பேஸ்புக் தரும் இலவச இணையம்

ஒரே ஒரு சொடுக்கில் மெட்டா நிறுவனத்தின் இலவச அடிப்படை இணையச்சேவை (Free Basics) திட்டத்தை இந்தியாவின் டிராய் அமைப்பில் பணியாற்றும் இளநிலை அதிகாரி ஒருவர் தடுத்துள்ளார்.

facebook free basics

2016ல், பேஸ்புக் (இப்போது மெட்டா) இந்தியாவில் அடிப்படையான இணையச் சேவைகளை இலவசமாக அளிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த முயன்றது. ஒரு குறிப்பிட்ட செல்பேசி நிறுவனத்துடன் ஒப்பந்தம் இட்டுக்கொண்டு பயனர்களுக்கு இணைய சேவையைக் கொடுப்பார்கள். இணையத்தைக் கொண்டு அனைத்தையும் செய்ய இயலாது. அடிப்படை என்று சொல்வதன் மூலம் சில இணையதளங்களை மட்டும் பார்க்கும்படி வழி செய்வார்கள். செய்தி, உடல்நலம், வேலைவாய்ப்பு செய்திகள் போன்றவற்றை பயனர்கள் இந்த இணையசேவை மூலம் பெறமுடியும். மேலோட்டமாக இது நல்ல விஷயமாகத் தோன்றினாலும், இதன் நோக்கம், சில குறிப்பிட்ட இணையதளங்களை மட்டும் இலவசமாக அணுக வைக்க வேண்டும் என்பதாகும்.  இது இணைய நடுநிலைமை (Net Neutrality) கொள்கைக்கு எதிரானது என்பதால், கடுமையான எதிர்ப்பை சந்தித்தது.

இணைய நடுநிலைமை என்பது, அனைத்து இணையதளங்களுக்கும் சம உரிமை வழங்கும் கொள்கை. எந்த ஓர் இணையதளத்தையும் முன்னிலைப்படுத்தவோ, வேகமாக அணுகவோ செய்யக்கூடாது. உதாரணமாக, ஒரு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து, அதன் இணையதளத்துக்கு மட்டும் அதிக வேகத்தைக் கொடுத்தால், மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். இதை தடுப்பதே இணைய நடுநிலைமை விதிகளின் நோக்கம். இது, டிராய் (TRAI) என்று அழைக்கப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தால் அமல்படுத்தப்படுகிறது. இணைய நடுநிலைமை விதிகளை மீறுவதாக கருதி பேஸ்புக் ப்ரீ பேசிக்ஸ் திட்டத்தைத் தடை செய்தது டிராய். இதனால், இந்தியாவில் இணையத்தில் அனைத்து சேவைகளுக்கும் சமமான அணுகல்  உறுதி செய்யப்பட்டது.

இந்த இலவச அடிப்படை இணையச்சேவை திட்டத்தைப் பாதுகாக்க, பேஸ்புக் இந்தியாவில் ஒரு மிகப்பெரிய பரப்புரையை மேற்கொண்டது. 1.6 கோடி மின்னஞ்சல்களை டிராய்க்கு அனுப்ப பயனர்களை ஊக்குவித்தது. இந்த பரப்புரையால் டிராய்க்கு பயனாளர்களிடமிருந்து பெருமளவில் மின்னஞ்சல்கள் வந்தன. ஆனால் டிராய் அமைப்பில் பணியாற்றும் ஓர் இளநிலை அதிகாரி, பேஸ்புக்கில் இருந்து வரும் மின்னஞ்சல்களை ஒரே சொடுக்கில் (opt-out) முடக்கியதால், டிராய் அதனை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. இதனால், பேஸ்புக்கின் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தன.

பேஸ்புக் இணைய நடுநிலைமை கொள்கையை மாற்ற அரசியல் மற்றும் தொழில்நுட்ப ரீதியாக பல முயற்சிகளை எடுத்தது.

இருப்பினும், இலவச அடிப்படை இணையச்சேவை திட்டம் இந்தியாவில் முற்றிலும் தடைசெய்யப்பட்டது. இது மார்க் ஸக்கர்பெர்க் மற்றும் அவரது குழுவுக்குப் பின்னடைவு என்பதில் சந்தேகமில்லை. பெரும் நிறுவனங்கள் தங்கள் ஆதிக்கத்தால் எல்லாவற்றையும் சாதிக்கலாம் என்ற எண்ணத்தை மாற்றும்  விதமாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது. இந்நிகழ்வு, சாதாரண பணியில் இருக்கும் அதிகாரிகளும் பிரபலமான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு எதிராக நியாயமான முடிவுகளை எடுக்கக்கூடும் என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டாகிறது. பெருநிறுவனம், வேறு ஏதேனும் உத்தியுடன் வரும்வரைக்கும் இந்தத் தடை இருக்கும்.

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

Four Tamil word games, beautifully crafted for iPhone & iPad.

Download Now