தனிப்பட்ட சொற்பட்டியல் : ஐ.ஒ.எஸ் செல்லினத்தில்!

தனிப்பட்ட சொற்பட்டியல், அஞ்சல் விசைமுகத்தின் ‘உயிர் சுழற்சி’ இவற்றோடு ஐ.ஒ.எசுக்கான புதிய செல்லினம் இன்று வெளிவருகிறது.

இதில், பரிந்துரைகளுக்காகப் பயன்படுத்தப்படும் சொற்பட்டியலில், பயனர்கள் தங்கள் சொந்தச் சொற்களைச் சேர்த்துக் கொள்ளலாம்.

ஆண்டிராய்டு செல்லினத்தில் ஏற்கனவே இருந்தாலும், ஐ.ஓ.எசின் பதிகையில் இப்போதுதான் இந்த வசதி இடம்பெறுகிறது.

தனிப்பட்ட சொற்பட்டியல்

செல்லினத்தோடு வரும் சொற்பட்டியலில், ஏற்கனவே ஐந்து இலட்சம் சொற்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இருந்தாலும், சில வட்டார வழக்கு சொற்களும், தமிழில் எழுதப்படும் எல்லாப் பிறமொழிப் பெயர்களும் இந்தப் பட்டியலில் இடம்பெற வாய்ப்பில்லை.

இவற்றைத் தவிர பயனர்கள் அவரவர் சொந்தப் பயன்பாட்டுச் சொற்களையும் செல்லினத்தில் சேர்க்க தொடர்ந்து விருப்பம் தெரிவித்து வந்துள்ளனர்.

இவற்றுக்கு விடையளிக்கும் வகையில், தனிப்பட்ட சொற்களைச் சேர்க்கும் வசதியை ஐ.ஒ.எசுக்கான புதிய செல்லினம் இன்று கொண்டு வருகிறது.

சொற்களும் சுருக்கங்களும்

தனிப்பட்ட சொற்பட்டியலில் விரும்பும் சொற்களைச் சேர்த்துவிட்டால் போதும். பொருத்தமான இடங்களில் அவைத் தோன்றுவதை உடனே காணலாம். சொற்கள் முழுமையான சொற்களாக இருத்தல் வேண்டும். இடையிடையே இடைவெளி இருப்பதை பட்டியல் ஏற்றுக்கொள்ளாது.

நீளமான சொற்களை விரைவாகத் தட்டெழுத சுருக்கங்களைப் பயன்படுத்தலாம் (short-cut). சுருக்கங்கள் பொருளற்ற சொற்களாகவும் இருக்கலாம். விரைவாகத் தட்டெழுத உதவினால் மட்டுமே போதும். பரிந்துரையிலும் சுருக்கங்கள் தோன்றா. சுருக்கங்களுக்கு பதில் அவற்றின் முழுமையான சொற்களே தோன்றும்.

பட்டியலில் சேர்க்கப்படும் சொற்கள் தமிழ் எழுத்துகளைக் கொண்டே எழுதப்பட்டிருக்கவேண்டும். ஆனால் சுருக்கங்கள் சேர்க்கப்பட்டால் முழுச்சொற்கள் வெவ்வேறு மொழிகளிலும் இருக்கலாம். இருந்தாலும், சுருக்கங்கள் தமிழ் எழுத்துகளை மட்டுமே கொண்டிருக்க வேண்டும்.

எடுத்துக்காட்டாக ‘ഓണാശംസകൾ’ என்று ஓணம் வாழ்த்துகளை மலையாளத்தில் செல்லினம் வழித் தட்டெழுத விரும்பினால், இந்தச் சொல்லை முழுச்சொல்லாக மலையாளத்திலேயே எழுதி, அதற்கான சுருக்கத்தை எதாவது தமிழ் எழுத்துகளைக் கொண்டு எழுதலாம். எ.கா. ‘ஓமலை’.

இவ்வாறு சேர்த்தால், ஓமலை என்று தட்டெழுதும்போது, ‘ഓണാശംസകൾ’ எனும் மலையாளச் சொல் பரிந்துரையில் தோன்றும். இதுபோன்றே வேறெந்த மொழிச் சொற்களையும், சீன மொழிச் சொற்கள் உட்பட, தமிழ்ச் சுருக்கத்தோடு தனிப்பட்டச் சொற்பட்டியலில் சேர்க்கலாம்.

ஆண்டிராய்டு செல்லினத்தில் தனிப்பட்ட சொற்பட்டியல்

மேற்குறிப்பிட்ட வசதிகள் அனைத்தும் ஆண்டிராய்டு செல்லினத்தில் இன்னும் சேர்க்கப்படவில்லை. இப்போதுள்ள தனிப்பட்ட சொற்பட்டியல் கூட சரிவர இயங்கவில்லை என்று சில ஆண்டிராய்டு பயனர்கள் கூறி வருகின்றனர். இதனை மேம்படுத்தும் முயற்சியில் தற்போது கடுமையாக ஈடுபட்டு வருகிறோம். விரைவில் புதிய பதிகை வெளிவரும்.

அஞ்சல் விசைமுகத்தில் உயிர் சுழற்சி

ஆண்டிராய்டு செல்லினத்திலும், முரசு அஞ்சலிலும் அஞ்சல் விசைமுகத்தைக் கொண்டு தட்டெழுதும்போது ‘உயிர் சுழற்சி’ எனும் வசதி உள்ளது. மெய்யெழுத்துகளுக்குப் பின் உயிர் எழுத்துகளைத் தட்டெழுதினால், அது உயிர்க்குறியீடாக மாறிவிடும்.

அதன்பின் வேறொரு உயிர் எழுத்தைத் தட்டினால், முந்த்தைய உயிர்க்குறியீடு மாற்றப்பட்டு புதிதாகத் தட்டப்பட்ட குறியீடு சேர்க்கப்பட்டுவிடும்.

எடுத்துக்காட்டாக: க் தட்டியபிறகு ஒ தட்டினால், கொ கிடைக்கும். தொடர்ந்து இ தட்டினால், கொ கி யாக மாறிவிடும். முந்தைய ஒ குறியீடு இ குறியீடாக மாறிவிடும்.

இந்த வசதியும் ஐபோனின் புதிய செல்லினத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. அஞ்சல் விசைமுகத்திற்கு மட்டுமே இது இயங்கும். இதன் முழு விவரத்தை இங்கே காணலாம்.

வழு நீக்கங்கள்

மேலுள்ள புதிய வசதிகள் மட்டுமல்லாமல், இரண்டு வழுக்கள் இந்தப் பதிகையில் நீக்கப்பட்டுள்ளன. ஐபோன் 14 புரோ, புரோ மேக்ஸ் கருவிகளில் செல்லினத்தின் விசைமுகம் தோன்றாமல் இருந்தது. இந்த வழு நீக்கப்பட்டுவிட்டது. இனி இந்தப் புதிய திறன்பேசிகளிலும் செல்லினம் சரிவர இயங்கும்.

சொல்வன் வாசிக்கும் தமிழ் வரிகளில், இடையே ஆங்கிலச் சொற்கள் இருந்தால் வாசிப்பதில் தடுமாற்றங்கள் இருந்தன. இந்த வழுவும் நீக்கப்பட்டுள்ளது.

புதிய பதிகையை இன்றுமுதல் ஐபோன் ஐப்பேட் கருவிகளில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம், அல்லது தற்போதைய பதிப்பை மேம்படுத்திக்கொள்ளலாம்.

தொடர்புடையவை:

  1. அஞ்சல் விசையமைப்பும் அதில் உள்ள புதிய வசதிகளும்.
Did you like this? Share it: