சென்னையில் எழுத்துருப் பயிலரங்கம்

ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் முன்னெடுப்பில், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், மே 16 மற்றும் 17ஆம் தேதிகளில் தமிழ் எழுத்துருப் பயிலரங்கமும் கருத்தரங்கமும் நடக்கவுள்ளன.

Tamil Font Studio

ரோஜா முத்தையா நூலகம், ஒண்மை அறவாரியத்தின் ஆதரவில், தமிழ் எழுத்துருக்களை உருவாக்குவதற்கென்றே கடந்தாண்டு ஓர் அமைப்பை ஏற்படுத்தியது. அதன் திறப்பு விழாவுடன் எழுத்துரு உருவாக்கப் பயிற்சியும் வழங்கப்பட்டது. இந்தியாவில் எழுத்துருத் துறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலும் இயக்கமாக இத்துறை ஆர்வலர்களுடன் சேர்ந்து பயணம் செய்யும் வகையிலும் எழுத்துலா நடத்தப்பட்டதும் நினைவுகூரத்தக்கது.

இதன் தொடர்ச்சியாக இவ்வாண்டு மீண்டும் ஒரு பயிற்சிப் பட்டறையை நடத்துகிறது ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம். இரு நாள் நிகழ்வில் ஒரு நாள் எழுத்துரு உருவாக்கப் பயிற்சியும் மறுநாள் எழுத்துரு பற்றிய கருத்தரங்கமும் திட்டமிடப்பட்டுள்ளன.

மே 16ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறும் பயிலரங்கில் தமிழ் எழுத்துரு உருவாக்கும் வழிகளைப் படிப்படியாகக் கற்பிக்க உள்ளனர் வல்லுநர்கள். தமிழ் எழுத்துரு வல்லுநரும், முரசு அஞ்சல், செல்லினம் நிறுவனருமான முத்து நெடுமாறன் இப்பயிற்சியை வழங்குகிறார். மேக் கணினியுடன் கொஞ்சம் படைப்பாற்றலும் இருந்தால் போதும். ஆர்வமும் இருப்போர் பதிவு செய்துகொள்ளலாம். தனிக் கவனம் எடுத்துச் சொல்லிக் கொடுக்கப்போவதால் குறைந்த எண்ணிக்கையிலான நபர்களுக்கு மட்டுமே இடம். மேலும் அன்றைக்கு, “வாழும் வரிவடிவம் : எழுத்துருவியல் நுட்பத்தின் முன்னனியில் தமிழ்” என்ற தலைப்பில் முத்து நெடுமாறன் உரையாற்றுகிறார்.

மே, 17ஆம் தேதி சனிக்கிழமை நிகழ்வு தமிழ் ஆர்வலர்கள் அனைவருக்குமானது. இத்துறையில் தற்போதுள்ள முன்னேற்றம், சவால்கள், எதிர்காலத் தேவைகள், வாய்ப்புகள் குறித்துப் பேசவிருக்கிறார்கள். “தமிழ் வரிவடிவம் : தொன்மையின் தொடர்ச்சி” என்ற தலைப்பில் ஓய்வுபெற்ற இந்தியக் குடிமைப்பணி அதிகாரி ஆர். பாலகிருஷ்ணனும், ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத் தலைவர் சுந்தர் கணேசனும் உரையாற்றவுள்ளனர். காலிகிராபி பற்றி பேராசிரியர் ஜி.வி. ஸ்ரீகுமார் உரை வழங்கவுள்ளார்.

இதோடு முடியவில்லை. விருந்து முடியும்போது வழங்கும் பாயாசம் மாதிரி, இதே நாளில் “பொன்மாலைப் பொழுது” நிகழ்ச்சியை அண்ணா நூற்றாண்டு நூலகம் ஏற்பாடு செய்துள்ளது. நூலகத்தின் தரைத்தளத்தில் உள்ள கருத்தரங்கக் கூடத்தில் மே 17ஆம் தேதி, மாலை ஆறு மணியளவில் இந்நிகழ்ச்சி தொடங்கும். “எழுத்துருவும் கதை சொல்லும்” என்கிற தலைப்பில் முத்து நெடுமாறன் பேசவிருக்கிறார்.

16ஆம் தேதி பயிலரங்கத்துக்கு முன்பதிவு செய்வது அவசியம். 17ஆம் தேதி நிகழ்ச்சியில் அனைவரும் முன்பதிவின்றி கலந்துகொள்ளலாம்.

முன்பதிவுக்கு விரைக.

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

சொல்வளம் - தமிழில் விளையாடுவோம் · இன்புறுவோம்

Four Tamil word games, beautifully crafted for iPhone & iPad.

Download Now