விருந்துக் கொண்டாட்டங்களில் நேரடிப் பார்வையாளர்களுக்காக இசையைத் தேர்ந்தெடுத்து இயக்குவோர் (Disk Jackie) பயன்படுத்தும் வன்பொருள், மென்பொருள்களை ஆப்பிள் இசை செயலியோடு இணைத்து, புது இசைகளை உருவாக்கும் அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஆப்பிள் தன் பயனர்களுக்கு 100 மில்லியனுக்கும் அதிகமான இசைக் கோவைகளை வழங்கிவருகிறது. இசையமைப்பாளர்களுக்கு அதிகமான உரிமைத்தொகை வழங்கும் செயலி ஆப்பிள் மியூசிக் என்கிறார்கள். இவ்வாறு இசையமைப்பாளர்களை தன் பக்கம் வைத்திருக்கிறது ஆப்பிள்.
இதே போல டிஸ்க் ஜாக்கிகளையும், ஆப்பிளைப் பயன்படுத்தவைக்க வேண்டுமென 2022 முதலே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவர்களுக்காக 2022 ஆம் ஆண்டில், டிஜே மிக்ஸ் எனும் அம்சம் கொண்டுவரப்பட்டது. மேலும் பிரபல ஜெஃப் மில்ஸுடன் இணைந்து ஒன் மிக்ஸ் என்ற நிகழ்ச்சியைச் செய்தது ஆப்பிள். இவற்றின் தொடர்ச்சியாகப் பயனர்களையும், டிஸ்க் ஜாக்கிகளையும் இணைக்கும் வகையில் டிஜே கருவிகளை ஆப்பிள் இசையோடு இணைத்துப் பயன்படுத்தும் அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஆப்பிள் இசை செயலியின் நடனம், டிஜே பிரிவின் உலகளாவிய தலைவர் ஸ்டீபன் கேம்ப்பெல். அவர், இந்த அம்சத்தைப் பற்றிய அறிக்கையில் “இந்த புதிய ஒருங்கிணைப்பின் மூலம், பயனர்களின் மகிழ்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறோம். ஆப்பிள் இசை செயலியை முன்னணி டிஸ்க் ஜாக்கி மென்பொருள், வன்பொருள்களுடன் தடையின்றி இணைத்துள்ளோம். இந்த புதிய அம்சம் ஆப்பிள் இசை செயலியின் முழு ஆற்றலையும் பயனர்களுக்குக் கொண்டு சேர்க்க உள்ளது. இதன்மூலம் டிஸ்க் ஜாக்கிகள், சாதாரண பயனர்கள் யாராக இருந்தாலும் புது வித இசையை உருவாக்க முடியும்.” எனக் கூறியுள்ளார்.
இப்புதிய அம்சம், நீண்ட காலமாகப் பயன்பாட்டிலிருந்த டிஜே புரோ (Djay Pro) செயலியின் கொஞ்சம் மேம்பட்ட வடிவமாகும். ஆப்பிளின் மெய்நிகர் கருவியான விஷன் புரோவிலும் இந்த அம்சம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஏற்கனவே மருத்துவர்கள் மத்தியிலும் விஷன் புரோ பயனுள்ளதாக மாறிவரும் நிலையில், தற்போது டிஸ்க் ஜாக்கிகளையும் கவர உள்ளது.
ஆப்பிள் இசை செயலியானது முதற்கட்டமாகக் கீழ்க்கண்ட டிஸ்க் ஜாக்கி மென்பொருள் மற்றும் வன்பொருளுடன் தன் ஒத்துழைப்பை வழங்கவுள்ளது. ஆல்பா தீட்டா, செராடோ, இன் மியூசிக் இன்ஜின் டி.ஜே, டெனான் டி.ஜே, நுமார்க், ரானே டி.ஜே. இவைதான் அந்த வன்பொருள்கள். இந்த தொழில்முறை அமைப்புகள் எதுவும் இல்லாவிட்டாலும், ஆப்பிள் இசையின் சந்தாதாரர்கள் தாங்களே உருவாக்கிக்கொள்ளும் இசைகளைக் கேட்டு மகிழலாம்.
இதைப் பற்றி கருத்து தெரிவித்துள்ளார் அல்காரிதம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கரிம் மார்சி. “திறன்பேசி, கணினி, விஷன் புரோ போன்ற கருவிகளில், ஆப்பிள் இசையுடனான டிஜேவின் ஒருங்கிணைப்பு புதிய உலகை உருவாக்கியுள்ளது. இனிமேல் எந்த நேரத்திலும், எங்கும் வேண்டுமென்றாலும் புது இசையை உருவாக்கலாம். தங்களுக்குப் பிடித்த இசைகளைக் கலந்து புது விதமாக உருவாக்கிக்கொள்ளலாம். தானாக புது இசையை உருவாக்கும் தானியங்கி அம்சத்தைப் பயன்படுத்தினாலும் சரி. அல்லது டிஸ்க் ஜாக்கிகளின் சக்திவாய்ந்த கருவிகள் மூலம் தங்களின் தனித்துவமான இசையை வடிவமைத்தாலும் சரி. இசையின் உருவாக்கத்தை அனைவரும் அணுகக்கூடியதாக மாற்றுவதில் இந்த ஒருங்கிணைப்பு ஒரு முக்கியமான மைல்கல்லாக இருக்கிறது.” என உற்சாகமாகப் பேசியிருக்கிறார் மார்சி.
ஒவ்வொரு நண்பர் குழுவிற்கும் ஒரு குட்டி டிஸ்க் ஜாக்கி நிச்சயம் இருப்பார். அவரிடம் இதைப் பற்றிக் கூறி அவரின் பணியை எளிமையாக்குங்கள்.
- மு.இசக்கிமுத்து
