ஜெமினி : அச்சுறுத்தலும் ஆறுதலும்

உன்னை எப்படி என்னைக் காதலிக்க வைப்பதென்று நீயே சொல்லிக்கொடு என ஒரு திரைப்படத்தில் கதாநாயகியிடம் கேட்பான் நாயகன். அதைப்போல ஜெமினி செயற்கை நுண்ணறிவுச் செயலியிடம் அதன் கட்டுப்பாட்டைக் களவாட உதவி கேட்டிருக்கிறார்கள் பலர்.

GeminiAI

செயற்கை நுண்ணறிவு உரையாடல் செயலிகள் புகழ்வீச்சு பெறும் வேகம் அச்சமாகத்தான் இருக்கிறது. ஒழுங்காக வேலை சொல்லக் கற்றுக்கொண்டால் மட்டும் போதும், எல்லா வேலையும் அதுவே செய்துவிடுகிறது. உன்னை எப்படி ஒழுங்காக வேலைவாங்குவது என்று கேட்டால் அதையும் அரட்டைச் செயலியே கற்றுக்கொடுக்கிறது. தீய நோக்கங்களுடன் தொழில்நுட்பத்தைக் கையாள நினைப்பவர்கள் இதைத் தவறாகப் பயன்படுத்த முயல்கிறார்கள். இப்படிப்பட்ட முயற்சிகளை விரிவான அறிக்கையாக வெளியிட்டுள்ளது கூகுள்.

கூகுள் வழங்கும் மின்னஞ்சல், வலை உலாவி போன்ற பல்வேறு சேவைகளில் கூகுளுக்குத் தெரியாமல் கணக்கு உருவாக்குவது எப்படி, தகவல்களைத் திருடுவது எப்படி போன்ற கேள்விகள் ஜெமினியிடம் கேட்கப்பட்டுள்ளன. செயலிகள் உருவாக்கப்படும்போதே இப்படி நடக்கும் என்பதை யூகித்து அதைத் தடுக்கும் வழிமுறைகளுடன்தான் உருவாக்குவார்கள். அந்தத் தடையை உடைக்கும் (jailbreak) முயற்சிகளுக்கும் ஜெமினி உதவியைப் பலர் நாடியுள்ளனர்.

பொதுவில் இலவசமாகக் கிடைக்கும் நிரல்களைக் கொடுத்துத் தனக்கேற்றவகையில் தகவல் திருடும் மென்பொருளாகவோ, பணயத் தீநிரலாகவோ (ransomware or malware) எழுதித்தரக் கேட்டள்ளனர். சிலர், தங்களுடைய நிறுவனத்தின் விளம்பரத்துக்காக தவறான தகவல்களை இணையம் முழுவதும் இட்டு நிரப்ப உதவி கேட்டுள்ளனர். இக்கோரிகைகளை மறுத்துள்ளது ஜெமினி. காவலரிடம் பிடித்துக் கொடுத்துவிடுவேன் என்று மிரட்டினால் பலன் இருக்குமோ என்னவோ. ஆனால் காவலர்களை நிர்வகிக்கும் அரசாங்கத்துடன் தொடர்புடைய அமைப்புகளேகூட ஜெமினி செயலியைத் தவறாகப் பயன்படுத்த முனைகின்றன என்கிறது கூகுள்.

சில நாடுகளைப் பட்டியிலிட்டு அவர்களுடைய ஆதரவு அமைப்புகள் எப்படியெல்லாம் ஜெமினியிடம் ஆலோசனை கேட்கிறார்கள் எனப் புட்டு புட்டு வைத்துள்ளது கூகுள். ஆண்டிராய்டு திறன்பேசிகளில் உள்ள தொடர்பு எண்கள், குறுஞ்செய்திகளைக் களவாடும் நிரல்கள், நெட்வொர்க் வரம்புகள், ஏய்க்கும் நுட்பங்கள், சமூக ஊடகத்தில் குழப்பம் உண்டாக்கும் வழிகள், இப்படி இவர்களும் விவரமான கேள்விகளைக் கேட்டிருக்கிறார்கள். ஆய்வு, கல்வி நோக்கத்தில் இவ்வமைப்புகள் கேட்ட கேள்விகளும் உள்ளன.

அமைப்புகளைப் பொறுத்தளவில், தடைஉடைக்கும் முயற்சிகளை விட ஆய்வுகளுக்குத்தான் அதிக விண்ணப்பங்கள் வருகின்றனவாம். செயற்கை நுண்ணறிவுச் செயலி உருவாக்கும் நிறுவனங்கள், தீய நோக்கத்துடன் அணுகுவோரைத் தடுக்க முயல்கின்றன என்பதும் அதைப் பற்றிய விவரங்களைப் பொதுவெளியில் பகிர்கின்றன என்பதும் ஆறுதாலான செய்தி. எந்தெந்த நாடுகள் என்னவெல்லாம் கேட்டார்கள் என்பதை கூகுள் வலைப்பக்கத்தில் படித்துத் தெரிந்துகொள்ளலாம்.

Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now