்களில் காண்போம்:

குறுஞ்செய்தி

செல்பேசிகளில் தமிழ் என்றவுடன் பலருக்கும் முதலில் தோன்றும் பயன் குறுஞ்செய்திதான். குறுஞ்செய்தி முக்கியமான பயன் என்றாலும், முதன்மையான பயன் என்று சொல்ல முடியாது. அனுப்புபவர் மட்டும் அல்லாது, பெறுபவரும் தமிழ் சேர்க்கப்பட்ட செல்பேசியை வைத்திருக்க வேண்டும். எனினும், தமிழில் எழுதப்பட்ட குறுஞ்செய்திகளின் பகிர்வுகளை கீழே உள்ள படங்கள் காட்டுகின்றன. இவை ஐ-போன் கருவியில் இருந்து எடுக்கப்பட்டவை.


201204210020.jpg 201204210019.jpg


இணையப் பக்கங்கள்

விக்கிபீடியாவின் தமிழ்ப் பக்கங்கள் மற்றும் மலேசிய எழுத்தாளர் ரெ. கார்த்திகேசு அவர்களின் வலைப்பூ (blog). இதுபோல, அனைத்துலக யூனிகோடு தரத்தில் அமைக்கப்பட்ட அனைத்துத் தமிழ்ப் பக்கங்களையும் தமிழிலேயே படிக்கலாம்.


201204210020.jpg 201204210021.jpg

நட்பூடகங்கள்

ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டரில் இருந்து சில தமிழ் வரிகள்.


201204210021.jpg 201204210021.jpg

யூ டியூப்பில் தமிழ்ப் படங்களையும் பாடல்களையும் தமிழிலேயே தேடலாம். ஆங்கிலத்தில் வந்தச் செய்திக்ளைத் தமிழிலும் தமிழில் வந்தச் செய்திகளை ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கலாம்.


201204210021.jpg 201204210021.jpg

செய்திச் செயலிகள்

செம்பருத்தி – மலேசியா இன்று இணைந்து வழங்கும் மலேசியத் தமிழ்ச் செய்திகள் மற்றும் செல்லினத்தில் உள்ள இந்தியச் செய்திகள்.


201204210022.jpg 201204210022.jpg

மின்னூல்

நூல்வடிவம் அச்சில் இருந்து மின்வடிவமாக மாறிவரும் வேளையில் தமிழ் நூல்கள் பின்தங்கிவிடாது என்பதை உணர்த்தும் ஒரு தமிழ் மின்னூல். அதோடு லிப்கோவின் வெளியீடான தமிழ்ப் பேரகராதியின் முழுமையான மின்-வடிவம்.


201204210022.jpg 201204210022.jpg 201204210023.jpg 201204210023.jpg


செல்லினம்

ஐ-போனில் தமிழில் எழுதுவதை எளிமைப் படுத்திய செயலி. தமிழ் உலகிற்கு மலேசியா தந்த கொடை.

201204210024.jpg 201204210024.jpg


கையடக்கக் கருவிகளில் தமிழின் எதிர்காலம்.

தமிழ் மொழியின் புழக்கம் கணினிகளைவிட, கையடக்கக் கருவிகளிலேயே மேலோங்கி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எதிர்பார்ப்பை உண்மையாக்க வேண்டும். பயணிகள் இருந்தால் தான் பயணம் தொடரும். அதனைப்போல தொழில்நுட்ப உலகில் பயனர் இருந்தால் தான் புதியன பிறக்கும்.

தமிழ் மொழியைத் தொழில்நுட்ப உலகில் மேலோங்கி நிற்கச் செய்வதில் நம் அனைவருக்கும் பொறுப்பு உண்டு. புதிய மேம்பாடுகளைக் கணிஞர்கள் ஆராயும் அதே வேளையில், இந்த மேம்பாடுகளுக்கு உண்மையான பயன் இருக்கிறது என்பதனைப் பயனர்களே மெய்ப்பிக்க வேண்டும்.

ஆங்கிலத்தை இயல்பாகப் பயன்படுத்தும் வாய்ப்பைப்பெற்ற நம் வளரும் தலைமுறையினருக்கு, தமிழையும் இயல்பாகத் தருவோமே!

(குறிப்பு: 15.4.2012 அன்று மலேசியாவில் உள்ள ஷா ஆலம் நகரில் நடைபெற்ற தமிழர் திருநாள் விழா மலரில் வெளிவந்த கட்டுரை)

Did you like this? Share it: