நவம்பர் 23ஆம் தேதி சென்னையில் டைப்டிஃபன் தொடக்க நிகழ்ச்சி நடந்தேறியது. எழுத்தின் வடிவங்களில் ஆர்வம் கொண்டோர் கலந்து கொண்டனர்.

அச்சிடப்பட்டப் பெயர்ப் பலகைகள் பரவலாகப் பயன்படுத்தப்படுவதற்கு முன்பு கைகளில் வரையப்பட்ட பெயர்ப் பலகைகள் புழக்கத்தில் இருந்தன. ஒவ்வொரு பெயர்ப்பலகையும் தனித்துவமான கலைத்தன்மையோடு வடிவமைக்கப்பட்டிருந்தன. இப்போதும் அவற்றைச் சில இடங்களில் காண முடியும். இவை தவிரச் சுவர்களில் வரையப்படும் விளம்பரங்களும் வாகனங்களில் எழுதப்படும் எழுத்துகளும் கலைஞர்களின் கைவண்ணத்தோடு உருவாகியிருப்பதைப் பல சந்தர்ப்பங்களில் நாம் பார்த்து ரசித்துவிட்டுக் கடந்து சென்றிருப்போம்.
மொழி என்பது பொதுவானது தான். ஆனால் நாம் சொல்லும் கருத்துகளுக்கு ஏற்ப தொனியை மாற்றிக்கொள்கிறோம் அல்லவா? அப்படித் தான் எழுத்துருக்களும். எல்லாவற்றுக்கும் ஒரே எழுத்துருவைப் பயன்படுத்த முடியாது. வெவ்வேறு செய்திகள் வெவ்வேறு வடிவங்களில் எழுதப்படும்போது வாசிப்பவர்களின் மனத்தில் அந்த சொற்கள் தங்கிவிடுகின்றன. புத்தகங்களுக்குக் கூட கண்களுக்கு உறுத்தாத சொற்கள் அச்சில் இருந்தால் தான் வாசிப்பவர்களுக்கு வசதி.
ஒவ்வொரு எழுத்துக்குமான இடைவெளி எப்படிக் கையாளப்பட்டிருக்கிறது? எழுத்துக்கு மேல் வைக்கப்படும் புள்ளியும் கொக்கியும் எவ்வாறு பயன்படுத்தப்பட்டிருக்கின்றன? சாய்வாக எழுதப்பட்டிருக்கும் எழுத்துகளில் இட நெருக்கடியை எப்படிக் கையாண்டிருக்கிறார்கள்? தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருக்கும் ஒரு பெயர்ப்பலகையில் இருக்கும் ஒற்றுமையும் வேற்றுமையும் என்ன? மொழியைத் தாண்டி எல்லாருக்கும் பொதுவான எண்களை எவ்வாறு கையாண்டிருக்கிறார்கள். இப்படி எழுத்துரு தொடர்பான பல்வேறு கேள்விகள் எழுகின்றன அல்லவா?
இந்தக் கேள்விகளுக்கான விடைகளைத் தேடும் ஒரு முயற்சியாக சென்னையில் கடந்த நவம்பர் 23ஆம் தேதி மிக முக்கியமான நிகழ்ச்சி ஒன்று நடந்து முடிந்தது. முடிந்தது என்பதை விடச் சிறப்பான தொடக்கமென இதனைக் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். எழுத்துருவாக்கத் துறையில் மிக முக்கியமான பங்காற்றிவரும் திரு. முத்து நெடுமாறன் வழிகாட்டுதலில் சிறிய குழுவொன்று வடசென்னையில் எம்.சி. சாலையில் காலைநேரத்தில் ஒன்றுகூடினர்.
அங்குள்ள சுவர்களிலும், கடைகளின் பெயர்ப் பலகையிலும் வாகனங்களிலும் எழுதப்பட்டிருக்கும் எழுத்து வடிவங்களைத் தேடிச் சென்றனர். தனித்தன்மையோடு எழுதப்பட்டிருக்கும் எழுத்துருக்களை இப்படித் தேடிச் சென்று பார்ப்பது பரவசமான அனுபவம். இந்தப் பயணத்துக்கு “எழுத்துலா” எனப் பெயர் வைத்திருந்தனர்.

இந்த எழுத்துலாவில் தாங்கள் கண்டுணர்ந்த அனுபவங்களை ஆர்வமுள்ளவர்களோடு பகிர்ந்துகொள்ள முடிவு செய்தனர். அதற்காக அன்று மாலை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் டைப்டிஃபின் (TypeTiffin) என்ற ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். தமிழ் எழுத்துருவாக்கத்தில் ஆர்வம் கொண்டவர்கள், எழுத்துருக்களின் அழகைப் பார்த்து ரசிப்பவர்கள் எனச் சுமார் எழுபது பேருக்கும் அதிகமானோர் கலந்துகொண்ட அந்த நிகழ்ச்சியில் எழுத்துலாவின் அனுபவங்களை அனைவரிடமும் பகிர்ந்துகொண்டனர். ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் சென்னையில் முதன்முதலாக முன்னெடுக்கப்பட்ட இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவு வழங்கி ஒருங்கிணைத்தது.
டைப்பிஃபின் நிகழ்ச்சிகள் சென்னைக்கும் தமிழுக்கும் மட்டுமானதல்ல. இந்தியா முழுவதும் அதற்கு வெளியிலும் பரவிப் பல மொழிகளின் எழுத்து முறைகளையும் அழகையும் அறியப்பயன்படும் நோக்கத்தோடு தொடங்கப்பட்டது. டைப் வாக் எனும் பெயரோடு அயல் நாடுகளில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இப்போது சென்னையில் தொடங்கியிருக்கும் இம்முயற்சி, இனி மெல்லப் பரவி மிகப்பெரிய இயக்கமாக மாறவேண்டும் என்ற நோக்கத்தில் முத்து நெடுமாறன், நாணா, ரஞ்சித், கோகிலா பாபு, ரோடா அலெக்ஸ் உள்ளிட்ட குழுவினர் தொடர்ந்து இயங்கி வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சி தொடர்பாக புதிய தலைமுறை தொலைக்காட்சி வெளியிட்ட செய்தியை இணைப்பில் பார்க்கலாம்.
அ.பாண்டியராஜன்
