தரம் முக்கியம் : கூகுள்

கூகுள் நிறுவனத்தின் 2025ஆம் ஆண்டுக்கான செயல்திட்டத்தில் ஜெமினி செயற்கை நுண்ணறிவுச் செயலி முக்கியத்துவம் பெறுகிறது.

Google Sundar Pichai

செயற்கை நுண்ணறிவு. தற்காலத்தில் இது நாம் அனைவரும் நாளில் ஒருமுறையாவது கேட்டுவிடும் சொல்லாகிவிட்டது. பள்ளிக்குழந்தைகளின் செயல்திட்டம் தொடங்கிப் பல வருடங்களுக்கு முன் இறந்த தந்தையை நேரில் கொண்டுவருவது வரை நம் வாழ்க்கை செயற்கை நுண்ணறிவு மயமாகிவருகிறது. அடுத்த கட்ட உலகின் இயக்கம் செயற்கை நுண்ணறிவின் மூலமே சாத்தியப்படும் என்பதை உணர்ந்த நிறுவனங்கள், தங்கள் பங்கிற்கு செயற்கை நுண்ணறிவு அரட்டைச் செயலிகளில் முதலீடுகளை அள்ளிக் கொட்டி வருகின்றனர்.

இந்த பந்தயத்தில் தாமதாக வந்தாலும் தகுதியை வளர்த்துக் கொண்டு வருவோம் என நுழைந்தது கூகுள் நிறுவனத்தின் ஜெமினி. இது கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் ஆறாம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. வந்த புதிதில் சர்ச்சைகளையும் சந்தித்தது. இந்நிலையில் ஜெமினியை மேம்படுத்தி பயனர்கள் மத்தியில் கொண்டு செல்வதுதான் நமது அடுத்த கட்ட இலக்கு என கூகுள் பணியாளர்களிடம் பேசியுள்ளார் கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சை.

புத்தாண்டையொட்டி சுந்தர் பிச்சை தம் ஊழியர்களுடன் உரையாடுவதாகக் கூறப்படும் ஒலிக்குறிப்பு ஒன்று செய்தி ஊடகங்களில் வெளியாகியுள்ளது. ‘வில்லிலிருந்து புறப்படும் அம்பு போல் இருக்க வேண்டும்’ என உத்வேகத்தை வாரி வழங்கியிருக்கிறார். “2025ஆம் ஆண்டு நமது நிறுவனத்திற்கு மிகவும் முக்கியமான ஓர் ஆண்டு. செயற்கை நுண்ணறிவு மற்றும் அது சார்ந்த துறைகளில் நமது பணியை அதிகரிக்க வேண்டும். இத்துறையில் போட்டி அதிகரித்து வருகிறது. மேலும் பல நிறுவனங்கள் ஒழுங்குமுறை விதிகள் தொடர்பான அழுத்தங்களையும் எதிர்கொண்டு வருகின்றன. இந்த சவால்களுக்கு நாம் அனைவரும் தயாராக இருக்க வேண்டும். இது நம்மைச் சீர்குலைக்கும் காலகட்டம் . 2025ஆம் ஆண்டில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் புதுவித நன்மைகளை உருவாக்குவதிலும், நமது பயனர்களின் சிக்கல்களைத் தீர்ப்பதிலும் நாம் இடைவிடாமல் கவனம் செலுத்த வேண்டும்.” என்று பேசியிருக்கிறார்.

கூகுள் நிறுவனர்களான லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகியோரின் கீழ் கூகுளின் ஆரம்ப நாட்களைப் பற்றியும் பேசியுள்ளார். கூகுள் ஊழியர்கள் மட்டுமின்றி நாம் அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டிய முக்கியமான அறிவுரையும் அதில் இருந்தது. “வரலாற்றில், நீங்கள் எப்பொழுதும் முதலாவதாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் நீங்கள் நன்றாகச் செயல்பட வேண்டும். தயாரிக்கும் பொருள் தரத்தில் சிறந்ததாக இருக்க வேண்டும். உலகம் முழுவதும் நாம் பல வித சோதனைகளை எதிர்கொள்கிறோம். ஆனால் அவற்றைக் கண்டு துவண்டுவிடக்கூடாது. வளர்ச்சியும் தேவையுமே சோதனைகளுக்குக் காரணம். நாம் சந்திக்கும் கட்டுப்பாடுகள் புதுவித படைப்புகளின் உருவாக்கத்திற்கு உதவிபுரிகின்றன.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேடுபொறி தொடர்பாக தனியுரிமை விதிகளை இறுக்கமாக்கி அமெரிக்க அரசாங்கம் முயற்சி எடுத்து வரும் நிலையில் சுந்தர் பிச்சையின் இந்த அடுத்தக் கட்ட நகர்வுகள் பலர் மத்தியிலும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளன.

-மு. இசக்கிமுத்து.

Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now