வட்டத்துக்குள் தேடும் கூகுள்

திரையில் காணும் எதையும் வட்டமிட்டு, அதைப் பற்றித் தேடும், கூகுள் சர்க்கிள் டு சர்ச் என்கிற சுழித்துத் தேடும் வசதி கூகுள் லென்ஸ் செயலியுடன் போட்டியிடுகிறது.

வலையுலாவிக்குச் சென்று கூகுள் தேடுபொறியைக் கொண்டு தேடித் தெரிந்துகொண்ட பழக்கமெல்லாம் மெல்ல மெல்லக் காணாமல் போகிறது. பெரும்பாலானோர் அரட்டைச் செயலிகள் மூலமே தேடித் தெளிய ஆவல் காட்டுகின்றனர். நம்முடைய திறன்கருவித் திரையில் நாம் பார்க்கும் விஷயத்தைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள கூகுள் உதவியை நாடுவதென்றாலும் கூகுள் லென்ஸ் இருக்கிறது. கிட்டத்தட்ட அதைப் போன்றே செயல்படும் சர்க்கிள் டு சர்ச் எனப்படும் சுழித்துத் தேடும் வசதி கடந்த ஆண்டு அறிமுகமானது.

Circle to search

ஆரம்பத்தில் எதற்கு ஒன்று போலவே மற்றொன்று எனப் பயனர்கள் கேட்டனர். தற்போது சில பயனர்கள் இதில் உள்ள வசதிகள் கூகுள் லென்ஸ் செயலியைவிடச் சிறப்பாக இருப்பதாகத் தெரிவிக்கின்றனர். கூகுள் லென்ஸ் செயலி, திரையில் காணும் எதைப் பற்றியும் கூடுதல் தகவல்கள் தரும். படத்தில் எழுத்துகள் இருந்தால் வெட்டி எடுத்து ஒட்டிக் கொள்ளும் வகையில் மாற்றித் தரும். எழுத்தையே தேடுபொருளாகவும் மாற்றித் தேடலாம். படத்தைப் படமாகவே தேடவும் முடியும். சாலை ஓரத்தில் இருக்கும் பூ ஒன்றைப் படமெடுத்து என்ன பெயர் என்று அறியலாம். அறிவிப்புப் பலகையில் புரியாத மொழியில் இருந்தால் அதைப் படமெடுத்து நமக்குத் தெரியும் மொழியில் மாற்றிப் படிக்கலாம்.

இத்தனை வசதிகள் இருந்தும் ஒரு சிறிய குறை இருக்கிறது. இன்ஸ்டா, பேஸ்புக் போன்ற மற்ற செயலிகளில் எதையாவது பார்த்து அதைப் பற்றித் தேட விரும்பினால் அந்தத் திரையைப் படமெடுத்துக்கொண்டு போய் கூகுள் லென்ஸ் செயலியிடம் தரவேண்டும். கூகுள் பிக்சல் பயன்படுத்துபவர் எனில் கீழிருந்து மேல்நோக்கித் தேய்த்தாலே லென்ஸ் செயலி வரும். ஆனால் மற்ற ஆண்டிராய்டு திறன்பேசிகளில் அந்த வசதி கிடையாது.

இதில்தான் சுழித்துத் தேடும் வசதி லென்ஸ் செயலியை முந்திவிடுகிறது. இதில் படமெடுத்துக் கொண்டுபோய் கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை. எந்தச் செயலியில் என்ன செய்துகொண்டிருந்தாலும் தேடி அறிந்து கொள்ள நினைக்கும் இடத்தில் வட்டமிட்டால் போதும். விரைவுத் துலங்கல் குறியீடுகளை ஊடறியவும் முடியும். மொழிபெயர்த்துப் படிக்கவும் முடியும். திரையில் தெரிவது தொலைபேசி எண்ணாக இருந்தால் அதைத் தொட்டதும் தொலைபேசி செய்யும் வாய்ப்பையும் காண்பிக்கும்.

இப்போதைக்கு எல்லா ஆண்டிராய்டு திறன்பேசிகளிலும் இது வேலை செய்யும் விதத்தில் இல்லை. சாம்சங் திறன்பேசிகளில் மட்டுமே முதலில் அறிமுகமானாலும் தற்போது ஜியோமி, நத்திங், ஒன்பிளஸ், மோட்டரோலா போன்ற பல வகைத் திறன்பேசிகளிலும் வேலை செய்கிறது. கூகுள் பிக்சலில் வேலை செய்யும் என்பதைக் குறிப்பிடவேண்டிய அவசியமில்லையல்லவா. மற்ற பல திறன்பேசிகளிலும் விரைவில் அறிமுகமாகிவிடும். உங்கள் திறன்பேசியில் ஏற்கெனவே இருந்தால், சுழித்துத் தேடும் வசதியைப் பயன்படுத்திப் பாருங்கள். வட்டமிட்டுப் பாடல்களைத் தேடும் வசதியும் இருக்கிறது.

Download Murasu Anjal

Download Murasu Anjal

புதிய முரசு அஞ்சல் செயலியைப் பதிவிறக்கம் செய்து உடனே பயன்படுத்துக! Download the New Murasu Anjal and start using it for FREE!

Download Now